Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழர் இதயம் இப்போது ஈராக் அண்ணன் தங்கையிடம் பாதுகாப்பாக துடிக்கிறது! #HeartTransplant

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தங்கை இருவருக்கும் அடுத்தடுத்து இதயம் கோளாறாக, இருவரும் மரணப்படுக்கையில் வீழ்ந்தனர். உடனடியாக இதய மாற்று அறுவை செய்ய வேண்டும்  என்ற நிலை ஏற்பட தவித்துப் போனது குடும்பம், ஈராக்கில் சிகிச்சைக்கு வாய்ப்பில்லாத நிலையில் இந்தியாவில் இதயம் கேட்டு தஞ்சமடைந்தது.

வெயிட்டிங் லிஸ்டில் இதயம் கிடைக்க இங்கேயும் தாமாதமாக, இனி அவ்வளவுதான் என்ற முடிவுக்கு குடும்பம் வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக இதயம் கிடைத்து, ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆனால் ஆபரேஷன் முழு சக்ஸஸ் ஆகவில்லை. மீண்டும் உயிருக்கு போராட்டம் நடந்தது. ஐம்பது நாள் போராட்ட முடிவில் ஒருவழியாக இதயம் சீராக இயங்கத் தொடங்க மீண்டும் வெளிக்காற்றை சுவாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் இரண்டு குழந்தைகள்.

ஈராக்கைச் சேர்ந்த சபா, ஷாஹித் இருவருக்கும், முகமது, சஃபா என இரண்டு அன்பான குழந்தைகள் உண்டு. முகம்மதுவுக்கு பதினாறு வயதாகிறது, சிறுமி சஃபாவுக்கு பதின்மூன்று வயதாகிறது. ஓராண்டுக்கு முன்பு முகமது திடீரென மூச்சு விட சிரமப்பட்டார். அங்கே பரிசோதித்ததில் கார்டிலேட்டட் மையோபதி எனச் சொல்லப்படும் விரிந்த இதயத் தசை இருப்பது தெரியவந்தது. நாளாக நாளாக வாந்தியும், மூச்சு விட சிரமப்படுதலும் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் நிலைமை மோசமாக உடனடியாக செயற்கை கருவி மூலம் இதயத்தை பம்ப் செய்ய வைத்து உயிர் காப்பாற்றப்பட்டது.

அறுவைசிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவனையில் அனுமதி செய்யப்பட்டார். தமிழக அரசின் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மையத்திடம் இதய தானம் கேட்டு பதிவு செய்யப்பட்டது. ஒரு மாதம் கழித்து ஒருவழியாக கோயமுத்தூரில் இருந்து தானமாக பெறப்பட்ட ஒரு இதயம் முகம்மதுவுக்கு பொருத்தப்பட்டது. ஆனால் சிகிச்சைக்குப் பிறகு முகமதுவின் நிலைமை கவலைக்கிடமாக மாறியது, நிம்மோனியா உள்ளிட்ட பிரச்னைகளும் நுரையீரல் தொற்றுகளும் சேர்ந்துகொள்ள உயிர் பிழைப்பது கடினம் என்ற நிலை ஏற்பட்டது, எனினும் அதன் பின்னர்  தொடர் சிகிச்சைகளால் படிப்படியாக நிலைமை சீராகவே, இரண்டு மாதங்களுக்குப் பின்னர் செயற்கை சுவாசம் இன்றி சுவாசிக்க ஆரம்பித்தார் முகமது.

அண்ணன் முகம்மதுவுக்கு ஆபரேஷன் செய்து கொண்டிருக்கும்போதே தங்கை சஃபாவும் அண்ணனைப் போலவே வாந்தி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் தஞ்சமடைந்தார். அவருக்கும் அதே விரிவடைந்த இதயத்தசை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சில நாட்களில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவருக்கும் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட, இதயம் தானமாக பெறப்பட்டு அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது, அந்தச் சிறுமிக்கும் அறுவைசிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைகளுக்குப் பிறகுதான் உடல் தேறியுள்ளது. 

சரி, கார்டிலேட்டட் மையோபதி எனச் சொல்லப்படும் விரிவடைந்த இதயத்தசை என்றால் என்ன என்பது பற்ற இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலகிருஷ்ணனிடம் கேட்டோம். 

நமது இதயத்தில் இடது வென்ட்ரிக்கிள் இருக்கிறது, இது ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பும். இந்த வென்ட்ரிக்கிள் விரிவடைந்து ஒழுங்காக செயல்படவில்லை எனில் ரத்தத்தை பம்ப் செய்ய முடியாது. இதனால் இதயச் செயலிழப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படும். இந்த பிரச்னைக்கு பெயர் தான் விரிவடைந்த  இதயத் தசை நோய். மரபியல் ரீதியாக சகோதர பந்தங்களுக்கு வரக்கூடிய ஒரு நோய் கார்டிலேட்டர் மையோபதி, இது தான் அந்த இருவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

இவர்களுக்கு இடது வென்ட்ரிக்கிள்ளுக்கு பதில் செயற்கை பம்ப்  பொறுத்தப்பட்டு தற்காலிகமாக இதயம் பம்ப் செய்யப்பட்டது, இது நீண்டகாலத் தீர்வு இல்லை என்பதால் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இதில் செயற்கை பம்ப் எடுத்துவிடப்பட்டு அதற்குப் பதிலாக இதயம் பொறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் முகம்மதுவுக்கு சரி, சஃபாவுக்கு சரி, நுரையீரல் தொற்றுகள் அதிகமாயின, பிலிரூபின் அளவுகள் மிக அதிக அளவு இருந்தது. அதிதீவிர மஞ்சள் காமாலையோடு, நுரையீரல் பிரச்னை, இதய பிரச்னை என உடல் மோசமாக சென்றது, இதில் எதாவது ஒரு பிரச்னை என்றாலே சிகிச்சையளிப்பதில் சிக்கல் ஏற்படும், இப்படி ஒரு சேர பிரச்னை ஏற்பட்டதால்  கடும் போராட்டத்துக்குப் பிறகு, பல்வேறு டாக்டர்களின் உதவியோடு எல்லா பிரச்னைகளும் படிப்படியாக சரி செய்யப்பட்டிருக்கின்றன.

பல மாதங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் சகஜ வாழ்க்கைக்கு இருவரும் திரும்பியிருக்கிறார்கள். உண்மையிலேயே மருத்துவர்களை விட கடவுளின் அனுக்கிரகமும் அவர்களுக்கு இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு பிரச்னைகளையும் தாண்டி அந்த குழந்தைகள் மீண்டு வந்தது பெரிய விஷயம் தான் என்றார். 

குழந்தைகள் நலம் வாழ வாழ்த்துகள்.

- பு.விவேக் ஆனந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ