Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விபத்தில்லா தீபாவளிக்கு வெல்கம்!

 

ந்துவிட்டது தீபாவளி! சிறியவர் முதல் பெரியவர் வரை, உற்சாகமாகக் கொண்டாட, கிட்டத்தட்ட தயாராகிவிட்டோம். ஆங்காங்கே டப்... டுப்... சத்தங்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. விழாக் கொண்டாட்டம் ஒருபக்கம் இருக்கட்டும்; இன்னொரு பக்கம், மருத்துவர்களும் சமூக ஆர்வலர்களும் தீபாவளிக்குச் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்துகிறார்கள். அவற்றைப் பின்பற்றி, குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வது பெற்றோரின் கடமை. விபத்தில்லாத தீபாவளிக்கு கோரஸாகச் சொல்வோம் ஒரு வெல்கம்! 


சிறு வயது குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால், பட்டாசுப் பொருட்கள் குறித்த போதிய விழிப்புஉணர்வு  அவர்களுக்கு இருக்காது. எனவே, அவர்கள் பட்டாசு கொளுத்தும்போது, பெரியவர்கள் அருகில் இருக்க வேண்டும். தீவிரமான கண்காணிப்பு மட்டுமே விபத்தைத் தடுக்க உதவும்.

பட்டாசுகளைக் கொளுத்த நீளமான ஊதுவத்திகள் அல்லது மெழுகுவத்திகளைப் பயன்படுத்தலாம். முழங்கைகள் மடங்காமல், உடலுக்கும் பட்டாசுகளுக்கும் இடையே குறிப்பிட்ட தூரம் இடைவெளி இருக்கவேண்டும். பட்டாசு தீக்காயங்கள் 15 வயதுக்குக் கீழ் உள்ள  குழந்தைகளுக்கே பெரும்பாலும் ஏற்படுகின்றன என்பதை இங்கே நினைவுகூர்வது அவசியம்.  ராக்கெட் போன்ற அபாயகரமான வெடிகளைப் பற்றவைக்கும்போது கூடுதல் எச்சரிக்கை அவசியம்.
வெடிச் சத்தம் ஏற்படுத்தும் உயர் டெசிபல் சத்தம்கூட, செல்லப்பிராணிகளைப் பாதிக்கும். அதனால், செல்லப்பிராணிகளை ஒலி மாசு மற்றும் காற்று மாசிலிருந்து மீட்க பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்தலாம். செல்லப்பிராணிகளின் அசாதாரண நடத்தைகளைக் கண்காணிக்க வேண்டும். இப்படி தீபாவளிக்கு நாம் செய்துகொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த டிப்ஸ்களைத் தருகிறார் கண்மருத்துவர் - ரஜினிகாந்தா.

தீக்காயம்... செய்யவேண்டியவை; செய்யக் கூடாதவை!

  • உடலில் சிறிய தீக்காயம் பட்டால், உடனடியாக காயத்தின் மேல் சுத்தமான குழாய் நீரை ஊற்றுவது நல்லது.
  • காயம்பட்ட இடத்தைச் சுத்தமான, மென்மையான துணியால் மூட வேண்டும். காயத்தின் மேல் மை, எண்ணெய், பற்பசை, ஐஸ்கட்டி போன்றவற்றைத் தடவக் கூடாது.
  • மூட்டுப்பகுதி பாதிக்கப்பட்டால், எதிலும் மோதாதபடி உயர்த்திப் பிடிக்க வேண்டும். பின்னர், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு விரைவாக மருத்துவ சிகிச்சை தர வேண்டும்..
  • கண்களில் தீக்காயம் பட்டால், குளிர்ந்த குடிநீரில் தொடர்ந்து 10 நிமிடங்கள் கண்களைக் கழுவ வேண்டும். பிறகு, கண் மருத்துவரை அணுக வேண்டும்.
  • உடலில் பெரிய தீக்காயங்கள் ஏற்பட்டால், அவற்றின் மீது குளிர்ந்த நீரைக் கொட்டவோ, காயங்களைக் கழுவவோ கூடாது. விரைவாக மருத்துவமனைக்குச் செல்வது அவசியம்.
  • உடலில் தீ அதிக அளவில்  பற்றிக்கொண்டால், அணிந்திருக்கும் ஆடைகளை உடனடியாகக்  கழற்றிவிட வேண்டும். தீப்பற்றிக்கொண்ட நபரைச் சுத்தமான துணியால் சுற்றி, உடனடியாக மருத்துவமனைக்கு  அழைத்துச்செல்ல வேண்டும்.

பட்டாசுகளைக் கையாள்வது எப்படி?

  • சந்தையில் கிடைக்கும் பட்டாசுகளைச் சரியான, முறையான உற்பத்தியாளரிடம் இருந்து பெறுகிறோமோ என்பதை உறுதி செய்துகொண்டு வாங்குவது நல்லது.
  • பட்டாசுகளைத் திறந்தவெளியில் வைத்துக் கொளுத்துவதே பாதுகாப்பானது.
  • சிறிய வெடிகள், மத்தாப்புகளாக இருந்தாலும், அருகில் இரண்டு வாளிகளில் நீர் நிரப்பி பாதுகாப்புக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பட்டாசு வெடிக்கும்போது நைலான் அல்லது வேறு செயற்கை இழைகளால் ஆன துணிகளைத் தவிர்க்கலாம். செருப்பு அணிந்துகொண்டு பட்டாசுகளைப் பற்றவைப்பது நல்லது.
  • பட்டாசுகளைச் சட்டைப்பையில் வைக்கவே கூடாது.
  • வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்கவைக்க முயற்சிக்கக் கூடாது. அதன்மேல், தூரத்தில் இருந்து நீர் ஊற்றி அணைப்பது நல்லது.
  • கைகளில் வைத்துப் பட்டாசுகளைக் கொளுத்தக் கூடாது. மத்தாப்பு கொளுத்தினாலும், எரிந்த பிறகு பத்திரமாக அப்புறப்படுத்திவிட வேண்டும்.
  • குடிசைப் பகுதிகள் இருக்கும் இடத்தில் ராக்கெட்டுகளைக் கொளுத்தக் கூடாது. திறந்தவெளியில் காலியான பாட்டில்களில் வைத்து ராக்கெட் விடலாம். 
  • வீட்டில் உள்ள அனைவருக்கும், தீயை எப்படி அணைக்க வேண்டும் எனச் சொல்லித் தருவது அவசியம். இது விபத்து இல்லாத தீபாவளிக்கு வழிவகுக்கும்.

 தயார் நிலையில் அரசு மருத்துவமனைகள்
தீபாவளி நேரத்தில் ஏற்படக்கூடிய தீ விபத்து காயங்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் பிரத்யேக தீ விபத்து பிரிவு வார்டு உள்ளது. “ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 65 பேர், தீக்காயம் அடைந்து மருத்துவமனைக்கு வருகின்றனர். இங்கே தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைத்திருக்கிறோம். எனவே, தாமதிக்காமல் மருத்துவமனைக்கு வருவதன் மூலம் பெரிய பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்” என்கிறார் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி துறை தலைவர், ஜெ.ஜெகன்னாதன். இதேபோல், ஒவ்வொரு மாவட்ட தலைநகர, தாலுகா மருத்துவமனைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எந்தப் பிரச்னையாக இருந்தாலும் 108 - ஐ அழையுங்கள்!
“கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 3,024 பேர் பாதிக்கப்பட்டதாக 108 எண்ணுக்கு அழைப்பு வந்தது. அதுதான், மிக அதிக அளவிலான அழைப்பும் கூட. தீபாவளி பட்டாசு காயங்களுக்கு அடுத்தபடியாக, தீபாவளிக்கு அடுத்த ஒன்று இரண்டு நாட்களில் எங்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு, வயிற்று வலி, சுவாசத் திணறல் போன்ற  பிரச்னைகளுக்காக அதிக அளவில் அழைப்புகள் வருகின்றன. எனவே, வெறும் விபத்து, காயங்களுக்கு மட்டுமல்ல, எந்த ஓர் அவசர நிலையாக இருந்தாலும் கூட 108 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்” என்கிறார் ஜி.வி.கே ஈ.எம்.ஆர்.ஐ துறைத் தலைவருமான பி.பிரபுதாஸ்.

 - ம.மாரிமுத்து ,

படங்கள் - மீ. நிவேதன், கா. அசோக் பால்ராஜன்(மாணவப் பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close