Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”கேட்டுக்க.... உங்க பரம்பரைக்கே சர்க்கரை வியாதி அண்டாது!”- சதுரங்க வேட்டையில் பேலியோ டயட்

மேலே இருக்கும் விளம்பரம் வாட்ஸ்-அப்பிலும், பேஸ்புக்கில் உள்ள குரூப்களிலும் தென்பட்டது. இது போல வாட்ஸ்அப் விளம்பரங்கள் டெய்லி நாலு  வந்தாலும் ஊரே பயப்படும் டயபட்டீசை பார்த்து பயப்படாமல் "சர்க்கரை வியாதியை துரத்தி அடிப்போம் -உடல் பருமனை விரட்டி அடிப்போம்" என்கிற சவுண்டு கொஞ்சம் ஓவராகவே நமக்கு பட்டது. தமிழகத்தின் முதல்வர் முதற்கொண்டு சாதாரண குடிமகன் வரை சர்க்கரை நோய் பாதிப்பு என்பது பரவலாக காணப்படுகிறது. அதேபோல்தான் உடல்பருமன் மற்றும் ரத்தகொதிப்பும். இந்நிலையில் இப்படி ஒரு விளம்பரத்தை பார்க்கவும் மேற்படி எண்ணிற்கு  சர்க்கரை பாதிப்பு உள்ளவரை போல தொடர்பு கொண்டு பேசினோம்.

போனை எடுத்தவர் டாக்டர் மாதிரியே பேசினார். 

"A1சி டெஸ்ட் எடுத்திருக்கிங்களா? இதுவரைக்கு எடுக்கலைன்னா உடனே அதை எடுத்துடுங்க.. "சர்க்கரை எவ்வளவு இருக்கு..."

வாயில் வந்ததை சொன்னோம்

"கொஞ்சம் அதிகம் தான்" என வருத்தப்பட்டுக்கொண்டார். பின்னர் வெயிட் இத்யாதிகளின் விசாரணையில் இறங்கினார். 

அதன் பின்னர் "இது என்ன மருந்து" என்று கேட்டவுடன்  

"சார் இது மருந்தே இல்ல.சாப்பாடுதான் நான் சொல்லுறதை சாப்பிட்டா அப்படியே மடமடவென சுகர் லெவல் குறைஞ்சுடும்.  120-130-ன்னு சுகர் லெவல் பார்க்கும் போது உங்களுக்கு ஆனந்த கண்ணீரே வந்துடும்” -ஹைப் ஏத்தினார். 

"சார் நேர்ல வரலாமா?"

"தாராளமா வரலாம். தௌசன் ரூபிஸ் பீஸ் கொண்டு வந்துடுங்க." என்றவர்

 
"சுகர் உங்களுக்கு மட்டுமில்ல உங்க பிள்ளை பிள்ளையோட பிள்ளை, உங்க பரம்பரைல யாருக்குமே அண்டாது"  என உறுதியளித்தார். 

 

 நேரில் போன போது  நமது நம்பரை 'பிரஸ்' என  'ட்ரு காலர்' (ட்ரூ காலர் என்பது மொபைல் ஆப். அதை வைத்துள்ள மற்றவரை அதில் அடையாளம் காணமுடியும்)  மூலம் கண்டுபிடித்திருந்தார்.  எனவே உஷாராக பேச ஆரம்பித்தார். போனில் அப்படி  பேசியவரா என குழப்பம் ஆகிவிட்டது. மூலிகை பொடி டப்பா ஒன்றை காட்டி "இதுதாங்க நான் சொன்ன மருந்து" என்றார். "இந்த மூலிகை பொடி மட்டும் சாப்பிட்டால் போதுமா?" என கேட்டதற்கு " கார்போஹட்ரேட் குறைவாகவும் கொழுப்பு அதிகமாக சாப்பிட வேண்டும்" என சொன்னார். "சர்க்கரைக்கு கொழுப்பா?" என நாம் ஜெர்க்காகவும் ஒரு தெய்வீக சிரிப்பு சிரித்துவிட்டு "ஆமாங்க ஆட்டுக்கொழுப்பு நிறைய போட்டு கறி வறுத்து சாப்பிடுங்க, மூணு வேளையும் சாப்பிடுங்க மதியம் வேணும்னா இட்லி,தோசை,சாதம் சேர்த்துக்குங்க" என்றார். "நீங்கதான் மருந்தே கிடையாது'ன்னு சொன்னீங்க"ன்னு கேட்கவும் 'அது இது' என உருட்ட ஆரம்பித்தார். சரி ரொம்ப தம் கட்ட வேண்டாம் என பை சொல்லிவிட்டு வந்தோம்    

உண்மையில் அவர் பணம் வாங்கிக்கொண்டு சர்க்கரை நோய்க்கு தீர்வு என  சொல்லி வருவது பேலியோ டயட், ஆனால் தவறான, ஆபத்தான வழிமுறையில் அதை பயன்படுத்த சொல்கிறார். வெறும் 1000 ரூபாய்க்காக உயிருக்கு ஆபத்தான முறையில் 'பேலியோ டயட்டில் உண்ணக்கூடாது' என்று சொல்லப்பட்டுள்ள அரிசி சாதம்,இட்லி,தோசை ஆகிவற்றையும் சேர்த்து பரிந்துரைத்து வருகிறார். அவர் சொல்லியபடி பின்பற்றுவோர்களுக்கு ஆரம்பத்தில் சில முன்னேற்றங்கள் தெரியலாம். ஆனால் மருத்துவர்களோ டயட்டீஷியன்களோ ஆலோசகராக இல்லாத நிலையில் உயிருக்கு ஆபத்தானது. 

முன்று வருடங்களுக்கு முன்பாக தற்போது அமெரிக்காவில் வசிக்கும் கோவையை சேர்ந்த செல்வன் என்கிற நியாண்டர் செல்வன் அவரது நண்பர்களுடன்  ஆரோக்கியம்&நல்வாழ்வு என்கிற பேஸ்புக் குழுவைதொடங்கினார். அதில் தான் சர்க்கரை நோயை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவந்த வழிமுறையை மற்றவர்களுக்கு பகிர்ந்தார். அதாவது 'பேலியோ டயட்'  என்று சொல்லக்கூடிய ஆதிகுகைவாசிகளின் உணவுகளை சாப்பிடும் வழிமுறை. 

சிறுக சிறுக செல்வன் பரிந்துரைத்த டயட் சார்ட்களை பயன்படுத்தி அதன் மூலம் நலம் பெற்ற கூட்டம் அதிகமாகியது. சர்க்கரை மட்டுமல்லாது, ரத்த கொதிப்பு , ஒபிசிட்டி என்கிற அதிக எடை போன்ற பிரச்சினைகளுக்கும் இது பெரியதொரு தீர்வாக அமைந்துள்ளதாக இந்த டயட்டை பின்பற்றுபவர்கள் கூறுகின்றனர். இன்று லட்சக்கணக்கானவர்கள் இந்த உணவுமுறை பேஸ்புக் குழுமத்தில் இணைந்து அங்குள்ள 100க்கும் அதிகமான அலோபதி மருத்துவர்கள் மற்றும் டயட்டீசியன்களின் ஆலோசனை பெற்று பின்பற்றி வருகிறார்கள். ஆனால் ஆரோக்கியம்&நல்வாழ்வு குழுமத்தில் முதலில் தங்களின் ரத்த பரிசோதனை முடிவுகளை பதிவு செய்யவேண்டும். அதன் பின்னரே அவர்களுக்கான டயட்டை சொல்கின்றனர். 

இது போன்ற லோ கார்ப் - ஹை ப்ரோடீன் வகையிலான உணவு முறை என்பது மேற்கு நாடுகளில் நிறைய உண்டு. கீட்டோஜெனிக், மெடிட்ரேனியன், பேலியோ, LCHF (லோ கார்ப் - ஹை ஃபேட்) அட்கின்ஸ் ஆகியவற்றை அதில் முக்கியமான டயட்களாக சொல்லலாம். எந்த டயட் எடுத்தாலும் "சப்ஜெக்ட் டூ தி மார்க்கெட் ரிஸ்க் டிஸ்க்ளைமர்" உண்டு. அதனாலதான் ஆரோக்கியம்&நல்வாழ்வு குழுவில் டயட் ஆரம்பிக்கும் முன் ப்ளட் டெஸ்ட் ரிசல்ட் சரக்கரை பாதிப்பு உள்ளவர்களாக இருந்தால் டயட் கடைபிடிக்க தொடங்கிய சில நாட்களில் மாற்றம் தெரியவில்லை என்றால் டயட்டை நிறுத்த சொல்கின்றனர். இந்த சேலம் ஜெயராமன் மாதிரி பெயர் தெரியாத பலர் இந்த டயட்டை பற்றி அரைகுறையாக தெரிந்து கொண்டு "அரை வைத்தியன் " ஆகலாம் என்கிற முயற்சியில் இருக்கிறார்கள். 

இது குறித்து அந்த குழுவில் ஆலோசனைகள் வழங்கி வரும் ஈரோட்டை சேர்ந்த குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் .அருண்குமார் அவர்களிடம் கேட்ட போது "இது போன்ற ஆட்கள் நம் ஊரில் திடீரென உருவாகுவது சகஜம்தான். எனக்கு தெரிய எங்கள் பகுதியிலேயே இரண்டு நபர்கள் இப்படி வைத்தியம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்களாம். மேலை நாடுகளில் இது போன்ற டயட்களை அறிமுகப்படுத்தும் போது அது குறித்து முழு அறிவியல் விளக்கங்களோடு புத்தங்கங்களை வெளியிடுவார்கள். அதன் சாதக பாதகம் அனைத்தும் அதில் இருக்கும். மக்களும் அதை முழுமையாக படித்து புரிந்து கொண்ட பின்னரே அதில் விருப்பம் ஏற்பட்டால் மாறுவார்கள். 
நம் ஊரில் எதுவுமே உடனடியாக சரியாகிவிடவேண்டும் என எண்ணுகிறார்கள். அந்த எண்ணத்தை இப்படியான ஆட்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எங்கள் குழுவிலேயே கூட சிலர் டயட் குறித்த விளக்கமெல்லாம் வேண்டாம் என்ன சாப்பிட வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள் போதும் என்கின்றனர். இதில் நன்கு படித்தவர்களும் அடக்கம். இந்த உணவுமுறை 100க்கு 80 பேருக்கு பெரிய தொந்தரவு செய்யாது என்பதை இவர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆனால் மீதி 20 சதவிகிதம் பேருக்கு பெரிய பிரச்சினைகளை உண்டாக்கும். நம்மூரில் போலி டாக்டர்களையே இன்னும் ஒழிக்க முடியவில்லை. கிராமங்களில் நாலில் இரண்டு பேர் போலி மருத்துவர்களாகவும், 10 வரை மட்டுமே படித்த கம்பௌன்டர்களே மருத்துவம் பார்க்கவும் வேலை செய்கிறார்கள். மக்கள் சரியாக புரிந்து கொண்டு இந்த உணவு முறையை ஏற்க வேண்டும். தேவைப்பட்டால் எங்கள் குழுவில் ஆலோசனைகளை பெறலாம்" என்றார். 
இதே உணவுமுறையை ஆதரிக்கும் "காட்டாறு" இதழின் ஆசிரியர் தாமரைக்கண்ணன் கூறும்போது  " பணம் வாங்கிக்கொண்டு மருத்துவ ஆலோசனை சொல்வது மட்டுமல்ல,  பணம் வாங்காமல்கூட இயற்கை வைத்தியம் அது இது என சிலபேர் எந்தவித வழிகாட்டுதலும், முறையான பயிற்சியும் , அறிவியல் புரிதலும் இல்லாமல் கூட மக்களுக்கு  மருத்துவ ஆலோசனை சொல்லி வருகின்றனர். அதுவுமே தவறுதான்.  உணவு முறையை நட்புக்குழுக்களில் பகிர்ந்துகொள்ளுதல்,அதன் பயன்களை தெளிவுபடுத்தல் என்பது வேறு அதை நோய் தீர்க்கும் மாற்று மருத்துவமாக முன்வைப்பது வேறு. நோய் தீருமென்றால் அதை முறையாக படித்த டாக்டர்களே சொல்ல வேண்டும். 
உணவுமுறையைக்கூட முறையான பயிற்சியோ, அனுபவமோ இன்றி பணம் வாங்கிக்கொண்டோ இல்லாமலோ பரிந்துரைப்பது தவறு. தற்போது சர்க்கரை, ரத்தகொதிப்பு போன்ற நோய்கள் இந்தியாவில் மிக அதிகமாக இருப்பதால் கீட்டோ,அட்கின்ஸ், பேலியோ,எல்சிஹெச்சி போன்ற டயட்கள் பிரபலமாகி வருகின்றன நிறைய மக்கள் பின்பற்ற துவங்கியுள்ளனர். இந்த நேரத்தில் இந்திய மருத்துவ சம்மேளனம் இப்படியான டயட்களின் நன்மை தீமைகள் குறித்து முறையான அறிவிப்பு ஒன்றை வெளியிடவேண்டும். இதில் எதில் சரி, யாரெல்லாம் இதை பின்பற்றலாம், யார் பின்பற்றக்கூடாது என  அவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். ஒருவேளை அவர்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் ஆர்வம் இல்லையென்றால் கூட தமிழக அளவில் சமூகநீதிக்கான மருத்துவர் சங்கம் அந்தப்பணியினை செய்யலாம். அதில் உள்ள டாக்டர் ரவீந்தரநாத், எழிலன் போன்றவர்களாவது இந்த பணியினை தமிழ்நாட்டு மக்களுக்காக செய்யலாம். 5000 ரூபாய் கொடுத்தால் சர்க்கரை இல்லாமல் செய்கிறேன் என 'ஹீலர் பாஸ்கர்' போன்றவர்கள் விளம்பரம் செய்கிறார்கள்.

டயபட்டிஸ்,ஒபிசிட்டி,கொலஸ்ட்ரால் என்கிற இந்த மூன்றை வைத்து கல்லாகட்டும் பேர்வழிகள் நிறைந்துவிட்டனர். இதை  உடனடியாக தடுக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கும் இருக்கிறது. மற்றொரு பக்கம் சமூகப்பொறுப்பு உள்ள மருத்துவர்களுக்கு இருக்கிறது.  அலோபதி தாண்டி இன்னொரு மருத்துவமான ஆயுர்வேதத்திற்கு ஆயுஷ் என்கிற அமைப்பு உள்ளது போல கொழுப்பு உணவுமுறைக்கும் அரசே ஆலோசனைக்குழு அமைக்கவேண்டும். ஒரு முகநூல் குழுவிலேயே ஒரு லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்றால் அது பல லட்சம் பேரை சென்றடைந்திருக்கும் என்பதே உண்மை. எனவே அரசாங்கம் இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தாலே இது போன்ற போலி மருத்துவர்கள் குறைவார்கள்" என்றார்.

கண்ணுக்கு தெரிந்து இப்படியான 'திடீர் நோய் மீட்பர்கள்' உருவாகும் போதே  அரசோ அதன் நிறுவனங்களோ இதில் கவனம் செலுத்த வேண்டும்.  ஈமு கோழி போன்ற மோசடிகளில் பணம்தான் போகும் ஆனால் இதில் உயிருக்கே ஆபத்திருக்கிறது.  

-வரவனை செந்தில் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close