Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யார் ஆரோக்கியமான அதிபர் ? ஹிலரி, டிரம்ப் மெடிக்கல் ரிப்போர்ட்

மெரிக்க அதிபர் தேர்தல் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் மற்றும் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ஆகியோருக்கிடையில் நிலவும் கடும் போட்டியில் யார் வெற்றி பெறப் போகிறார் என அமெரிக்கர்கள் மட்டுமல்லாமல், உலகமே முழு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. 

அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். ஆட்சிக்காலத்தில் அதிபர் ஆரோக்கியமாக இருந்தால்தான் அவர் மக்களுக்குச் சேவை செய்ய முடியும். அதற்காக அதிபர் வேட்பாளர்கள் தங்கள் உடல்நிலை குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்பது அமெரிக்காவில் எழுதப்படாத நியதி. ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், பாரக் ஒபாமா உள்ளிட்ட முன்னாள் அதிபர்கள் வெளிப்படையாகத் தங்கள் வயதையும் உடல்நிலை குறித்த அறிக்கையையும் மக்களிடம் வெளியிட்டுள்ளனர். கடந்த சில வருடங்களாக தங்கள் உடல் நிலை பற்றி விரிவான தகவல்களை வெளியிடாமல் இருந்த அதிபர் வேட்பாளர்கள் டிரம்ப் மற்றும் ஹிலரி இருவரும், தேர்தல் நெருங்கியவுடன் மக்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவைப் பெற விரும்பினர். இவர்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில்தான் தங்களது உடல்நிலை குறித்து விரிவான மருத்துவ அறிக்கையை வெளியிட்டனர். 

ஹிலரி, டிரம்ப் ஆகிய இருவரது உடல்நிலை பற்றி பார்ப்போம்.

ஹிலரி கிளிண்டன்

68 வயதாகும் ஹிலரி, செப்டம்பர் 11 அன்று மன்ஹாட்டன் உலக வர்த்தக மையத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது, உடலில் ஏற்பட்ட நீர்வறட்சி காரணமாகத் தலைசுற்றல் ஏற்பட்டது. உடனே, காரில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜூலை 2015-ல் ஹிலரியின் மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அவருக்கு சைனஸ், காது தொற்று, நிமோனியா ஆகியவை உள்ளதாக மருத்துவர் லிசா பர்டாக் தெரிவித்தார்.  நிமோனியாவுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், ஹிலரியின் உடல் நலம் முன்னேற்றம் அடைந்து வருவதாகக் கூறினார்.

நிமோனியா நோயை ஏற்படுத்தும் நிமோகோக்கஸ் (pneumococcus) வைரஸ் ஹிலரியின் வலது நுரையீரலின் நடுப் பகுதியைத் தாக்கியுள்ளது. இதற்கு அவருக்கு  பிரிவ்னார் மற்றும் நிமோவேக்ஸ்  (Prevnar and Pneumovax) தடுப்புமருந்து ஊசி போடப்பட்டது. ஆனால், இந்த மருத்துவ அறிக்கையில் ஹிலரியின் எடை, உயரம் போன்ற அடிப்படைத் தகவல்கள் சேர்க்கப்படவில்லை என எதிர்த்தரப்பில் இருந்து விமர்சனம் எழுந்தது. 1993 முதல் 2001 வரை ஜனாதிபதியின் மனைவி என்ற முறையில், நாட்டின் முதல் பெண்மணியாக இருந்தவர், 2009-ம் ஆண்டு வரை செனட்டராக இருந்திருக்கிறார். 2009 முதல் 2013 வரை அமெரிக்காவின் 67வது யுனைட்டட் ஸ்டேட்ஸ் செகரட்டரி ஆஃப் ஸ்டேட் ஆக பணியாற்றினர். ஒரு முறை பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றபோது அவரது கால் நரம்பில் ரத்தம் உறைந்தது. இதனால், அவர் நடக்க முடியாமல் சிரமப்பட்டார். இதற்கும் அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்தக் குறைபாடு பற்றிய தெளிவான விளக்கம் இன்றுவரை அளிக்கப்படவில்லை என டிரம்ப் தரப்பிலிருந்து விமர்சனம் எழுந்தது.

2012-ம் ஆண்டு வாஷிங்டனில் உள்ள அவரது வீட்டில் ஹிலரி மயங்கி விழுந்ததில், அவரது தலை, சுவரில் மோதி அடிபட்டது. வயிற்றில் உள்ள வைரஸ் தொற்று காரணமாக, உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு அவர் மயங்கினார் என்று தகவல் வெளியாகியது. ஹிலரி இந்தத் தலை காயத்திலிருந்து பூரணமாகக் குணமடைய ஆறு மாதங்கள் ஆயின என்று முன்னாள் அமெரிக்க அதிபரும் ஹிலரியின் கணவருமான பில் கிளிண்டன் தெரிவித்தார். இதனைப் பற்றிய தெளிவான விவரங்கள் அந்த அறிக்கையில் இல்லை. எனவே இவர் அதிபராகப் பொறுப்பேற்கத் தகுதி அற்றவர் என எதிர்க்கட்சி விமர்சனம் செய்தது.

ஹிலரியின்  தந்தை, 80 வயதில் பக்கவாதத்தால் இறந்தார். 90 வயது வரை வாழ்ந்த அவரது தாயார் இதய செயலிழப்பால் இறந்தார். ‘ஹிலரியின் இதயத் துடிப்பு விகிதம் 100/70 என்ற அளவில் உள்ளது, கெட்ட கொலஸ்ட்ரால் அளவு சற்று அதிகமாக இருந்தாலும் அடுத்த 10 வருடங்களுக்குள் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு 0.5 சதவிகிதம்தான். இது மிக மிக குறைத்த அளவு” என்று தெரிவித்தது ‘அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்’ அறிக்கை.


டொனால்டு டிரம்ப்

போட்டியாளர் டொனால்டு டிரம்ப், ஹிலரியை ‘உடலளவிலும் மனதளவிலும் சக்தி அற்றவர்’ என்றே தனது எல்லா பிரசாரக் கூட்டங்களிலும் விமர்சனம் செய்வது வழக்கம். 70 வயதாகிய டிரம்ப், நிமோனியா பாதித்த ஹிலரியைவிட, தான்  ஆரோக்கியமாக இருப்பதாகவே எப்போதும் மக்களிடம் கூறுவார். ஆனாலும் வருமானம், தொழில், உடல்நலம், செலுத்தும் வரி, சொத்து மதிப்பு பற்றிய தகவல்களை மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க டிரம்ப் மறுக்கிறார் என ஜனநாயகக் கட்சி குற்றம்சாட்டி வந்தது. இதற்குப் பதில் அளிக்கும் விதமாக ட்ரம்ப்பின் மருத்துவர் ஹெரால்டு என்.போர்ன்ஸ்டெய்ன் (Harold N. Bornstein) 2015 டிசம்பர் 4-ம் தேதி டிரம்ப்பின் உடல் நலம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், டிரம்ப் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால், ‘வெள்ளை மாளிகையின் வரலாற்றில் மிகவும் ஆரோக்கியமான அதிபர் அவராகத்தான் இருப்பர்’ என ஏகத்துக்குப் புகழ்ந்து தள்ளியிருந்தார். இது எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்களிடம் பெரும் சலசலப்பையம் அதிருப்தியையும் உண்டாக்கியது. இது மேம்போக்கான அறிக்கை என்று குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, டிரம்ப்பின் மருத்துவர் போர்ன்ஸ்டெய்ன் விரிவான மருத்துவ அறிக்கையை செப்டம்பர் 9, 2016 அன்று வெளியிட்டார்.

டிரம்ப் 6’ 3’’ உயரம் மற்றும் 236 பவுண்ட் எடை கொண்டவர். சமீபத்தில் உணவுக்கட்டுப்பாடு மற்றும் காலை உடற்பயிற்சி மூலமாக 13 பவுண்டுகள் எடையைக் குறைத்துள்ளார். நல்ல கொழுப்பு 63, கெட்ட கொழுப்பு 94. கெட்ட கொழுப்பைக் குறைக்க டிரம்ப், தினமும் 81 மில்லி கிராம் ஆஸ்பிரின் மற்றும் ஸ்டாடின் (Aspirin, statin) எடுத்துக் கொள்கிறார். டிரம்ப், மது மற்றும் புகைப் பழக்கங்கள் இல்லாதவர்.

கடைசியாக ஏப்ரல், 2014-ம் ஆண்டு டிரம்ப்புக்கு எலெக்ட்ரோ கார்டியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்முலம் இதயத் துடிப்பு சீராக உள்ளதா எனப் பரிசோதிக்கப்படும். இதில் டிரம்ப்பின் இதயச் செயல்பாடு மற்றும் ரத்தஓட்டம் சரியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. சர்க்கரை அளவு 99. (இது சராசரியைவிடச் சற்று அதிகம்). ரத்த அழுத்தம் (116/70). கால்சியம் அளவு 98. பத்து வயதில் அப்பெண்டிசைடிஸ் (appendicitis) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

அமெரிக்காவில் குளிர் காலங்களில் அதிகம் பரவி வரும், ஃப்ளு (influenza), டெட்டனஸ் (tetanus), நிமோனியா (pneumonia) ஆகியவற்றைத் தடுக்க, தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. உடல் நலம் கருதி இவற்றை அமெரிக்கக் குடிமகன்கள்  கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். “இந்தத் தடுப்பு மருந்துகளை டிரம்ப் தொடர்ந்து எடுத்துக் கொள்கிறாரா என்று அந்த மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை” என மேலும் ஒரு விமர்சனம் எழுந்துள்ளது.

 

யாருக்கு அல்சைமர் என்கிற மறதி நோய் வர வாய்ப்புள்ளது?

ட்ரம்ப், ஹிலரி இருவருமே 60 வயதைக் கடந்துவிட்டதால், இருவரையுமே அல்சைமர் மறதி நோய் தாக்க வாய்ப்புள்ளது. ஆகையால், இருவரது மூளையும் சிடி ஸ்கேன் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஹிலரியின் மருத்துவ அறிக்கையில், அவர் மனநலம் மற்றும் நினைவுத் திறன் சரியாக இருப்பதாக அவரது மருத்துவர் லிசா பர்டாக் தெரிவித்தார். டிரம்ப்பின் தந்தை ஃபிரெட், 80 வயதில் காலமானார். இவருக்கு அல்சீமர் மறதி நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது பரம்பரை மூலம் பரவும் தன்மை உடையது.

டிரம்ப், ஹிலரியைவிட இரண்டு வயது மூத்தவர் என்றாலும், ஆரோக்கியத்தின் அடிப்படையில் மட்டும் பார்த்தால் அவர்தான் சிறந்தவர் என்பது நடுநிலையாளர்களின் கருத்து. எது எப்படியோ... நம் நாட்டுப் பிரதமர், முதலமைச்சர் வேட்பாளர்களும் (நம் நாட்டில் பிரதமர், முதல்வரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை இல்லை. ஆனால், கட்சிகள் இவர்தான் முதல்வர், பிரதமர் என்று அறிவிக்கின்றன.) தேர்தலுக்கு முன்பே இதுபோல உடல்நலம் குறித்த அறிக்கையை வெளியிடச் சொன்னா என்ன ஆகும்னு கொஞ்சம் யோசிங்க...!

என்ன, தலை சுத்துதா..? சேம் பீலிங்..!

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ