Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

50+ பெண்கள் இறைச்சி சாப்பிட்டால் இதய நோய் வருமா? ஆய்வு முடிவு!

இறைச்சி

ணவுதான் உடலை இயங்கச் செய்கிறது; அதேசமயம் உணவை சீராக எடுத்துகொள்ள வில்லை என்றால் சிக்கலையும் தருகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், அதிக அளவில் இறைச்சி உணவை உட்கொள்வதால் இதய நோய் ஏற்படுகிறது என்ற அதிர்ச்சியான தகவலைத் தருகிறது அமெரிக்க ஹார்ட் அசோசியேஷனின் ஆய்வு கட்டுரை ஒன்று. இந்தப் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது, இதற்கு என்ன தீர்வு... உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி சத்துணவு நிபுணர் டாக்டர் தாரிணி கிருஷ்ணன் கூறும் தகவல்கள் இங்கே!

'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பது எல்லோரும் பொருந்தும். எதை உட்கொண்டாலும் அளவோடு இருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. 50 வயதுக்கு மேற்பட்டப் பெண்களுக்கு அதிக அளவில் இதய நோய் வர முக்கியக் காரணம் மாதவிடாய் நின்றுவிடுவதே

பெண்களுக்கு மாதவிடாயின்போது சுரக்கும் ஹார்மோன்கள் இதய நோய் வராமல் தடுக்கிறது. மாதவிடாய் நின்றுவிட்டால் பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும். பொதுவாக பெண்களுக்கு 50 வயதுக்குள்ளே மாதவிடாய் நின்றுபோய்விடுகிறது. அப்போது பெண்கள் உணவு உட்கொள்வதில் கவனமின்றி இருக்ககூடாது. முக்கியமாக இறைச்சி உணவைத் தவிர்த்து அதிகம் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். இறைச்சியில் அதிகம் கொழுப்புச் சத்து இருக்கிறது. ருசிக்காக அதிக அளவில் எண்ணெய், காரம் சேர்த்து சமைப்பதால் கலோரியின் அளவையும் அதிகரிக்கச் செய்துவிடுகிறது. உதாரணத்துக்கு, ஒரு கப் சாதத்தோடு சமைத்த இறைச்சி சேர்த்துக்கொண்டால் மூன்று கப் அளவிற்கு மாறிவிடுகிறது. இதனால் கொலஸ்ட்ரால் அதிகரித்து இதயத்தைப் பாதிக்கச் செய்யும்.

எண்ணெய்யும் ஒரு காரணம்!

கொழுப்புச் சத்து அதிகம் உடலில் சேர்வதற்குக் காரணம் இறைச்சி மட்டும் அல்ல. எண்ணெய்க்கும் முக்கியப் பங்கு உண்டு. தேவைக்கு அதிகமாய் எடுத்துக்கொள்ளும் எண்ணெய் ஆபத்துதான். ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 15மி.லி ((3 டீ-ஸ்பூன்) எண்ணெய் மட்டும் உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும். மாதத்தில் அரை லிட்டர் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தவேண்டும். இதை வீட்டில் தினசரி உணவு முறையில் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். ஹோட்டலில் சாப்பிடுவதாலும் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது. வெளியே சமைக்கும் உணவில் எவ்வளவு எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என்று நமக்குத் தெரியாது. அதனால் உணவகங்ளில் சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.


     அசைவம் சாப்பிட விரும்புவர்களுக்கு...

அசைவம் சாப்பிட விரும்பினால் மாதத்தில் ஒரு முறை ஆட்டு இறைச்சி சாப்பிடலாம். அதுவும் 75 கிராம் முதல் 100 கிராம் அளவுக்குள் இருக்கவேண்டும். இதை பகல் நேரத்தில் மட்டுமே சாப்பிடவேண்டும். ஆட்டு இறைச்சியை விரும்பாதவர்கள், வாரத்தில் ஒருமுறை நாட்டுக் கோழி (பிராய்லர் கோழி சாப்பிடக்கூடாது) அல்லது மீன் சாப்பிடலாம். இதுவும் 75 முதல் 100 கிராம் அளவுக்குள் இருக்கவேண்டும். இவற்றை வறுத்து சாப்பிடக் கூடாது. குறிப்பாக மதிய உணவின்போது மட்டுமே அசைவ உணவுகளைச் சாப்பிட வேண்டும். அசைவ உணவு செரிமாணமாக அதிக நேரமாகும் என்பதால் இரவில் சாப்பிடுவதை  தவிர்க்கவும்.

அதிக அளவு இறைச்சி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்...

 

 

காய்கறிகள்...

கொலஸ்ட்ரால் இல்லாமல் உடல் ஆரோக்யமாக இருக்கவேண்டும் எனில், காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இருமுறை உணவில் காய்கறிகள் சேர்த்து சாப்பிடவேண்டும். இதில் பச்சை நிற காய்கறிகள் மற்றும் தண்ணீர் சத்துள்ள காய்கறிகளைச் சாப்பிடுவது நல்லது. குறைந்தது 150 முதல் 200 கிராம் வரை காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளவேண்டும். கீரை, பீன்ஸ் போன்ற பச்சை நிற காய்கறிகள் மற்றும் பூசணி, சுரைக்காய், சௌசௌ, புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளை உணவில் சேர்க்கலாம். வெள்ளரி, தக்காளி, வெங்காயம் போன்றவற்றை சாலட் செய்தும் சாப்பிடலாம்

பழங்கள்...

அந்தந்த சீசன்களில் கிடைக்கும் பழங்களைச் சாப்பிடலாம். முக்கியமாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருப்பவர்கள் கொய்யா, பப்பாளி, தர்பூசணி, பேரிக்காய், மாதுளை, சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய ஏழு வகையான பழங்களைச் சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்...

பிட்சா, பர்கர், ஃப்ரென்ச் ஃப்ரை, பப்ஸ், கேக் போன்ற பேக்கரி உணவுப்பொருட்கள் மற்றும் சமோசா, பரோட்டா போன்றவற்றையும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அதேபோல் இனிப்பு வகைகளையும் தவிர்க்கலாம். இதில் எல்லாமே வனஸ்பதி (டால்டா) சேர்க்கப்படுவதால் கொலஸ்ட்ரால் அதிகரித்து உடல் பருமன் மற்றும் இதய நோய் வர காரணமாகிறது.

எல்லாப் பெண்களுக்கும் 40 வயது தாண்டியதும் உடல் ரீதியான பிரச்னைகள் வர ஆரம்பிக்கும் என்பதால் உணவு விஷயத்தில் மட்டுமல்ல உடற்பயிற்சி செய்வதிலும் கவனம் செலுத்தவேண்டும். வயதாகிவிட்டதே எப்படி உடற்பயிற்சி செய்வதென்று நினைக்கவேண்டாம். தினமும் 45 நிமிடங்கள் நடைப் பயிற்சி மேற்கொண்டாலே போதும். உணவு விஷயத்திலும், உடற்பயற்சியிலும் தவறாமல் கவனம் செலுத்தி வந்தாலே இதய நோய் கண்டு அஞ்ச வேண்டியதில்லை.

- என்.மல்லிகார்ஜூனா.

எடிட்டர் சாய்ஸ்