Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் சுவாசிக்கிறீர்களா? ஒரு ஷாக் ரிப்போர்ட்

                              

லக சுகாதார அமைப்பு உலகிலுள்ள மாசுபட்ட நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இத்தரவரிசையில் உலகிலுள்ள மிகப்பெரிய நகரங்களில் மாசுபட்ட நகரமாக புதுடெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது. கொல்கத்தா 4-வது இடத்திலும், மும்பை 5-வது இடத்திலும் உள்ளது. கடும் காற்று மாசுபாட்டில் சிக்கித்தவிக்கும் சீனா 6-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நான்கு நகரங்களில் சென்னை மட்டும் இந்த தரவரிசையில் இடம்பெறவில்லை. பொதுவாக உலகில் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் குவாலியர், அலகாபாத், பாட்னா, ராய்பூர் ஆகிய இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. காற்றில் உள்ள மாசுபாட்டால் மக்களுக்கு பக்கவாதம், இதய நோய், நுரையீரல் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம்.

 
 
 

                              

அதிர்ச்சி தரும் உலக சுகாதார நிறுவனம்:

உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டு வெளியிட்டுள்ள ஆய்வின்படி, உலகில் அதிகம் மாசடைந்துள்ள, நாடுகளில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து மூன்றாம் இடத்தில் இருப்பது இந்தியா. உலகில் உள்ள நகரங்களில், அதிகம் மாசடைந்துள்ள நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது புதுடெல்லி. அதற்கடுத்த இடத்தில் இருப்பது, எகிப்து நாட்டிலுள்ள கெய்ரோ நகரம்தான்.

காற்றுமாசுபாடு பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னர், காற்றுமாசுபடுதல் பற்றிய அளவுகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

PM 2.5 மற்றும் PM 10 :

நம்மைச்சுற்றி இருக்கும் காற்றில் ஏராளமான  பொருட்கள் கலந்திருக்கின்றன. அதில் மாசுகளும், நச்சுப்பொருட்களும் அடக்கம். அவை துகள்களாக, திரவத்துளிகளாக  நம்மை சுற்றிலும் இருக்கின்றன. அந்த துகள்கள் ஒழுங்கான வடிவத்தைக்கொண்டிருக்காது. ஒவ்வொன்றும் ஒரு வடிவத்தில்  இருக்கும். எனவே அவற்றை இரண்டு பிரிவுகளாக பிரிக்கிறார்கள். பெரிய துகள்கள் மற்றும் சிறிய துகள்கள். அவற்றில் பெரியவைதான் PM 10. இவற்றில் கலந்துள்ள துகள்களின் அளவு 2.5 முதல் 10 மைக்ரோமீட்டர்கள் அளவு கொண்டது. அதாவது நமது தலைமுடியை விட, 25 முதல் 100 மடங்கு வரை சிறியது. இந்த அளவுள்ள துகள்களை பொதுவாக PM 10 என்கின்றனர்.

                         

அடுத்து சிறிய துகள்கள். இவை 2.5 மைக்ரோமீட்டர்களுக்கும் சிறியதாக இருக்கும். இவற்றை PM 2.5 என அழைக்கிறார்கள். இந்த சிறிய துகள்கள்தான் மிக ஆபத்தானதும் கூட. PM 10 என்னும் பெரிய துகள்கள், அளவில் பெரியதாக இருப்பதால், சுவாசிக்கும்போது, உள்ளே செல்லாது. அதே சமயம் மூக்கு, வாய் போன்ற இடங்களில் இவை படிந்து உடல்நலக்கோளாறுகளை ஏற்படுத்தும். ஆனால் சிறியதாக இருக்கும் PM 2.5 நேரடியாக நுரையீரல் வரை சென்று படிந்து பாதிப்பை ஏற்படுத்தும். இந்த துகள்கள் புற்றுநோயை உருவாக்கும் முதல் நிலை கார்சினோஜென்களாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவற்றை நீண்ட நாட்கள் சுவாசித்தால், நுரையீரல் புற்றுநோய் வரவாய்ப்புகள் அதிகம்.

 

PM 10 ஆனது அதிக தூரம் பயணிக்காது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் இந்த துகள்கள், அதே இடத்தை சுற்றியே காற்றில் மிதக்கும். ஆனால் உலோகங்கள் உருக்குதல், வாகனப்புகை போன்றவற்றில் இருந்து உருவாகும் PM 2.5, அது உற்பத்தியான இடத்தில் இருந்து, பல மைல்கள் காற்றிலேயே பயணிக்கும். இதனால் ஒரு இடத்தில் உருவாகும் இந்த மாசு, அடுத்த நகரத்துக்கும் சேர்த்து பாதிப்பை ஏற்படுத்தும்.

                           

பாதுகாப்பான அளவு என்றால் ஒரு நாளைக்கு PM 2.5 மற்றும் PM 10 இரண்டும் முறையே கனமீட்டருக்கு, 60 மற்றும் 100 மைக்ரோகிராம்கள் அளவுக்கு இருக்க வேண்டும். ஆனால் டெல்லியில் இருப்பது PM 2.5 மற்றும் PM 10 இரண்டும் முறையே, கனமீட்டருக்கு 122 மற்றும் 229 மைக்ரோகிராம்கள் உள்ளது. சாதாரணமாக இருக்கவேண்டிய அளவினைவிட இருமடங்கு உள்ளது. டெல்லிக்கு இந்த பிரச்சனை புதிதல்ல, கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக இந்த ஆபத்தை எதிர்நோக்கி காத்திருந்தது என்பதே உண்மை. 2011-ல் உயர்ந்த மாசின் அளவு இன்னும் குறையவே இல்லை. பாட்னா, லக்னோ, வாரணாசி, கான்பூர் ஆகிய நகரங்களில் இருந்து வரும் வாகனங்கள் காற்றை மேலும் பாழாக்கின. இதனுடைய விளைவுதான் இன்றைய மாசுபாடு... சென்னையும் அந்த தரவரிசையில் அடுத்த ஆண்டில் இடம்பிடித்து விடும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்த சுற்றுச்சூழல் பிரச்னைகள், மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகள், நகரங்களில் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப நகரத்தின் கட்டுமானங்களையும், வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டியதாகிறது. அப்படி அசுர வளர்ச்சிக்கு ஆசைப்படும் நேரத்தில், மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுப்பது இந்த சூழலியல் கேடுகள்.

இந்தப் பிரச்னை குறித்த, மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வீடியோவில்..

 

 

- துரை.நாகராஜன், ஞா.சுதாகர்.
  தகவல்: ரெ.சு.வெங்கடேஷ்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ