Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதிதாய் பிறப்போம்... புத்தாண்டுக்கான 10 விதிகள்! #FeelFreshThisNewYear

 

 

வ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் நம்மில் பலரும் தவறாமல் செய்கிற விஷயம் ஒன்று உண்டு. புதுப் புது விஷயங்களைச் செய்யப் போவதாகத் திட்டமிடுவோம்; அதற்காக உறுதிமொழி எடுப்போம் அல்லது கெட்ட (நம் உடலையும் மனதையும் பாதிக்கிற) விஷயங்களை விடப் போவதாகத் திட்டமிடுவோம். ஆரம்பத்தில் இவற்றைக் கடைப்பிடித்தாலும், பலருக்கும் அது நிறைவேற்ற முடியாத செயல். பெரும்பாலானவர்களால், ஜனவரியில் சுறுசுறுப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிற அந்த விஷயங்கள், மாதத்தின் பாதியிலே நின்று போகும். என்னதான் செய்யலாம்? இந்த ஆண்டாவது நாம் ஏற்கும் உறுதிமொழிகளுக்கு உயிர் கொடுப்போம் எனப் புத்தாண்டுக்கான உறுதியெடுப்போம். சரி, இந்தப் புத்தாண்டை அற்புதமாக மாற்றச் சில வழிகள் இருக்கின்றன. அவற்றைக் கடைப்பிடிக்க உறுதி ஏற்போமா?

                  புத்தாண்டுக்கான

எடை குறைக்கப்போறேன்!

உள்ளுக்குள் ஒரு நக்கல் சிரிப்போடு தொடங்கும் உறுதிமொழி இது. பலருக்கும் பிடித்தமான விஷயம். ஆனால், செய்து முடிப்பதோ கடினம். புத்தாண்டு டின்னரிலேயே இந்த உறுதிமொழியைக் காணாமல் போகச் செய்யக் கூடாது என்பதை முதல் உறுதிமொழியாக எடுத்துவிட்டு, அடுத்த உறுதிமொழிக்குச் செல்லுங்கள். `ஜனவரியில் 1 அல்லது 2 கிலோ எடை குறைப்பேன்’ என முடிவுசெய்து, அதை அப்படியே டிசம்பர் வரை நீட்டிச் செல்லுங்கள். நீங்கள் 10-12 கிலோவாவது எடை குறைத்திருத்தால், அந்த ஆண்டுக்கான வெற்றியை முழுமையாகக் கொண்டாடுங்கள். 

    

டிராவல் ப்ளான் பண்ணுங்க!

திட்டமிடாமல் செய்தால், எந்த வேலையும் சொதப்பும். பிளான் பண்ணிச் செய்தால் வொர்க்அவுட் ஆகிற விஷயம் இது. மாதத்துக்கு ஒருமுறையாவது இயற்கையை ரசிக்க காடோ, மலையோ ஏறி இறங்குங்கள். ஸ்ட்ரெஸ்ஸை மறந்து, கவலைகளை கழற்றிவிட்டு வர வாய்ப்பாக அமையட்டும். சில சமயங்களில் திட்டமிடாமல், சூழலே அமைத்துத் தரும் பயணத்தையும் முழுமையாக வரவேற்றுப் புறப்படுங்கள். உங்களைப் புத்துணர்வாக்க பயணம் முக்கியம்.

ஸ்டீம் இன்ஜின் உடலுக்கும் கேடு... சூழலுக்கும் கேடு!

பிரேக் என்றால் ஜூஸ், சமோசா, வடை எனச் சாப்பிடுவதுகூட ஓ.கேதான். ஆனால், புகை மட்டும் வேண்டாம் பாஸ். அடிக்கடி புகைவிட்டுக் கொண்டே இருக்க, நீங்கள் என்ன ஸ்டீம் இன்ஜினா? மகள், மகன் மீது சத்தியம் வைப்பதெல்லாம் பழைய கதை. உங்கள் குடும்பத்தைப் பார்க்க நீங்கள் இருக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி, முயற்சி செய்யுங்கள். நிச்சயம் வெற்றியடைய முடியும். புகை நமக்கு எப்போதுமே பகைதான்.

                                

தள்ளிப்போடாதே... எதையும்!

வேலையில் கெட்ட பெயர் வாங்குவதற்கு இது ஒரு முக்கிய காரணம். அதேபோல் உறவுகளில் சிக்கல் ஏற்படுவதும் இதனால்தான். மார்க் ட்வெயின் சொன்ன பொன்மொழி இது.
`உயிருடன் இருக்கும் தவளையை காலையிலே கடித்துச் சாப்பிட்டுவிடுங்கள். இல்லையெனில், அது நாள் முழுதும் பக்கத்திலேயே நின்றுகொண்டு உங்களின் அருவருப்பு உணர்வை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கும்.’ இது நாம் செய்யவேண்டிய வேலைகளுக்கும் பொருந்தக் கூடியதுதான். வேலையைத் தள்ளிப் போடாமல், அப்போதே செய்து முடிப்பது நல்லது.

ஸ்மார்ட் வொர்க்கராக மாறலாமே!

எல்லா விஷயங்களையும் நாம் மட்டுமே தெரிந்துவைத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. யார் யாருக்கு என்னென்ன தெரியும் என்பதைத் தெரிந்துகொண்டாலே போதும், அவரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இதுவும் ஸ்மார்ட் வொர்க்தான்.

                     

ஹார்டு வொர்க்கராக இவ்வளவே போதும்!

ஒவ்வொரு நாளும் பத்துப் பக்கங்களை மட்டுமே படிக்கும் பழக்கம் உள்ளவர், ஒருநாளைக்குக் கூடுதலாக நான்கு பக்கம் படித்தாலுமே அவர் ஹார்டு வொர்க்கர்தான். ஆனால், நாம் பெரும்பாலும் `மாங்கு மாங்கு’ என்று வேலை செய்பவனையே ஹார்டு வொர்க்கர் என நினைத்துக் கொள்கிறோம். இனி... ஹார்டு வொர்க்கராக மாறுங்கள். இதற்கு, கொஞ்சம் மெனக்கெடுதலும் நிறைய முயற்சி இருந்தாலே போதுமானது. கொஞ்சம் மாற்றமே ஹார்டு வொர்க்கராக மாற்றும்.

மனம் பேசும்... உடல் கெஞ்சும்... சமாளிப்பது எப்படி?

`காலையில் சீக்கிரம் எழுந்திருக்கணும்’ என மனம் கூச்சல்போடும். `நிறைய வேலை இருக்கு’ என்று ரீமைண்டர் அடித்துக்கொண்டே இருக்கும். மீறியும் உடலானது, `நைட்டு லேட்டாத்தானே படுத்தோம்... கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கலாமே’ எனக் கெஞ்சும். இந்த இரண்டின் மொழியையும் புரிந்து, தெளிந்து செயல்படுவதில்தான் இருக்கிறது வாழ்க்கையின் பயணமும் தொடக்கமும். மனதையும் உடலையும் கட்டுக்குள் வையுங்கள். இரண்டும் உடன்படுகிற வாழ்வியலை மேற்கொள்ளுங்கள்.

கற்கவேண்டிய 'லைஃப் ஸ்கில்'!

ஆண், பெண் இருவருக்கும் கைகொடுக்கும் திறன் இது. `யார் சமையலில் சூப்பர்?’ எனப் போட்டி போடவேண்டிய விஷயமும் இதுதான். நூடுல்ஸைத் தாண்டி நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. பிரியாணி செய்ய முயன்று, அது தக்காளி சாதமாக மாறினாலும் சரி... டோன்ட் கிவ் அப். அடுத்த முறை அது பிரியாணியாக மாறும் வரை முயல்வோம். சமையலை நேசிப்போம். அதிலுள்ள சிரமங்கள் புரிந்தால் ஃபுட் வேஸ்ட் தடுக்கப்படும்.

                           

அதிகமாகக் கவனி... அளவுடன் பேசு!

ஒருவரைப் பார்க்கும்போது இவர் நமக்கு சரியாக வருவாரா, மாட்டாரா என யூகிப்பது கொஞ்சம் கடினம்தான். ஆனால், ஒருவர் பேசுவதை வைத்து, அதை நிச்சயம் யூகிக்க முடியும். முடிந்த வரை அதிகமாகக் கவனிப்போம். கவனிப்பது ஒரு தியானம். `மங்க்கி மைண்டு’ என்று சொல்வார்கள். பத்து சிந்தனையில் பதினொன்றாவதாக ஓர் எண்ணம் தோன்றும். இது அனைத்தையும் கவனிப்போம். இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செய்ய முடியும். இதற்கு நேரமோ, இடமோ தேவைப்படாது. வாழ்க்கையின் அங்கம்தான் கவனித்தல். அது உங்களுடன் தொடர்ந்துகொண்டே இருக்கும். கவனித்தலைப் பழகினாலே பேச்சு அளவானதாக மாறிவிடும். தேவையில்லாத இடங்களில் பேசுவதை நிறுத்தினாலே, பெரும்பாலான உறவுச் சிக்கல்கள் தவிர்க்கப்படும்.

உன்னை மாற்றும் சுவாசமே!

இந்தக் கேள்விக்கு பலருக்கும் விடை தெரிவது கஷ்டம்தான். எதிர்பார்க்க முடியாத, கற்பனை செய்ய முடியாத மாற்றங்களைத் தந்து, நம் உணர்வுகளைக் கட்டுக்குள் வைக்க ஓர் எளிய பயிற்சியால் முடியும். அதுதான் மூச்சுப் பயிற்சி. மூச்சைக் கவனிக்கும்போது, கவனிக்கும் திறன் ஓங்கும். மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்யும்போது உடல்நலத்துடன் உணர்வுகளின் நலமும் கூடும். உங்களை நீங்கள் ஆள முடியும். பிரச்னையை எதிர்கொள்ளும் திறன் கிடைக்கும். சின்னச் சின்ன பிரச்னைகள் தலைக்கு ஏறாமல் பார்த்துக்கொள்ள தியானத்துக்கும் மூச்சுப் பயிற்சிக்கும் சரி சமமான பங்கு உண்டு. உங்களை மாற்றும் சுவாசத்தை சீர் செய்வோம். அதற்கு உதவும் தியானமும் மூச்சுப் பயிற்சியும் வாழ்க்கையின் வழிமுறைகள்.

- ப்ரீத்தி
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close