Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிக்கன் 65-ஐ எங்கே, எப்படி சாப்பிடணும் தெரியுமா? #HealthAlert

சிக்கன்... உலகம் முழுக்கப் பல கோடி மக்கள் விரும்பும் உணவு. வறுத்து, பொரித்து, ஆவியில் வேகவைத்து என அத்தனை வகைகளிலும் சிக்கனைப் பாடாகப்படுத்தி ருசி பார்த்துவிட்டார்கள் மனிதர்கள். பிரியாணி, குழம்பு, பொரியல், வறுவல், தொக்கு... என செட்டிநாடு தொடங்கி கென்டகி சிக்கன் வரை விதவிதமான ரெசிப்பிகள். ஆனாலும், அது கையேந்தி பவனாக இருக்கட்டும்... ஹை கிளாஸ் ரெஸ்டாரன்ட்டாக இருக்கட்டும்... நான்வெஜ் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது, `சிக்கன் 65’தான். ஒரு பக்கா விருந்தின் ஸ்டார்ட்டரோ, உணவுக்கான சைடுடிஷ்ஷோ... சிக்கன் 65-க்கு தனித்துவமான இடம் உண்டு. `இது ஏற்படுத்தும் பக்கவிளைவுகளைத் தெரிந்துகொண்டால், இதன் பக்கம் போகவே பலரும் யோசிப்பார்கள்’ என்பதே மருத்துவர்களும் ஆய்வாளர்களும் சொல்லும் உண்மை. 

சிக்கன் 65

இன்றைக்கு தமிழ்நாட்டின் அத்தனை பார்களிலும் தவிர்க்க முடியாத ஒரு சைடுடிஷ், சிக்கன் 65. இந்தப் பெயர் எப்படி வந்தது? காரணம் தேடிப்போனால், என்னென்னவோ தகவல்கள்! பிரபல ஹோட்டல்களில் மெனு கார்டு இருக்கும் இல்லையா? அதில் அறுபத்தி ஐந்தாவது அயிட்டமாக சிக்கன் 65தான் இருக்குமாம். இதைக்கூட ஏதோ ஒரு ரெஸ்டாரன்ட் மெனு கார்டைப் பார்த்து யாரோ சொன்னது என்று நம்பிவிடலாம். இன்னும் எத்தனையோ கற்பனைக் கதைகள்... 65 நாட்கள் வளர்த்த ஒரு கோழிதான் இதைச் செய்யப் பயன்படுகிறது... சிக்கன் 65-க்கு பயன்படுத்தும் கோழியை சரியாக அறுபத்தி ஐந்து நாட்கள் ஊறவைத்துப் பதப்படுத்த வேண்டும்... இதில் 65 வகையான பொருட்கள் சேர்க்கப்படுகின்றன... ஒரு கோழியை 65 துண்டுகளாக நறுக்குவது... இது ருசியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சமையல்காரர் அறுபத்தைந்து மிளகாய்களை இதில் சேர்த்தார். இப்படி விரிகிற தகவல்கள் எதற்கும் ஆதாரம் இல்லை. 

கோழி இறைச்சியில் வகை வகையாக எத்தனையோ ரெசிப்பிக்கள், யார் யாரோ கண்டுபிடித்திருந்தாலும், சிக்கன் 65-க்கு வேறு எந்த நாட்டினரும் உரிமைகொண்டாட முடியாது. தமிழர்களின், குறிப்பாக சென்னைவாசிகளின் கண்டுபிடிப்பு என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம். 1965-ம் ஆண்டு சென்னையில் உள்ள புஹாரி ஹோட்டல்தான் இந்த ரெசிப்பியை அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்திய ஆண்டை வைத்து, `சிக்கன் 65’ என ஆனது. பிறந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளைக் கடந்துவிட்டாலும், இன்றைக்கும் துள்ளலோடு இருக்கிறது இதன் சுவை. 

சிக்கன்

எலும்பு இல்லாத, எலும்புடன்கூடிய என இரண்டு முறைகளிலும் சிக்கன் 65 தயாரிக்கிறார்கள். ரோட்டோரக் கடை தொடங்கி ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை சர்வ சாதாரணமாகக் கிடைக்கும் ஒன்று. இஞ்சி, பூண்டு, சிவப்பு மிளகாய், வினிகர், கறிவேப்பிலை எல்லாம் கலந்த மசாலாவில் தயாரிக்கப்படும் இதன் சுவை, மறக்க முடியாதது. கூட சிறிது வெங்காயத்தையும் எலுமிச்சையையும் நறுக்கி வைத்துவிட்டால் போதும். இதன் அருமையைக் கேட்ட சைவப் பிரியர்கள் விடுவார்களா..? பனீரிலும் காலிஃப்ளவரிலும் தயாரிக்கப்பட்ட இதன் தொடர்ச்சி சைவத்தில், `பனீர் 65’, `கோபி 65’ என நீண்டது. 

1960-களில் பிராய்லர் கோழிகள் இல்லை என்றே சொல்லலாம். எல்லாமே நாட்டுக்கோழிகள்தான். ஆரோக்கியமான மசாலாக் கலவை கலந்து, பொரித்தெடுக்கப்பட்ட அன்றைய சிக்கன் 65, மதுபானங்களுக்கு பொருத்தமான சைடுடிஷ்ஷாக இருந்திருக்கலாம். மாலை நேர டீக்குக்கூட இது பொருத்தமான நொறுக்குத்தீனியாக இருந்திருக்கலாம். இன்றைக்கு நிலைமை அப்படி இல்லை. நட்சத்திர உணவகங்கள் தொடங்கி, தெருவோரக் கடை வரை நீக்கமற நிறைந்திருக்கிறது பிராய்லர் கோழி. இதில் தயாரிக்கப்படும் சிக்கன் 65 நம் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதுதானா? விளக்குகிறார் அக்குஹீலர் உமர் பாரூக்... 

நாட்டுக்கோழிகள்

``கோழி, தமிழர்களின் பாரம்பர்ய உணவு. எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கும், நுரையீரலில் பிரச்னை மற்றும் சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கும் கோழிச் சாறு கொடுப்பது, கோழியைக் குழம்பு வைத்துக் கொடுப்பதெல்லாம் உண்டு. அது பலன் தருவதையும் பார்த்திருக்கிறோம். அது மட்டுமல்ல... பருவமெய்திய பெண்கள், புதுமணத் தம்பதிகள், நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள் இவர்களுக்கெல்லாம் சக்தி தருவதற்காக கோழி இறைச்சி பயன்பட்டது. ஆனால், இன்றைக்கு நமக்கு அதிகமாகக் கிடைப்பதென்னவோ பிராய்லர் கோழிகளே. 

நல்ல எடையுடன், அதிகச் சதைத் திரட்சியோடு பிராய்லர் கோழி வளர வேண்டும் என்பதற்காக ஹார்மோன் ஊசியைப் போடுகிறார்கள். பிராய்லர் கோழிகள் குறுகிய ஆயுள் காலம்கொண்டவை. ஆக, அவை இறப்பதற்குள் சாப்பிட்டுவிட வேண்டும். ஹார்மோன் ஊசிகளை, பிராய்லர் கோழிகளுக்குப் போடும்போது, அதன் உடல் முழுக்க ஹார்மோன் மற்றும் ரசாயனங்களின் பாதிப்பு பரவியிருக்கும். அதைச் சாப்பிடுபவர்களுக்கும் அந்த பாதிப்பு ஏற்படும். அதனால் இதன் இறைச்சியைச் சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உண்டு என உறுதியாகச் சொல்கின்றன சில ஆய்வு முடிவுகள்.    

சிக்கன்

உமர் பாரூக்சிக்கனுடன் எந்த நிறத்தையும் சேர்க்கக் கூடாது என்பதே பொது விதி. ஆனால், வீடு தொடங்கி ஹோட்டல்கள் வரை யாரும் இதைக் கடைப்பிடிப்பதில்லை. அதோடு சிக்கன் 65 தயாரிப்பதற்காக கடைகளில் கிடைக்கும் ஒருவகை சிவப்பு நிற பவுடரை எல்லோருமே பயன்படுத்துகிறோம். இந்த சிவப்பு நிறம் கிடைப்பதற்காக, சூடான் டை (Sudan Dye), மெட்டானில் (Metanil) ஆகிய ரசாயனங்களைச் சேர்க்கிறார்கள். கூடவே `எரித்ரோசின்’ என்கிற மருந்துப் பொருளும் பயன்படுத்தப்படுகிறது. இதன் அளவு கூடினால், கழுத்தில் தைராய்டு, ஹார்மோன் தொடர்பான பிரச்னைகளும் ஏற்படலாம் என நிரூபித்திருக்கின்றன ஆய்வுகள். சூடான் டையால் சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பு உண்டு. அதனாலேயே இந்த டை பயன்பாட்டை, அமெரிக்காவிலும் சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் தடை செய்திருக்கிறார்கள். எனவே சிக்கன் 65 நமக்கு வேண்டவே வேண்டாம்’’ என்கிறார் அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்.

ஆக, சிக்கன் நல்லது. அதாவது, நாட்டுக்கோழி! வீட்டில், ஆரோக்கியமாக, ரசாயன நிறக்கலவை சேர்க்காமல் செய்து அளவாகச் சாப்பிடலாம். உணவகங்கள் மற்றும் விருந்து உள்ளிட்ட வெளியிடங்களில் பரிமாறப்படும் சிக்கன் 65 நமக்கு வேண்டவே வேண்டாம்! 

- பாலு சத்யா 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close