Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வீட்டு வைத்தியத்தில் குடற்புழுவுக்கு குட்பை சொல்லலாம்! #HealthTips

`குடற்புழு’... பெரும்பாலும் குழந்தைகளையும், சில வேளைகளில் பெரியவர்களையும் பாதிக்கிற முக்கியப் பிரச்னைகளில் ஒன்று. உணவை நன்றாக வேகவைத்தல், சுத்தமான நீரைப் பயன்படுத்துதல், சுகாதாரமான சூழ்நிலையில் வசித்தல் போன்றவற்றைத் தொடர்ந்து கடைபிடித்தாலே குடற்புழு உருவாகும் பிரச்னையை மிக எளிதாகத் தவிர்த்துவிடலாம். சுகாதாரமற்ற கழிப்பிட வசதிகள் காரணமாக, நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களைத்தான் இந்தப் பிரச்னை அதிகமாக பாதிக்கிறது. சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் போன்றவற்றால் சுகாதாரமற்றதாக மாறி இருக்கும் மண்ணை, குழந்தைகள் கையால் அள்ளி விளையாடும்போதும், செருப்பில்லாமல் அதன் மேல் நடக்கும்போதும் குடற்புழுக்கள் உடலை வந்தடைகின்றன.

பொதுவாக அனைவராலும் `பூச்சி’ என்றழைக்கப்படும் இந்தப் புழுக்களில் உருளைப்புழு அல்லது நாக்குப்பூச்சி (Roundworm), இதயப்புழு (Heartworm), நாடாப்புழு (Tapeworm), கொக்கிப்புழு (Hookworm) எனப் பல வகைகள் உள்ளன. குடற்புழு பிரச்னை சாதாரணமானதா? இல்லை. இதனால் சில தீவிரமான பின்விளைவுகளும் ஏற்படலாம். கடுமையான வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், குமட்டல், சோர்வு, உடல் எடை குறைவது, அனீமியா போன்றவை உண்டாகலாம். இவ்வளவு பிரச்னைகளை ஏற்படுத்தும் குடற்புழுக்களை இயற்கையான சில எளிய வழிமுறைகளின் மூலம் ஒழித்துக்கட்டிவிட முடியும். எப்படி? சற்று விரிவாகப் பார்ப்போம்... 

குடற்புழு

உலர்ந்த கற்பூரவள்ளி 
குடற்புழுக்களைக் கொல்வதில் உலர்ந்த கற்பூரவள்ளியும், கற்பூரவள்ளி எண்ணெயும் முக்கியப் பங்காற்றுபவை. இரண்டு அல்லது மூன்று துளி கற்பூரவள்ளி எண்ணெயை நீரில் கலந்து, அதனுடன் சிறிது எலுமிச்சைச் சாற்றைக் கலந்து மூன்று வேளை குடித்துவர, குடற்புழு நீங்கும். 

மஞ்சள்

மஞ்சள்
எக்கச்சக்கமான மருத்துவப் பயன்களைத் தரும் மஞ்சளை குடற்புழு சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம். மஞ்சளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். தண்ணீரில் கரைத்துக் குடிக்கலாம். மிக விரைவான, நல்ல பலன் கிடைக்கும். 

கிராம்பு
குடலில் உள்ள புழுக்களை ஒழிப்பதில் கிராம்பு முக்கியப் பங்காற்றுகிறது. கிராம்பு, நுண்ணுயிர்க்கொல்லியாகச் செயல்படக்கூடியது. தினமும் ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், அது ஏற்கெனவே வயிற்றில் இருக்கும் குடற்புழு முட்டைகளை அழிக்கும்; குடற்புழுத் தொற்று மேலும் உருவாகாமல் தடுக்கும். 

கேரட்
கேரட்டை உண்பது குடற்புழுக்களை ஒழிப்பதற்கான ஒரு வழி. இரண்டு கேரட்களை எடுத்து, தோலைச் சீவிக்கொள்ளவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட்டைச் சாப்பிட்டுவந்தால், குடற்புழு நீங்கும். 

எலுமிச்சை

எலுமிச்சை மற்றும் புதினா
ஒரு கப் புதினா சாற்றில் சிறிதளவு எலுமிச்சைச் சாற்றையும், சிறிது கறுப்பு உப்பையும் சேர்த்துக்கொள்ளவும். தினமும் இந்தக் கலவையைச் சாப்பிட்டுவர, எல்லாவிதமான குடற்புழு பிரச்னையும் நீங்கும். 

தேங்காய் 
சிறிய தேங்காய்ச்சில்லை தினமும் மென்று சாப்பிட்டுவந்தாலே, நமது வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்துவிடும். குடற்புழு பாதிப்பு இருப்பதாகத் தோன்றினால், ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட வேண்டும். 

ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய் மற்றும் பால் 
ஒரு கப் இளஞ்சூடான பாலில், இரண்டு டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெயைச் சேர்த்துக்கொள்ளவும். இந்தப் பாலைக் குடித்துவந்தால் மலம் கழிக்கும்போது அதனுடன் குடற்புழுக்கள் வெளியேறிவிடும். ஒரு வாரத்துக்குத் தொடர்ந்து இந்தப் பாலை அருந்திவந்தால், முழுமையான பலன் கிடைக்கும். 

எலுமிச்சை விதை 
எலுமிச்சை விதைகளைப் பொடியாக்கிச் சாப்பிடுவது குடற்புழுவை ஒழிக்க உதவும். எலுமிச்சை விதைகளை அரைத்துப் பொடியாக்கிக் கொள்ளவும். இதை நீருடன் அல்லது எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து பருகலாம். முடிந்தால், எலுமிச்சை விதையைப் பற்களால் கடித்து, மென்று விழுங்கலாம். இது ஓர் எளிமையான வழி. 

மாதுளம்பழம்

மாதுளம்பழச் சாறு
மாதுளம்பழத்தை சாறாக்கிக் குடிக்கலாம் அல்லது அப்படியே சாப்பிடலாம். தினமும் உணவில் மாதுளம்பழம் சேர்த்துக்கொள்வது குடற்புழுக்களைத் தடுக்கும்; வயிற்றைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவும்.

பப்பாளி

பப்பாளி விதைகள்
சுவையான பப்பாளிப் பழத்தை சாப்பிட்டுவிட்டு நாம் தூக்கி எறியும் கறுப்பு நிற விதைகள் உண்மையில் குடற்புழுக்களிடமிருந்து விடுதலை தரும் சக்திபடைத்தவை. பப்பாளி விதைகளைப் பொடியாக்கி, அதை அரைத்து விழுதாக்கி, பப்பாளிப் பழத்துடன் சேர்த்து சாப்பிட்டுவர குடற்புழுக்கள் ஒழியும்; வயிறும் சுத்தமாகும். அடுத்தமுறை அவற்றை தூக்கியெறிய மாட்டீர்கள்தானே?

தக்காளி
இரண்டு தக்காளிகளை அரிந்து அவற்றுடன் கறுப்பு உப்பு மற்றும் மிளகு சேர்த்துக்கொள்ளவும். இந்தத் தக்காளியை தினமும் சாப்பிட்டுவந்தால், வயிறு மற்றும் உடலில் ஏற்படும் தொற்றுக்கள், குடற்புழுத் தொற்றுகளுக்குத் தீர்வாக அமையும். 

பூண்டு

பூண்டு
பூண்டு வாசனை சிலருக்கு விரும்பத்தகாதது. ஆனால், இது வயிற்றில் இருக்கும் குடற்புழுக்களை வெளியேற்றும் ஆற்றல் படைத்தது. அதோடு பூண்டு பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராகச் செயல்படும் தன்மையைக் கொண்டது. எனவே, இது உடலில் பாக்டீரியா நுண்ணுயிரிகளைக் (Microbes) கொல்வதில் சிறப்பாகச் செயல்படுகிறது.  தினமும் சிறிதளவு பூண்டை மென்றுவர, அது குடற்புழுக்களை அழிக்கும்; மீண்டும் உருவாகாமல் காக்கும். 

மோர்

மோர் மற்றும் தயிர்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் மோர் மற்றும் தயிரில் நன்மை தரும் நுண்ணுயிரிகள் உள்ளன (Probiotics). இவை குடற்புழுக்களை அழிப்பதோடு, `கேண்டிடா' (Candida) எனப்படும் ஒரு வகை தொற்றுக்கும் இயற்கை மருந்தாகப் பயன்படுகின்றன. 

பச்சைக் காய்கறிச் சாறு
கேரட், முட்டைக்கோஸ் போன்ற பச்சைக் காய்கறிகளின் சாறு உடலுக்கு ஏராளமான நன்மைகள் தரும். காய்கறிகளின் சாறுகளில் முக்கியமான ஊட்டச்சத்துகள் நிறைவாக உள்ளன. இவற்றை சாறுகளில் இருந்து உடல் உறிஞ்சிக்கொள்கிறது. இவற்றிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் குடற்புழுக்களையும் நச்சுக்களையும் ஒழிப்பதோடு, ரத்த செல்களையும் சுத்திகரிப்பவை.  

அரிசி வினிகர் (Rice Vinegar)
எல்லா வகையான வினிகரும் பலவிதமான நோய்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன. ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி வினிகரை, ஒரு கப் நீரில் கலந்துகொள்ளவும். வினிகரின் அமிலத்தன்மை கூடக்கூட, அது சிறப்பான பலனைத் தரும் என்பதை நினைவில்கொள்ளவும். குடற்புழுக்களை அழிக்க இந்தக் கலவையை தினமும் குடிக்கலாம். கடுமையான குடற்புழுத் தாக்கம் இருந்தால், ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு கப் வரைகூட இந்தக் கலவையைப் பருகலாம்.

இந்த வழிமுறைகளில் நமக்கு எளிதான ஏதாவது ஒன்றைக் கடைப்பிடிக்கலாம். குடற்புழு பிரச்னை சாதாரணமானது அல்ல. நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கக்கூடியது. சமயத்தில் உயிரிழப்பு நேரும் அளவுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே, வருமுன் காப்போம். இவற்றை ஒழித்துக் கட்டுவதற்கான எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவோம்!  

- அகில் குமார்
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close