Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆண்மைக்குறைவு ... குழந்தையின்மை ... கருத்தரிப்பு மையங்களில் நடப்பது என்ன? ரியல் ரிப்போர்ட்... #MustRead

முன்னெப்போதும்  இல்லாத அளவுக்கு ஊரெங்கும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பெருகி வருகிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் நாற்பதுக்கும் அதிகமான பிரத்யேகமான கருத்தரிப்பு மையங்கள் வந்துவிட்டன. உலகமயமாக்கலுக்கு பிறகான வாழ்வியல் முறை மாற்றங்கள் காரணமாக,  மக்களிடம் கருத்தரிப்பு பிரச்னை அதிகரித்து வருகிறது. இதையடுத்து பல்வேறு தொழில் அதிபர்களும், கார்ப்பரேட் முதலைகளும் கூட கருத்தரிப்பு மையங்களில் முதலீடு  செய்ய ஆரம்பித்துவிட்டனர்.  ஆடித்தள்ளுபடியில் துணி விற்பதைப் போல சில கருத்தரிப்பு மையங்கள் ' குழந்தை பெற சிறப்பு சம்மர் ஆஃபர்' அறிவிக்கும்  விளம்பரங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. 

குழந்தையின்மை

குழந்தையின்மையால்  ஏக்கத்திலேயே வாழ்நாளைக் கழிக்கும் தம்பதிகளுக்கு அறிவியல் தந்த வரப்பிரசாதம்தான் செயற்கைக் கருத்தரிப்பு முறை. ஆனால் இதை முழுக்க முழுக்க வணிக நோக்கில் மட்டுமே இன்னொரு தளத்துக்கு எடுத்துச்செல்ல ஆரம்பித்திருக்கின்றனர். பொதுவாக திருமணமாகி பல வருடங்கள் குழந்தை இல்லையென்றால் தான் செயற்கை கருத்தரிப்பு மையங்களை நாடுவார்கள் ஆனால்  சென்னை போன்ற பெரு நகரங்களில்,  திருமணமாகி ஒரு வருடம் முடிவதற்குள் கூட செயற்கை கருத்தரிப்பு மையங்களின் வாசலில் வந்து நிற்க ஆரம்பித்துவிட்டார்கள். 

ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை குறித்த பிரச்னைகளுக்கு உரிய மருத்துவர்களை அணுகாமல்,  பல தவறான தகவல்களை  அள்ளித்தரும் இரவு நேர மிட்நைட் மந்திரங்கள் போன்ற டிவி ஷோக்களை பார்த்ததும், இணையத்தில் தவறான தகவல்களைப்  படித்தும், குழந்தையின்மை குறித்த தவறான புரிதல்களால் பயந்து போய்  கருத்தரிப்பு மையங்களை நோக்கி ஓடுகிறார்கள்.

குழந்தைப்பேறுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் பலர்  செலவு செய்யத் தயாராக இருப்பதால், கருத்தரிப்பு மையங்களில் கனஜோராக வியாபாரம் நடக்கிறது. சிகிச்சைக்காக லட்சங்களில் பணம் பெரும் பல கருத்தரிப்பு மையங்கள் நேர்மையாக செயல்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே இருக்கிறது. பல கருத்தரிப்பு மையங்களைப் பொறுத்தவரையில் அவர்களது  மையங்களுக்கு வரும் தம்பதிகளுக்கு எப்படியாவது குழந்தை தங்க வேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர்,  கருவைச் சுமக்கும் தாயின் உடல்நிலையை பற்றி சில மையங்கள் கவலைப்படுவதில்லை.  குழந்தை தங்க வேண்டும் என்பதற்காக  செலுத்தப்படும் ஹார்மோன் ஊசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து  தெளிவாக  சிகிச்சைக்கு வருபவர்களிடம் விளக்குவதே கிடையாது. தங்களது மையங்களுக்கு வந்தால் 100% குழந்தை பிறக்கும் என உத்திரவாதம் தந்தால் மட்டுமே தொழிலில்  போட்டியாளர்களை சமாளித்து காலூன்றமுடியும் என்பதால் எப்படியாவது குழந்தையை உருவாக்கிவிட வேண்டும் எனத் துடிக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் செயற்கை கருத்தரிப்பு மூலமாக எல்லோருக்கும் தீர்வு சொல்ல முடியாது என்பதே அறிவியல் சொல்லும் எதார்த்தம். 

ஒரு பெண்ணுக்கு  குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றால் அதை நேரடியாக பெரும்பாலான கருத்தரிப்பு மையங்கள் சொல்வது கிடையாது.  அதேசமயம் சில தம்பதிகளும் தங்களுக்கு குழந்தை பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை, எப்படியாவது குழந்தைப் பெற்றுவிட வேண்டும் எனத் துடிக்கிறார்கள்.  தமிழகத்தில்  மட்டுமின்றி,  உலகம் முழுவதும் இருக்ககூடிய பிரச்னை இது. மிகவும் சிக்கலான உளவியல்ரீதியான பிரச்னையும் கூட.

இந்தியாவில் வாடகைத்தாய்

அயல்நாடுகளில் வசிக்கும் பணவசதி படைத்த பலர் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள  இந்தியாவில் வறுமையில் வாடும் பெண்களைப் பயன்படுத்துவது வெளிப்படை. இந்தியாவில் வாடகைத்தாய் நடைமுறை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதை பயன்படுத்தி அயல் நாட்டில் இருப்பவர்களுக்கு இங்குள்ள ஏழைப் பெண்களை வாடகைத்தாயாக்கி  பல புரோக்கர்களும், கருத்தரிப்பு மையங்களும் பல லட்சங்களில் வருமானம் ஈட்டி வருகின்றன. பல ஹார்மோன் ஊசிகளை போட்டுக்கொண்டு, யாரோ ஒருவருக்காக குழந்தையை சுமந்து, உடலை உருக்கி செய்யும் வேலைக்கு,  புரோக்கர்கள் பத்தில் ஒரு மடங்கு பணத்தை மட்டும் தந்து ஏமாற்றவும் செய்கிறார்கள். இந்நிலையில்  அயல்நாட்டினருக்கு குழந்தை பெற்றுத்தர இங்குள்ள பெண்களை வாடகைத்தாயாக பயன்படுத்தக்கூடாது என சில மாதங்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருக்கிறது  உச்சநீதி மன்றம்.  

கருத்தரிப்பு மையங்களில் நடக்கும் முறைகேடுகள் வெளிப்படையாகத் தெரிவது கிடையாது. கருத்தரிப்பு மையங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், சிகிச்சை பெறுபவரின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கும் கடுமையான சட்டங்கள் தேவை. சில ஃபெர்டிலிட்டி சென்டர்கள் பணத்துக்காக பல்வேறு அயோக்கியத்தனங்களைச் செய்வதாக வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. தம்பதிகள்  சிகிச்சைக்கு வரும்போது கணவருக்கு விந்தணுக்கள் தரம் குறைவாக இருப்பதை கண்டுபிடித்தால் அவரிடம்  இருந்து அதை வாங்கி பலப்படுத்துவாக சொல்கிறார்கள். இதற்கு சில ஆயிரங்கள் முதல் லட்சம் வரை கூட வசூலிக்கிறார்கள். தன்னிடம் குறைபாடு இருந்தாலும் தனது விந்துவில் இருந்து வாரிசு உருவாகும் வாய்ப்பு இருப்பதால் கணக்கு பார்க்காமல் செலவு செய்கிறார்கள். ஆனால் அதை அப்படியே தூக்கிப்போட்டுவிட்டு ஏற்கனவே விந்து தானம் செய்த மற்றொருவரின் விந்தணுவை எடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு செலுத்திவிடுவதாக சர்ச்சைகள் எழுகின்றன. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மையக்கருவாக கொண்டு மேலோட்டமான முறையில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது, 

கருத்தரிப்பு

 மற்றொரு நபரின் விந்துவை ஒரு பெண்ணுக்கு செலுத்துவதாக இருந்தால் தம்பதிகள் இருவரிடமும் கையெழுத்து வாங்கவேண்டும் . கையெழுத்து பெற்று சட்டபூர்வமகாவே இந்த சிகிசிச்சையை செய்ய முடியும்.  ஆனால் அவற்றையெல்லாம் பின்பற்றாமல் மறைமுகமாக பணத்துக்காக  சில மையங்களில் தில்லுமுல்லு நடக்கின்றன. கருத்தரிப்பு மையங்கள் செல்வதே ஆபத்து என இக்கட்டுரை மூலம் பயமுறுத்த முயலவில்லை. கருத்தரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று ஆரோக்கியமான குழந்தைகளுடன்  மகிழ்ச்சியுடன் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். கருத்தரிப்பு மையங்கள் தான் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் வசந்தம் தந்துள்ளது. ஆனால் கருத்தரிப்பு மையம் என்பது ஒரு வியாபாரமாக மாறும்போது, மக்கள் விழிப்புடன் இல்லாத பட்சத்தில் கருத்தரிப்பு மையங்களில் பல்வேறு  முறைகேடுகள்   நடப்பதற்கும், சிகிச்சை பெறுபவர்கள் ஏமாற்றப்படவும் வாய்ப்பு  இருப்பதை மறுக்க முடியாது.

 

குழந்தையின்மை சிகிச்சைகள் பற்றி விரிவாக  மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் தாட்சாயினியிடம் பேசினேன்

டாக்டர் தாட்சாயிணி

"பொதுவாக ஆணிடமோ, பெண்ணிடமோ உடல் ரீதியாக எதாவது பிரச்னை இருந்து அதனால் குழந்தை பிறக்கவில்லை என்றால் மட்டுமே சிகிச்சை  தரப்படுகிறது. ஆனால் கருத்தரிப்பு மையங்களுக்கு வருபவர்களில் சுமார் 40 % பேருக்கு வேலைப்பளு,  மன அழுத்தம், உடலில் ஏதாவது சிறு பிரச்னைகள், தம்பதிகளுக்கு இடையே புரிதலின்மை  போன்றவற்றின் காரணமாகவே தாம்பத்திய வாழ்வில் இருந்து குழந்தை பிறப்பதில்லை. கவுன்சலிங் மற்றும் சில சாதரணமான  சிகிச்சைகள் மூலமாக இயற்கையான முறையிலேயே இவர்களுக்கு குழந்தை பிறந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்கவில்லை எனில் சம்பந்தப்பட்ட இருவருக்கும்  பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை, அவற்றின் வடிவம் (Morphology) நகரும் திறன் (mobility) ஆகியவை மிக முக்கியம். சிலருக்கு உயிரணுக்கள் உற்பத்தியே இல்லாமல் இருக்கலாம், சிலருக்கு உற்பத்தி இருந்தாலும் சில தடைகள் காரணமாக வெளியே வருவதில் சிக்கல் இருக்கலாம். 

பெண்களைப் பொறுத்தவரையில் கருக்குழாய்கள்( fallopian tube)  ஒழுங்காக வளராமல் இருந்தாலோ, அவற்றில் ஏதேனும் தடை இருந்தாலோ,  கருக்குழாய் பிறவிக்குறைபாடுகளால் பாதிக்கபட்டிருந்தாலோ பிரச்னை தான். இது தவிர பெண்களின் சினைப்பையில் ஏதேனும் கோளாறுகள், பிசிஓடி எனச்சொல்லப்படும் சினைப்பை நீர் கட்டிகள் பிரச்னை இருந்தால் குழந்தைப்பேறு அடைவதில் சிக்கல் ஏற்படலாம்.  கர்ப்பப்பை ஒழுங்கான வடிவத்தில் வளராமல் நின்று போய்விட்டாலோ, மிகச்சிறியதாக இருந்தாலோ, கர்ப்பப்பையில் தொற்று காணப்பட்டாலோ, கர்ப்பபையில் காசநோய் ஆகியவை இருந்தால் கரு உருவாகாத நிலை ஏற்படலாம். இது  மட்டுமின்றி ஒரு சிலருக்கு உடலில் இதுபோன்ற எந்த பிரச்னைகள் இருந்தாலும் தாம்பத்ய வாழ்கை மூலம் குழந்தை பெற முடியாத நிலையும் இருக்கிறது. 

கருத்தரிப்பு மையங்கள்

பல முறை தாம்பத்யம்  மூலம் முயற்சித்தும் குழந்தை பெற முடியவில்லை எனில் என்ன பிரச்னை என்பதைக் கண்டுபிடித்தால் மட்டுமே தீர்வை நோக்கி நகரமுடியும். பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு மாதவிடாய் காலகட்டத்தில் கரு முட்டை வெளியாகும் சமயங்களில்  பரிசோதனை செய்ய வேண்டும். பெண் மருத்துவர் நேரடி பரிசோதனை செய்த பின்னர், ரத்தப் பரிசோதனை மூலமாக  ரத்தசோகை, தைராய்டு மற்றும் சில ஹார்மோன்கள் பரிசோதனை செய்ய வேண்டும், ஏ.எம்.ஹெச் (AMH) எனச்  சொல்லப்படும் ஆன்டி முலேரியன் ஹார்மோன் பெண்களுக்கு மிகவும் முக்கியம்.

இதன் அளவுகள் நான்கு முதல் ஆறுக்குள் இருந்தால் நல்லது. இரண்டுக்கு கீழ் குறைந்துவிட்டால் சிக்கல் ஏற்படக்கூடும். இது மட்டுமின்றி கர்ப்பை மற்றும் கருக்குழாய்களையும்  பிரத்யேக ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஆண்களைப் பொறுத்தவரையில் ரத்த சோகை, சர்க்கரை அளவுகள் நார்மலாக இருக்கிறதா போன்றவை பரிசோதிக்க வேண்டும். எப்.எஸ் ஹெச் (FSH) ஹார்மோன் சரியான அளவில் உள்ளதா, தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்துவிட்டு  ஆண் மருத்துவர் முன்னிலையில் நேரடி பரிசோதனையும் செய்ய வேண்டும். மிகமுக்கியமாக ஆண்களின் உயிரணுக்கள் பரிசோதனை செய்ய வேண்டும். இதுபோன்ற பரிசோதனைகளை செய்தால் மட்டுமே  யாருக்கு என்ன பிரச்னை என்பதை சொல்ல முடியும். மேம்போக்காக எதையாவது கணித்து சிகிச்சை அளிக்ககூடாது. 

பரிசோதனை முடிவுகளைப் பொறுத்ததே என்ன தீர்வை நோக்கி நகரலாம் என மருத்துவர் முடிவெடுக்க முடியும். அவசியமின்றி ஒருவரை செயற்கைக் கருத்தரிப்பு முறைக்கு யாரும் வற்புறுத்தக்கூடாது. பொதுவாக சில மருந்துகள் எடுத்துக் கொள்ளுதல்,  மன அழுத்தம் தவிர்த்தல், பெண்களுக்கு கருமுட்டை வெளியாகும் சரியான நேரத்தில் உடலுறவு வைத்துகொள்வது போன்றவற்றின் மூலம் இயற்கையான முறையிலேயே  கரு உருவாகும்  வாய்ப்பு உள்ளதை  தவிர்த்து விடக்கூடாது. இயற்கையான முறையில் வாய்ப்பே இல்லை என உணர்ந்தாலோ அல்லது தம்பதிகளில் யாருக்காவது பிரச்னை இருந்து இயற்கையான முறைக்கு  கரு உருவாக வாய்ப்பே இல்லை என்ற சூழ்நிலை வந்தாலோ மட்டுமே தம்பதிகள் விருப்பப்படும் பட்சத்தில் செயற்கை கருத்தரிப்பு முறையை நாடலாம். 

ஐ.யு.ஐ - IUI

செயற்கை கருத்தரிப்பு முறையில் முதல் கட்டமே ஐ.யூ.ஐ  (Intrauterine insemination -IUI) முறை தான். அதாவது ஆணின்  உயிரணுவை எடுத்து நேரடியாக பெண்களின் கர்ப்பப்பையில் செலுத்தும் தொழில்நுட்பம். ஒரு முட்டையும், ஒரு உயிரணுவும் இணைந்தாலே கரு உருவாக்கி விடும்.

ஆண்களுக்கு கோடிக்கணக்கில் உயிரணுக்கள் இருக்கும். ஒரு ஆணுக்கு குறைந்தபட்சம் பதினைந்து மில்லியன் உயிரணுக்கள் இருப்பது அவசியம். அதற்கு கீழ் இருந்தால் இயற்கையான முறையில் குழந்தைப் பெறுவது மிகக்கடினம். 10 -15 மில்லியன் உயிரணுக்கள் இருப்பவர்களுக்கு ஐ.யூ.ஐ முறை ஏற்றது. ஆண்கள் நேரடியாக தங்களது  விந்துவை  கருத்தரிப்பு மையங்களில் உள்ள பிரத்யேக பாட்டிலில் சேகரிக்க வேண்டும். ஆண்டிராலாஜி  பரிசோதனைக் கூடத்தில் சிறந்த உயிரணுக்கள் தேர்ந்தெடுக்கப்படும். ஒருவர் மூன்று மில்லி  அளவுக்கு விந்துவை தந்தால், அதை சுத்தப்படுத்தி 0.6 மிலி அளவுக்கு உயிரணுக்களை தேர்ந்தெடுத்து, மனைவிக்கு கருமுட்டை வெளியாகும் சமயங்களில் உடலில் செலுத்திவிடுவார்கள்.

பொதுவாகப் பெண்களுக்கு ஒரு கருமுட்டை தான் மாதவிடாயில் வரும், ஐ.யூ.ஐ முறையில் பெண்களுக்கு சில  மருந்துகள் கொடுக்கப்படுவதால் 2-3 முட்டைகள் உருவாகும். இதனால் கரு உருவாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. அதேசமயம்  இரட்டையர்கள் பிறப்பதற்கான வாய்ப்பும் அதிகரிப்பதை மறுக்க முடியாது. பொதுவாக ஒரு சுழற்சியிலேயே கூட  பலருக்கு  பாசிடிவ் ரிசல்ட் கிடைத்துவிடும். ஒரு சுழற்சியில் கரு உருவாகாவிட்டாலும் கூட குறைந்த பட்சம் மூன்று சுழற்சிகள் வரையாவது  மீண்டும் முயற்சி செய்து பார்க்கலாம். ஐ.யூ.ஐ சிகிச்சை முறையில் 15 -20% பேருக்கு குழந்தை பிறக்கிறது. ஐ.யூ.ஐ முறையில் பத்தில் மீதி ஏழெட்டு பேருக்கு ஏன் குழந்தை பிறக்கவில்லை என்பதற்குத் தெளிவான மருத்துவ  ரீதியிலான விளக்கங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஐ.யூ.ஐ  சிகிச்சையில் இன்னொரு முறை உள்ளது. ஆண்களுக்கு  உயிரணுக்களின் எண்ணிக்கை மிகமிக குறைவாக இருக்கும் பட்சத்தில்,  தம்பதிகள் இருவரும் விரும்பினால் மட்டும் உயிரணு தானம் மூலமாக  இதே சிகிச்சையை செய்யலாம்.  கல்லூரி இளைஞர்கள் போன்ற ஆரோக்கியமான ஆண்கள் பலர்  உயிரணு தானம் செய்கிறார்கள்.  உயிரணு தானம் செய்பவர்களிடம் இருந்து அவர்களின் முகவரி, பெயர், தொடர்பு எண் போன்றவை பெறப்படாது. அனானிமஸ் என சொல்லப்படும் பெயரற்றவர் எனும் முறையில் தான் உயிரணுக்கள்  பாட்டிலில் சேகரிக்கப்படும். அவரின் ரத்த வகை,  கண் மற்றும் தலை முடி நிறம், உயரம் ஆகியவை மட்டும் குறிக்கப்பட்டிருக்கும்.  உயிரணு தானம் முறையில் சிகிச்சை பெறவிரும்புபவர்களுக்கு அவரின் கணவரின் உயரம், நிறம், ரத்த வகையோடு ஒத்துப்போகும் நிலையில்  இருக்கக்கூடியதை  உயிரணு தானம் வங்கியில் இருந்து பெறப்பட்டு மீண்டும் பரிசோதிக்கப்பட்டு தூய்மை செய்யப்பட்டு 'ஆக்டிவ் உயிரணுக்கள்' மனைவியின் உடலில் செலுத்தலாம்.  நடைமுறையில் இம்முறையில் குழந்தை பெறுவதற்கு எளிதில்  சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் இத்திட்டம் சிக்கலானது. கணவர் மற்றும் மனைவி என இருவரின் முழு  ஒப்புதலின் பேரில் மட்டுமே இந்த வகையில்  கருத்தரிப்பு மையங்கள் சிகிச்சை தரவேண்டும் என கட்டுப்பாடு உண்டு. 

Test tube baby

ஐ.வி.எஃப் முறை - IVF (டெஸ்ட் டியூப் பேபி) :-  

விந்தில் பத்து மில்லியனுக்கும் குறைவான உயிரணுக்கள் இருக்கும் ஆண்களுக்கும், சினைப்பை நன்றாக இருந்தும் கருக்குழாய் வளர்ச்சி சரியில்லாத  பெண்களுக்கும் பலனளிப்பது இம்முறை தான். ஏனெனில் கருக்குழாய் வளர்ச்சி சரியாக இல்லையெனில், ஆணின் விந்தணு கருமுட்டையின் சேரும் வாய்ப்பு இருக்காது. இதனால் இயற்கையான பாலுறவு முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாது. ஒருவேளை பெண்ணுக்கு கருக்குழாய் நன்றாக இருந்து, ஆணின் விந்தணுவுக்கு பாயும் திறன் குறைவாக இருந்தாலும் குழந்தை பெறுவது கடினம். ஒரு விஷயம் இங்கே மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் பாலுறவு கொள்வதில் எந்தப் பிரச்னையும் கிடையாது.

 ஐ.வி.எஃப் முறையில் சிகிச்சை பெற முடிவெடுத்தால், பெண்களுக்கு  ஹார்மோன் ஊசிகள் முதலான சிகிச்சை கொடுத்து சில  முட்டைகள் வரை பெறப்பட்டு பாதுகாக்கப்படும். ஆண்களைப் பொறுத்தவரையில் அவர்களிடம் இருந்து விந்து  பெறப்பட்டு பல்வேறு  பரிசோதனைகளுக்குப் பிறகு அதிலிருந்து நல்ல உயிரணுக்கள்  மேம்படுத்தப்பட்டு  தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஒரு டெஸ்ட் டியூபில் பெண்களின் கருமுட்டைகளில் உயிரணுக்களை செலுத்தி எம்ரியோஸ்கோப்பி கருவியில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. கருவும்உயிரணுவும் இணைந்து எம்ரியோக்கள்  உருவான பிறகு மூன்றாவது நாள்  அல்லது ஐந்தாவது நாளில்  எம்ரியோ மனைவியின் உடலில் செலுத்தப்படுகிறது. ஐ.வி.எஃப்  முறையிலும் ஒரே சுழற்சியில் வெற்றிகரமாக குழந்தை பிறந்துவிடும் என சொல்ல முடியாது. இரண்டு மூன்று சுழற்சிகள் கூட தேவைப்படலாம். இம்முறையிலான சிகிச்சையில் 45 -55 % வரை குழந்தை பிறக்கிறது. 

Donor oosite program

சில சமயங்களில் கணவர் ஆரோக்கியமாக இருந்து  மனைவியின்  சினைப்பையில் கோளாறு, கரு முட்டை  எடுக்க முடியாத நிலை, ஆன்டி முலேரியன் ஹார்மோன் மிக குறைவாக இருக்கும் சூழ்நிலை போன்றவற்றில்  இன்னொரு பெண்ணிடம் இருந்து கருமுட்டையைத் தானமாக பெற்று, கணவரின்  உயிரணுவைச் சேர்த்து டெஸ்ட் டியூப் மூலம் எம்ரியோ உருவாக்கி மனைவியின் கர்ப்பப்பையில் வைத்துவிடலாம். இதற்கு 'டோனர் ஊசைட் ப்ரோக்ராம்' எனச்சொல்வார்கள். 

பொதுவாக பெண்களுக்கு கர்ப்பப்பையில் பெரிய அளவில் கோளாறு இருந்தாலோ, கர்ப்பப்பை சரியாக வளர்ச்சி அடையவில்லை என்றாலோ,  அந்த பெண்ணால் கர்ப்பிணியாக முடியாது என்பதே நிதர்சனம். ஆனால் பல பெண்கள் இதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தில் இருப்பதில்லை. கருத்தரிப்பு மையங்கள்  கர்ப்பப்பை சரியில்லை எனில் குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்பதை வெளிப்படையாக சொல்லித்தான் ஆகவேண்டும், 

கர்ப்பப்பை சரி இல்லாத பெண்களுக்காக உருவான முறை தான் சர்ரோகசி என சொல்லப்படும் 'வாடகைத்தாய்' முறை. கணவரின்  உயிரணு மற்றும் மனைவியின் முட்டை அல்லது கருமுட்டையைத்  தானமாக  பெற்று டெஸ்ட் டியூப் முறையில் எம்ரியொ உருவாக்கி   இன்னொரு பெண்ணின் கர்ப்பப்பையில் வைத்து கருவை வளரவைப்பதே வாடகைத்தாய் முறை. கணவர், மனைவி இருவருக்கும் பிரச்னை எனில்  உயிரணு மற்றும் கருமுட்டை இரண்டையும் தானமாகப் பெற்றும் வாடகைத்தாய் முறையில் குழந்தைப் பெற வழி இருக்கிறது"  என  குழந்தைப்பேறுக்கான சிகிச்சை முறைகள் பற்றி விளக்கமாகச்சொன்ன டாக்டர் தாட்சாயினி, 

"தாமதமாக திருமணம் செய்வது, குழந்தையை தள்ளிப்போடுவது போன்றவையும்  இன்பெர்டிலிட்டி வருவதற்கு முக்கிய காரணங்கள். பொதுவாக பெண்கள் கருத்தரிப்பதற்கு 20 - 30 சிறந்த வயது" என்றார். 

குழந்தையின்மைக்கான காரணங்கள் குறித்து  மூத்த பாலியல் மருத்துவரான டாக்டர் நாராயண ரெட்டியிடம் பேசினேன். 

டாக்டர் நாராயண ரெட்டி

"முதலில்  ஆண்கள், பெண்கள் இருவருமே  நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.  ஆண்களைப் பொறுத்தவரையில்  எவ்வளவு உயிரணுக்கள் இருக்கின்றன என்பதும், உயிரணுவின் அவையமைப்பு,  உயிரணுவின் இயக்கம் ஆகிய மூன்றும் முக்கியம். பிறவிக்குறைபாடு, கதிர்வீச்சு மிகுந்த இடங்கள், அதிக வெப்பம் நிலவும் பகுதிகளில் வேலை செய்வது போன்றவை உயிரணுக்களைப் பாதிக்கலாம். ஆணுறுப்பு பகுதிகளில் ஏற்படும் தொற்றுகள் போன்றவை ஆண்களைப் பாதிக்கும் காரணிகள். பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு கருமுட்டை கர்ப்பப்பைக்கு வர வேண்டும். கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கருமுட்டை வரும் சமயங்களில் உறவில் ஈடுபடவேண்டும். பெண்களுக்கு கருக்குழாயில் எதாவது பிரச்னை ஏற்பட்டால் அடைப்பு ஏற்பட்டு கரு  உருவாகாது. சினைப்பை நீர்க்கட்டிகள், ஹார்மோன் பிரச்னைகள், ஜனன உறுப்பு சுத்தமின்மை போன்றவற்றால் பொதுவாக கரு உருவாவதில்லை. ஒரு சிலருக்கு உயர் ரத்த அழுத்தம், காசநோய், சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள் ஏற்பட்டாலும் கரு உருவாகாமல் போகலாம்.  இவை மட்டுமின்றி வேறு சில   காரணங்களாலும் கரு உண்டாகாமல் போகலாம்.

 திருமணம் செய்வதன் நோக்கமே ஆணும், பெண்ணும் இணைந்து உடல் சுகத்தை அனுபவித்து,  ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக  சந்தோஷமாக  நீண்டகாலம் வாழ வேண்டும் என்பதுதான். குழந்தைப்பேறு என்பது திருமணத்தின் ஒரு பகுதி மட்டும் தான். வெறுமனே குழந்தை பெற்றுக் கொள்ள திருமணம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.  நவீன சிகிச்சை முறைகளில்  இணையுடன் உறவில் ஈடுபடாமலே குழந்தை பெற்றுகொள்ள முடியும். எனவே திருமணம் எனும் பந்தத்தை உணர்ந்து முதலில் சந்தோஷமாக இருக்க வேண்டும். குழந்தைக்காக எதிர்பார்த்து மட்டும் இணையுடன் சேரக்கூடாது.

 ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது என்பதே ஒரு விபத்துதான் . ஏனெனில் எந்த சமயத்தில் ஒரு பெண் கர்ப்பம் தரிப்பார் என யாராலும் கணிக்க முடியாது.  ஆணுக்கு ஆண்மை, பெண்ணுக்கு பெண்மை என்பது குழந்தைப் பெறுவதை மட்டும் வைத்துச் சொல்லமுடியாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். முப்பது வயதுக்குள் இருப்பவர்கள் திருமணமான உடனே குழந்தை உருவாக வேண்டும் என எதிர்ப்பார்ப்பது தவறு. திருமணம் ஆகி சந்தோஷமாக இருந்தும் ஒரு வருடம் கழித்தும் குழந்தை இல்லை என்றால் மருத்துவமனைக்கு வரலாம். முப்பது வயதைத் தாண்டியவர்கள் ஆறு மாதத்துக்குப் பின்னர் மருத்துவரைச் சந்திக்கலாம்.  திருமணம் ஆவதற்கு முன்னரே  தனக்கு குழந்தைப் பேறு கிடைக்காதோ, தான் தகுதியற்றவனோ என்பது போன்ற எதிர்மறை எண்ணங்களைத்  தவிருங்கள். உங்களுக்கு பாலியல் தொடர்பான சந்தேகங்கள் ஏற்பட்டால் அதற்கான சரியான விடைகளை மருத்துவர்களைச் சந்தித்து தெரிந்து கொள்ளுங்கள். மன அழுத்தமும், தவறான வாழ்வியல் முறையுமே குழந்தைப்பேறின்மை பிரச்னைக்கு காரணம். சென்னை போன்ற நகர்சூழலில் கடுமையான வேலைப்பளுவால் பலர் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர் . மனம் விட்டுப் பேசினாலே பாதி கோளாறுகள் சரியாகிவிடும் என தெளிவாக விளக்கிய டாக்டர் நாராயண ரெட்டி குழந்தைப்பேறுக்கு சில வழிகளையும் சொன்னார். 

 குழந்தைப்பேறு பிரச்னை தவிர்க்கும் வழிகள்... 

1. சரியான உடல் எடையை பராமரிக்க வேண்டும் 

2. நன்றாக உறங்க வேண்டும்

3. காய்கறிகள், கீரைகள், பழங்கள்  போன்ற  ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சமச்சீர் உணவுகளைச் சாப்பிடவேண்டும்.

4. மன அழுத்தத்தை தவிர்க்கவும்.

5. சிகரெட், மதுப்பழக்கத்துக்குத் தடை போடுங்கள். 

6. நல்ல சுற்றுப்புறச்சூழலை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.

7. ஃபாஸ்ட் புட் முதலான குப்பை உணவுகளை தவிர்க்கவும். 

8. ஜனன உறுப்புகளை சுத்தமாக வைத்திருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

9. தேவையற்ற பயமோ, பதற்றமோ நிச்சயம் வேண்டாம். எந்த சந்தேகம் இருந்தாலும் ரகசியமாக தவறான தீர்வை நாடாமல், நல்ல மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறுங்கள்.

 சிகரெட்டும் மதுவும் எமன்கள்!

 

டாக்டர் தர்மராஜன்

குழந்தையின்மை பிரச்னைக்கு  அதிகரித்து வரும் சிகரெட் மற்றும் மதுப்பழக்கம் ஒரு முக்கியமான காரணம் எனச் சொல்கிறார் ஆண்ட்ராலாஜி  நிபுணர்  பி. தர்மராஜ் .

cigaret

"சிகரெட் பிடிக்கும்போது அதில் உள்ள நச்சுக்கள் ஆண்கள், பெண்கள் இருபாலரின் பாலுறுப்புகளையும் பாதிக்கின்றன. ஆண்களுக்கு உயிரணுவின் வீரியத்தை சிகரெட் குறைத்துவிடுகிறது. உயிரணுவின் எண்ணிக்கை குறைவதற்கும், உயிரணுவின் இயக்கம் உடலில் சுணங்கிப் போவதற்கும் சிகரெட்டில் இருக்கும்  நிகோட்டின்  முதலான நச்சுக்கள்  முக்கிய காரணம். சிகரெட் பிடிப்பதால் உயிரணுவின் அமைப்பியல் மாறிவிடுவதால் கரு உருவாகும் வாய்ப்பு குறைந்துவிடுகிறது. தொடர்ந்து சிகரெட் குடிக்கும்போது தரமற்ற உயிரணுக்கள் தான் உடலில் இருக்கும். இந்த உயிரணுக்கள் கரு முட்டையை அடைந்து கரு உருவானாலும் எந்நேரத்திலும் கரு களையவும்  வாய்ப்பிருக்கிறது.  ஒருவர் சிகரெட் பிடிப்பது அவரை மட்டும் பாதிப்பது இல்லை. அவருக்குப் பிறக்கும் குழந்தைக்கு மரபுரீதியாகவே பல்வேறுவிதமான உடல்நலக் குறைபாடுகள் வருவதற்கும் சிகரெட்தான் முக்கியமான காரணம். கரு கலைந்தால் பெண்களிடம்தான் பிரச்னை எனத் தவறாக நினைக்கின்றனர். இயங்குதிறன் குறைந்த, தரமற்ற விந்தணுக்கள் காரணமாகவும் கரு கலையலாம். அதற்கு சிகரெட் மிக முக்கியக்  காரணம்.

ஆல்கஹால் அருந்துவதால்  நன்றாக உடலுறவில் ஈடுபட முடியும் என்பது தவறான வதந்தி. அடிக்கடி ஆல்கஹால் அருந்துபவர்களுக்கு உடலுறவு தொடர்பான உணர்வுகள் தற்காலிகமாக அதிகரிக்கும். ஆனால், ஆணுறுப்பு எழுச்சி அடையும் தன்மையே  குறைந்துவிடும். தற்போது பதின் வயதிலேயே மது அருந்தத் தொடங்கிவிடுகிறார்கள். மது, கல்லீரலை மட்டும் அல்ல, உயிரணுக்களையும்  சிதைக்கும்.அளவுக்கதிகமாக மது அருந்தினால் உயிரணுக்கள் குறைந்து போகும் வாய்ப்பும் உண்டு. 18 வயதில் மது அருந்தத் தொடங்குபவர்களுக்கு, திருமண வயதில் குழந்தைப்பேறின்மை பிரச்னை வந்தாலோ, உடலுறவில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்றாலோ, அதற்கு ஆல்கஹால் மிக  முக்கியக் காரணமாக இருக்கும். ஆணுறுப்பு எழுச்சி அடைவதில் பிரச்னை; உயிரணுக்களையும்  செயல்திறனும் குறைகிறது என்பதால், மது அருந்துவதை அடியோடு தவிர்ப்பதே சிறந்தது. 

மது மற்றும் சிகரெட்

சிகரெட், மது அருந்தினால் குழந்தை பிறக்காது எனச் சொல்லமுடியாது. ஆனால் குழந்தைப்பேறு பிரச்னை ஏற்படுவதற்கு இவை மிக முக்கியமான காரணங்கள்.  நமக்கிருக்கும் ஒரே ஆறுதல் என்னவென்றால்  சிகரெட், மது போன்றவற்றை நாம் அறவே தவிர்த்துவிட்டால் மெல்ல மெல்ல  உயிரணுக்கள் உற்பத்தி சீராகிவிடும் என்பது தான். எனவே அவற்றை விட்டொழித்தால் கவலை வேண்டாம்" என்றார் டாக்டர் தர்மராஜ்.

உடல் ரீதியாக குறைபாடுகள் இருந்து  குழந்தை அவசியத்தேவையாக இருந்தால் செயற்கை கருத்தரிப்பு முறையை  நாடுவதில் பிரச்னை இல்லை.  ஆனால்,  உடல் ரீதியாக குறைபாடு இல்லையென்றால் கூட சிகிச்சைகள் பற்றிய விவரம் தெரியாதவர்கள் எனில் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என நம்பவைத்து செயற்கை கருத்தரிப்பு முறைக்கு மூளைச்சலவையும் சில கருத்தரிப்பு மையங்கள் செய்கின்றனர்.  விந்து தானம், கருமுட்டை தானம் போன்றவை யாரோ ஒருவர் தானமாக அளித்தாலும், இடையில் புரோக்கர்கள் மற்றும் சில கருத்தரிப்பு மையங்கள் இதை லாப நோக்கில் மட்டுமே அணுகுகிறார்கள். கருத்தரிப்புக்காக  எடுத்துக்கொள்ளும் மாத்திரை, ஊசிகள் போன்றவை மிகுந்த வீரியம் வாய்ந்தவை. கருத்தரிப்பு மருந்துகளால் உடலில் ஏற்படும் பக்கவிளைவுகள், கர்ப்பிணிகளுக்கு கரு கலைதல், குறைப்பிரசவம், எடை குறைவான குழந்தைகள் பிறப்பது போன்ற சர்ச்சைகளுக்கான தீர்வு குறித்து மருத்துவ உலகில் இன்னமும் சரியான பதில் இல்லை.

கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்து வருவதற்கு பின்னால் ஒரு விஷயமும் இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் கருத்தரிப்பு பிரச்னை அதிகரிக்கிறது என்பதையே திருப்பித் திருப்பிச் சொல்லி வியாபாரமாக்கி பயமுறுத்த ஆரம்பிக்கிறார்கள், கடந்த சில ஆண்டுகளாக லேகிய வியாபாரிகள், போலி மருந்து விற்பனைகள், மிட்நைட் டாக்டர்கள் நிகழ்ச்சிகள் போன்றவை இரவு நேரம் பெரும்பாலான டிவிக்களை ஆக்கிரமித்திருப்பதில் இருந்தே ஆண்மைக்குறைவு, கருத்தரிப்பு ஆகியவற்றின் பின்னால் எவ்வளவு வலைப்பின்னல் வியாபார மார்கெட் இருக்கிறது என்பதை அறிய முடியும்.  அறிவியல்பூர்வமாக எந்த ஒரு  மருத்துவத்தின் மூலமாகவும், குறிப்பிட்ட மருந்தையோ, லேகியத்தையோ வைத்து குழந்தையின்மையால் அவதிப்படும் அனைவருக்கும் ஆண்மையை அதிகரிக்கவைக்கவோ, கருத்தரிக்க வைக்கவோ முடியாது என்பதே உண்மை. எல்லாமே வியாபாரமயமாகி வரும் சூழலில் கவனமுடன் இருக்க வேண்டியது நம் கடமைதான்.

- பு.விவேக் ஆனந்த் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close