Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்கள் குழந்தை பொய் சொல்கிறதா?

குழந்தையின் பொய்

குழந்தைகள் ஒரு வரம் என்றால், குழந்தை வளர்ப்பு ஒரு தவம். நம் குழந்தை, மழலைகூட குதிராத குதலையில் ‘அம்மா’ என்றும் ‘அப்பா’ என்றும் அழைத்திடும்போது ஏற்படும் உணர்வு வார்த்தையில் சொல்லவியலாத பேரின்பம். மெள்ள குழந்தை வளர்ந்து ஒவ்வொரு சொல்லாய் கற்றுக்கொள்ளும்போது பெருமிதத்தில் விம்மும் பெற்றோரின் மனம், தீடீரென ஒரு சூழலில் குழந்தை பொய் சொல்லத் தொடங்கும்போது பதற்றம்கொள்கிறது. அதிலும் சில குழந்தைகள் தொடர்ந்து பொய் சொல்வார்கள். அன்பாய் கெஞ்சினாலும், அதட்டலாய் மிரட்டினாலும் குழந்தையின் பொய்  மட்டும் குறையாது. எங்கே நம் குழந்தை கெட்டுப்போய்விடுமோ என்ற அச்சத்தில் சில பெற்றோர்களுக்கு மனஉளைச்சலே ஏற்பட்டுவிடும். குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள். பொய் சொல்லும் குழந்தைகளை எப்படி எதிர்கொள்ளலாம்? அவர்களை நல்வழிப்படுத்த முடியுமா?

 

குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள்?
・    உண்மையில் குழந்தைகள் பொய் சொல்வது என்பது அவர்களின் புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு என்கிறார்கள் உளவியலாளர்கள். குழந்தையின் பொய்களுக்குப் பின்னே அவர்களின் நரம்பியல் வளர்ச்சி, சமூகத்தைப் புரிந்துகொள்ளும் பாங்கு, அறிவார்த்தம், உணர்ச்சி நிலை ஆகியன எல்லாம் மேம்பட்டு இருப்பதை உணரலாம் என்கிறார்கள். 
・    குழந்தைகள் பொய் சொல்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலான குழந்தைகள்  பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவோ, பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காகவோதான் பொய் சொல்கிறார்கள்.
・    உங்கள் மகள் சுவரின் அருகே ஜாம் பாட்டிலுடன் நின்று கொண்டிருக்கிறாள். சுவரில் ஜாம் படிந்திருக்கிறது. குழந்தையின் சட்டையிலும் ஜாம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அவளிடம் “ நீதானே இதைச் செய்தாய்?” என்று கேட்டாள். குழந்தை அவசர அவசரமாக இல்லை என மறுக்கும். “நான் அடிக்கமாட்டேன் சொல்” என்றாலும் குழந்தை “நான் செய்யவில்லை” என்றே மறுக்கும். குழந்தை ஏன் அப்படிச் சொல்கிறது.
・    சின்னஞ்சிறு குழந்தைகளிடம் தவறு செய்வதற்கும் தவறான நபராக இருப்பதற்குமான இடைவெளி பற்றிய புரிதல்கள் குறைவாகவே உள்ளன. அதாவது, தவறு செய்வதாலேயே நாம் தவறான நபராகிவிட மாட்டோம் என்ற புரிதல் பெரியவர்களிடம் உண்டு. குழந்தைகள் இப்படிக் கருதுவது இல்லை. தவறு செய்பவர்கள் தவறான மனிதர்கள் என்று கருதுகிறார்கள். எனவே, அவர்கள் செய்த ஏதாவது குறும்பு அல்லது தவறைப் பற்றி விசாரிக்கும்போது, அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். ஏனெனில், அதை ஒப்புக்கொள்வது அவர்கள் தவறானவர்கள் என ஒப்புக்கொள்வதற்குச் சமம்.

பொய்களின் அடுத்த கட்டம்
・    அதே குழந்தை இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும் தங்களின் சுய கெளரவத்தைக் காப்பதற்காகவும் தண்டனைகளை, பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காகவும் பொய்சொல்லத் தொடங்குகிறது. கண்டிப்பான, கறாரான சூழலில் வளரும் குழந்தைகள் சற்று இலகுவான சூழலில் வளரும் குழந்தைகளைவிடவும் அதிகம் பொய் பேசுகிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பெற்றோரோ ஆசிரியரோ  தவறு செய்வதை தண்டிக்கிற, கறாரான ஆட்களாக இருக்கும்போது குழந்தைகள் தண்டனைக்குப் பயந்து அதில் இருந்து தப்பிப்பதற்காக பொய் சொல்லும் ஆற்றலை வளர்த்துக்கொள்கிறார்கள். நாம் எவ்வளவு கண்டிப்புடன் இருக்கிறோமோ குழந்தைகள் அவ்வளவு பொய் பேசுபவர்களாக இருக்கிறார்கள் என்கின்றனர்.
・    குழந்தைகளின் நம்பிக்கைகள், உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் அதை நல்வழிப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு தொடர்ந்து அவர்களைக் கண்டிப்புடன் நடத்தும்போது, அவர்கள் மேலும் பொய் சொல்பவர்களாக மாறுவார்களே அல்லாமல் நன்னடத்தை உள்ளவர்களாக மாறுவது அறிது. பொய் சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை என்பதை உணரும்போதே குழந்தைகள் பொய் சொல்கிறார்கள். சட்டை அழுக்கானது குறித்தோ பொம்மை தொலைந்தது குறித்தோ பொய் சொன்னால் மட்டுமே அடியில் இருந்தும் தண்டனையில் இருந்தும் தப்ப முடியும் என்று நினைக்கும் ஒரு குழந்தை வேறு வழியே இல்லாமல் பொய் சொல்கிறது. இதை அடாப்டிப் பிஹேவியர் (Adaptive behavior) என்பார்கள்.

 

தேவையான அணுகுமுறைகள்
・    குழந்தைகளுக்கு நல்லது, தீயதைச் சொல்லித்தந்து, சமூக ஒழுக்கத்தை, நற்பழக்கங்களை பின்பற்ற வைப்பதற்காக அவர்களைச் சற்று கண்டிப்புடன் வளர்க்க வேண்டியது அவசியம்தான். ஆனால், அதற்காக நாம் அவர்களிடம் போலிஸ்காரர்கள் போலவோ, விதிகளின் உரிமையாளர்கள் போலவோ  நடந்துகொள்ளக் கூடாது. ஒழுங்காக இருப்பது என்பது  பின்பற்றியே ஆகவேண்டிய விதி என்பதைவிடவும் ஒழுங்காக இருப்பது வாழ்க்கைக்கு மிகவும் நல்லது என்பதைப் புரியவைப்பதாக நம் அணுகுமுறை இருக்க வேண்டும்.  குழந்தைகள் உணர்வுப்பூர்வமானவர்கள். அவர்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும். அறிவார்த்தமாக அவர்களிடம் பிரசங்கிப்பதைவிடவும் உணர்வுப்பூர்வமாக அவர்களுடன் உரையாடுவதும் கதைகள் போன்றவற்றின் வாயிலாக புரியவைப்பதும் நல்ல பலன் அளிக்கக்கூடிய முயற்சிகள்.
・    தொடர்ந்து பொய் சொல்லும் குழந்தைகளிடம் தோழமையுடன் நடந்துகொள்ளவது அவசியம். அவர்கள் பொய் சொல்லும் போதெல்லாம் அதைக் கண்டுப்பிடித்து சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்பவர்களாக நாம் இருந்தால், குழந்தைகள் நம்மிடம் இருந்து விலகிக்கொண்டே இருப்பார்கள். மாறாக, அவர்கள் பொய் சொல்வதற்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியுமா என்று பார்க்கலாம். அதாவது, பொய் சொல்வது ஒரு ஒழுக்கக்கேடான விஷயம் என்பதைப் புரியவைக்க வேண்டியது அவசியம். ஆனால், பொய் சொல்வது தண்டனைக்கான வாய்ப்பை உருவாக்கும் என்கிற மனப்பதிவு இருந்தால் தண்டனை கொடுப்பதைப் பற்றி மறுபரிசீலனை செய்யுங்கள்.
・    குழந்தைகள் சிறிய குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் போது அவர்களின் நடத்தையைப் பாராட்டுங்கள். ஆனால் அந்த செயல் தவறு என்பதைப் புரியவையுங்கள். சிறிய சிறிய பரிசுகள், எளிய பாராட்டுக்கள் போன்றவை சிறந்த பலன்களைத் தரும்.
・    குழந்தைகள் பொய் சொல்வது  ஒரு இயல்பான செயல்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளை நல்வழிப்படுத்தும்போது அவர்களுக்குப் பொய் சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை எனும் நெருக்கடியை ஏற்படுத்தாதீர்கள். குழந்தைகளிடம் அவர்கள் பொய்யர்கள் எனக் குற்றம்சாட்டாதீர்கள். ஆனால், பிரச்னை என்ன என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்படியாக எடுத்துச் சொல்லுங்கள். 

- இளங்கோ கிருஷ்ணன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ