Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொஞ்சம் சிரிங்க பாஸ்!  

சமீபத்தில் யூடியூப் லிங்க்கில் ஒரு காட்சியைப் பார்த்தேன். மும்பையில் உள்ள ஒரு கார்ப்பரேட் ஆபீஸ் அது. காலையில் ஆபீஸுக்கு  வந்ததும், அந்த அலுவலகத்தில் பணிபுரிகிறவர்களின் முதல் வேலை, ஃபைல்களில் கையெழுத்துப் போடுவது அல்ல. எல்லோரும் அவரவர்களின் இருக்கையிலிருந்து எழுந்து, ஐந்து நிமிடங்கள் நடனமாட வேண்டும். ஆபீஸ் வளாகத்தில் இருக்கும் ஸ்பீக்கரில் ஒலிக்கும் ‘ஒய் திஸ் கொலைவெறி’  போன்ற பாடலுக்கு எழுந்து நின்று நடனமாடுகிறார்கள். அதன் பிறகுதான், தங்களின் அன்றாட வேலையைத் தொடங்குகிறார்கள். அலுவலகம் வருவதற்குள் நீண்ட பயணத்தின் களைப்பு, அலுவலகத்தில் சேர்ந்திருக்கும் பணிகள், சொந்தப் பிரச்னைகள் எனப் பலவற்றாலும் ஏற்படும் மனஉளைச்சலில் இருந்து விடுபட்டுத் தங்களின் பணியைச் சிறப்பாகச் செய்வதற்குத்தான் இந்த ஏற்பாடு. இயல்பாக இருப்பதுகூட, இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் ஒரு வேலையாகவே போய்விட்டது.

நகரமயமாக்கலை நோக்கிப் புலம்பெயர்ந்த வாழ்க்கை முறை, நுகர்வுக் கலாசாரம், மிக்ஸி தொடங்கி வீடு வரை கடனில் பெற்ற தவணைமுறை வாழ்க்கை, கூட்டுக் குடும்ப வாழ்க்கை தொலைந்துபோனது, தனிக்குடித்தனத்தின் சுமை, வேலைப் பளு என நவீன வாழ்க்கையின் அவஸ்தை நம் முன்னோர்களின் அவஸ்தையில் இருந்து மாறுபட்டது. பலருக்கு ஆறுதலாகப் பேச ஆளே இல்லை. போதைப் பொருட்களில் மூழ்கி உடலையும் மனதையும் சிதைத்துக்கொள்கிறார்கள். நல்ல கதைகளை, காட்சிகளை ரசிக்கத் தவறிவிட்டோம். நல்ல ஜோக்குகளுக்குச் சிரிக்க மறந்துவிட்டோம். எதையுமே சீரியஸாகப் பார்க்கிறோம். எல்லோரையும் ஏதோ ஒருவித கடுப்புடனே அணுகுகிறோம். நாமும் சிரிப்பது இல்லை; மற்றவர்களையும் சிரிக்கவைப்பது இல்லை. 

‘நகைச்சுவைகள் அநாதை ஆவதில்லை’ என்று அடிக்கடி சொல்வார் பட்டிமன்றப் பேச்சாளரான கண.சித்சபேசன். ஆனால், இன்றைக்கு நகைச்சுவையும் நகைச்சுவை உணர்வும் அநாதைகளாகிவிட்டன. பலர் அரிதாகப் புன்னகைப்பதே வடிவேலுவின் நகைச்சுவையை அரசியலுடன் பொருத்தி வரும் மீம்ஸுகளைப் பார்த்துத்தான். மற்றபடி, அவ்வப்போது வரும், ‘அந்தக் காலம் போல் இந்தக் காலம் இல்லை’ எனக் கிட்டிப்புள், டயர் வண்டி, கோலிக் குண்டு விளையாட்டு என வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பகிர்வுகளைப் பார்த்து, ஒரு மோனச்சிரிப்பு... அவ்வளவுதான்!

 

உண்மையில், சிரிப்புதான் மனித சமூகத்துக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய சொத்து. அன்பின் தொடக்கப் புள்ளி ஒரு புன்னகையில்தான் ஆரம்பிக்கிறது. சிரிக்கத் தெரிந்த ஒரே மிருகம், மனிதன்தான். சிரிப்பில்தான் சாதி கிடையாது, மதம் கிடையாது, மொழி கிடையாது. ‘நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாவிட்டால், நான் என்றைக்கோ தற்கொலை செய்துகொண்டிருப்பேன்’ என்று தேசப்பிதா காந்தியடிகள் சொன்னதையும் இங்கே நினைவுகூர்வது அவசியம்.
 
வார்த்தைகளற்ற மொழிகளான அன்பு, மௌனம், காதல் என்று நீளும் பட்டியலில் சிரிப்புக்கும் சிறப்பான ஓர் இடம் உண்டு. சிரிப்பின் அருமையை மனிதன் உணராமல் இல்லை. அப்படி ஓரளவாவது உணர்ந்திருப்பதால்தான், நகைச்சுவைக்கென பிரத்யேகத் தொலைக்காட்சிகள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. ஆனால், நாம் நமக்குள்ளாக ஏதோ ஒரு காமெடி காட்சியைப் பார்த்து, உள்ளுக்குள் ரசித்து, சிரித்துக்கொண்டு போகிறோமே தவிர, முன்பு போல் சக அலுவலக நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசி, சிரித்து மகிழ்வது இல்லை.

மேலை நாட்டில் ஒரு கதை உண்டு. மிகப்பெரும் செல்வந்தர் ஒருவர், தினமும் தான் செல்லும் வழியில் உள்ள பொக்கே கடை ஒன்றில் தன் அலுவலக மேசையில் வைப்பதற்காக மலர்க்கொத்துக்களை வாங்கிச்செல்வார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணத்தில் அழகழகான மலர்கள்  அங்கே விற்பனைக்குக் கிடைக்கும். தினமும் அவற்றை வாங்கிச் செல்ல ஏராளமானோர் அங்கே காத்திருப்பார்கள். ‘இத்தனை பரபரப்பாக விற்பனை நடக்கும்போது, இதன் முதலாளி இதே போல் நகரில் இன்னும் பல கிளைகளைத் திறந்திருக்கலாமே, ஏன் செய்யவில்லை’ என்று செல்வந்தருக்கு ஒரே ஆச்சர்யம். 

தன் சந்தேகத்தை அந்தக் கடையின் முதலாளியிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பி, ‘உங்கள் முதலாளி எங்கே?’ என்று  விற்பனையாளரிடம் கேட்டார். “அவர் பக்கத்தில் உள்ள விளையாட்டுத்திடலிலோ, கிளப்பிலோ இருப்பார்” என்று பதில் வரவும், அவரைத் தேடிச் சென்று சந்தித்தார் செல்வந்தர். அவரிடம், “நீங்கள் இப்படிப் பொறுப்பில்லாமல் காலையிலேயே ஜாலியாக இங்கே வந்து விளையாடிக்கொண்டிருக்கிறீர்களே... இதற்குப் பதிலாக நகரில் இன்னும் பல கிளைகளைத் திறந்திருந்தால், லட்சக்கணக்கில் பணம் ஈட்டலாமே?” என்று கேட்டார். 

 

“சரி, அவ்வளவு  பணத்தை ஈட்டிய பிறகு, என்ன செய்வது?” என்றார் அவர். “என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? ஜாலியாக விளையாடலாம், சுற்றுலாக்கள் செல்லலாம், கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழலாம்...” என்றார் செல்வந்தர். “நான் இப்போதே அப்படித்தானே இருக்கிறேன்” என்று சொல்லிச் சிரித்தார் பொக்கே கடை முதலாளி.

இதில் இருக்கும் ஓர் உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கைக்குப் பணம் தேவைதான்; பணமே வாழ்க்கை ஆகிவிடாது. பணத்தைத் துரத்துவதே வேலை என்று நம் வாழ்க்கையை அதிலேயே தொலைத்தால், பின்பு வாழ்க்கையை ரசிக்கவும், சந்தோஷங்களை அனுபவிக்கவும், மகிழ்ந்து சிரிக்கவும் நமக்கு நேரமே கிடைக்காது போய்விடும். எனவே, மனம் விட்டுச் சிரியுங்கள். தேவையற்ற டென்ஷன், மனஉளைச்சல்களில் இருந்து உங்களால் சுலபமாக மீள முடியும். எப்போதும் கடந்த கால தோல்விகளையே மனதில் அசைபோட்டு வருந்துவது, அல்லது எதிர்காலத்தை எண்ணி பயப்படுவது என  முகத்தை சதா காலமும் இறுக்கமாகவே வைத்திருந்தால் எப்படி?

இந்தப் பிரச்னை வீட்டிலேயே தொடங்கிவிடுகிறது. நாம் சமூக வலைதளங்களில், மனைவி தொலைக்காட்சி சீரியல்களில், மகள் செல்போனில், மகன் கம்ப்யூட்டர் கேம்ஸில் என ஒவ்வொருவரும் தனித்தனித் தீவுகளாக நம்மைச் சுருக்கிக்கொண்டால் இப்படித்தான் ஆகும். எனவே, வீட்டிலிருந்தே தொடங்குங்கள். மனம்விட்டுப் பேசுங்கள். ஜோக்குகள் சொல்லி மகிழுங்கள். விடுகதைகள், புதிர்கள் போட்டு விளையாடுங்கள். நண்பர்கள், சக தோழர்கள் என அனைவருடனும் ஜாலியாகச் சிரித்துப் பேசி மகிழுங்கள். அன்புமயமான உலகை உருவாக்குங்கள். நாளைக்கெனத் தள்ளிப்போடாமல் இந்த நிமிடத்திலிருந்தே தொடங்குங்கள்.

சிரிக்கும்போது உடலில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களான எண்டார்ஃபின், செரட்டோனின் போன்றவை அதிகம் உற்பத்தியாகின்றன. வலியை ஏற்படுத்தும் கார்ட்டிசோல் உற்பத்தி கட்டுப்படுத்துப்படுகிறது. மேலும், முகத்தில் வயிற்றில் உள்ள தசைகள் சுருங்கிவிரிந்து ஆரோக்கியம் அடைகின்றன. ‘வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்’ என்று சொல்வது ஓல்டுதாங்க ஆனா ஓல்டு இஸ் கோல்டு இல்லையா? அதனால கொஞ்சம் சிரிங்க பாஸ் :-)

- எஸ்.கதிரேசன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ