Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாண்புமிகு மருத்துவர் ரத்னவேலுக்கு ஓர் அஞ்சலி

பிரபல தோல் நோய் மருத்துவரும் காஸ்மெடிக்ஸ் அறுவைசிகிச்சை நிபுணருமான டாக்டர் ரத்னவேல் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு கடந்த ஞாயிற்றுக் கிழமை அகால மரணம் அடைந்தார். மூளைச்சாவு அடைந்த மருத்துவரின் உடல் உறுப்புகள் மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டன. அவரது தோல், ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் உருவாக்கிய தோல் வங்கிக்கு தானமாகக் கொடுக்கப்பட்டது.

டாக்டர் ரத்னவேல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தோல் மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட மருத்துவ மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக திருச்சி சென்றார். உச்சிப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்றபோது திடீரென்று மயக்கம் அடைந்தார். இதனை அடுத்து சுற்றி இருந்தவர்கள் உதவியால் அவர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவிக்காக  அனுமதிக்கப்பட்டார். பிறகு, திருச்சி அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சி.டி ஸ்கேன் பரிசோதனை செய்துபார்த்ததில், அவருக்கு மூளை ரத்தக்குழாய் வெடித்து ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. தொடர் சிகிச்சை பலனின்றி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

ரத்னவேலின் மறைவை அடுத்து அவரது விருப்பத்தின் பேரில் தோல் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்ப உறுப்பினர்கள் முடிவெடுத்துள்ளதாக ரத்னவேலின் மாமனாரும் மூத்த தோல் நிபுணருமான மகாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவருடைய நுரையீரல்கள் சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட உள்ளது. மற்ற உறுப்புகள் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. திங்களன்று திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்த பின்னர் செவ்வாய் அன்று அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.


சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் காஸ்மெட்டாலஜி துறைத் தலைவராகப் பணியாற்றிய டாக்டர் ரத்னவேல், தோல்நோய் மற்றும் காஸ்மெட்டாஜி மருத்துவத்தில் பல அரிய சாதனைகளை நிகழ்த்தியவர். அரசு மருத்துவமனையான ஸ்டான்லியை தோல் மருத்துவம் மற்றும் காஸ்மெட்டாலஜி எனப்படும் அழகியல் சிகிச்சைகளுக்காகப் புகழ்பெறச் செய்தவர். ஸ்டான்லி மருத்துவமனையில் தோல் வங்கியை உருவாக்கியவர். முடி கொட்டுதல், பிளாஸ்டிக் சர்ஜரி, தோல் நோய்கள் ஆகியவற்றைப் பற்றி பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மருத்துவக் கட்டுரைகள் வாயிலாக விழிப்பு உணர்வு ஏற்பட பாடுபட்டவர். இவரது நிகழ்ச்சிகள் அனைவருக்கும் புரியும்படியாக எளிமையாக, விளக்கமாக இருக்கும். சென்னை மட்டும் அல்லாமல் மற்ற ஊர்கள், மாநிலங்களிலும் இருந்தும் இவரைத் தேடிவந்து சிகிச்சை பெற்று பலன் அடைந்தவர்கள் பலர். திடீர் விபத்துகள், தீக்காயங்கள் ஆகியவற்றால் சேதமடைந்த தோல்பகுதி, எலும்பு, முகத்தசைகள் ஆகியவற்றைச் சிறந்த முறையில் அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்து சாதனை படைத்தவர். சொரியாசிஸ், படர்தாமரை உள்ளிட்ட தோல் பிரச்னைகள் முடி கொட்டும் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு தகுந்த அலோபதி சிகிச்சைகள் மூலமாக சிகிச்சை அளித்துள்ளார்.

இவரது இழப்பால் மருத்துவ உலகம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து ஸ்டான்லி மருத்துவமனை டீன் பொன்னம்பலம் நமச்சிவாயம் கூறுகையில், ''ரத்னவேல் சிறந்த தோல், முடி, அழகு சிகிச்சை நிபுணர். ஸ்டான்லி மருத்துவமனையில் அழகியல் சிகிச்சைகளுக்காக 2013 செப்டம்பர் அன்று  பிரத்யேகமாக ஒரு துறையை உருவாக்கியவர். இதுவரை ஸ்டான்லி தவிர வேறெந்த அரசு மருத்துவமனையிலும் அழகியலுக்கென்று தனியாக ஒரு துறை இல்லை. பல இளம் மருத்துவர்களுக்குப் பயிற்சி மற்றும் ஊக்கம் அளித்து அவர்களது துறையில் நிபுணத்துவம் பெற வைத்துள்ளார். பல மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அவர் ஒரு நல்ல ஆசானாகவும் முன்மாதிரியாகவும் விளங்குகிறார். அவரது இழப்பு மருத்துவ உலகில் ஈடு செய்ய முடியாதது'' என்றார்.

- வி. மோ. பிரசன்ன வெங்கடேஷ்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ