Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவப்பு தக்காளி... அதன் நிறமே புற்றுநோய்கான தடுப்பு கவசம்தான்!

க்காளி... நம் வீட்டு அன்றாடச் சமையலில் முக்கிய இடம் பிடிக்கக்கூடியது. மலிவு விலையிலும் கிடைக்கும்; அதேநேரம் மலைபோல விலை உயர்ந்து மக்களைத் திக்குமுக்காடவும் செய்யும் இந்தத் தக்காளி மருத்துவக்குணம் நிறைந்தது என்றால் அது மிகையாகாது. இதைப் பழமாக அப்படியே சாப்பிடலாம். சட்னி, தொக்கு, கூட்டு, பொரியல், சாம்பார் எனப் பல்வேறு வடிவங்களில் சமைத்தும் சாப்பிடலாம். எப்படிச் சாப்பிட்டாலும் தக்காளியின் குணம் நம்மை வந்து சேரும்; மருந்து கண்டுபிடிக்கப்படாத, குணப்படுத்த முடியாத நோய்களுள் ஒன்றான புற்றுநோயை வராமல் தடுப்பதோடு, வந்ததை மேலும் பரவாமல் தடுக்கும் வல்லமை இதற்கு உண்டு என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதன் மருத்துவக்குணங்கள் பற்றி அறிவோமா? 

தக்காளி


தக்காளியின் நிறம் சிவப்பு என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இந்தச் சிவப்பு நிறத்துக்கு அதில் உள்ள லைகோபீன் (Lycopen) என்ற நிறமியே காரணமாகும். இந்த லைகோபீன் இதற்கு நிறம் தருவதோடு நின்றுவிடாமல் நமது உடலுக்கும் பல்வேறு நன்மைகளைச் செய்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் சருமம் முதிர்ச்சி அடையாமல் காக்கும் பணியைச்செய்கிறது. 

மேலும் பொதுவாக லைகோபீன், நச்சுப்பொருட்களை வெளியேற்றவும், புற்றுநோய் பாதித்த திசுக்களுடன் போராடி நோய்க்கிருமிகளுக்கு எதிராகச் செயல்படக்கூடியது. 

ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதித்த ஆண்கள் தக்காளி சாப்பிட்டு வந்தால் நோயின் தீவிரம் வெகுவாகக் குறையும். நோய் பாதிப்பதற்குமுன் வழக்கமாக வாரத்துக்கு ஒன்றரை கிலோ தக்காளி சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு இந்த நோயின் வருவதற்கான சாத்தியம் 20 சதவிகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. அதனுடன் புரோக்கோலியைச் சேர்த்துச் சாப்பிடுவதாலும் ப்ராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் தடுக்கப்படுகிறது. 

தக்காளி உணவுகளைப் பெண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு வரக்கூடிய கருப்பை வாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், சுவாசப்பை புற்றுநோயிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். 

புற்றுநோயைத் தடுக்கும்

கரோட்டினாய்டு (Carotenoids) என்பது செடிகள், பழங்கள் போன்றவற்றை வண்ணமயமாக மாற்றும் ஒரு நிறமியாகும். லைகோபீனைத் தவிரத் இதில் ஆல்ஃபா கரோட்டின், பீட்டா கரோட்டின், லூட்டின் (Lutein) போன்ற கரோட்டினாய்டுகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் நம் உடலை நலமாக வைத்துக்கொள்ள உதவக்கூடியவை. 

இதன் தோலை நீக்காமல் சாப்பிடுவதால் அதிலுள்ள நிறமிகளின் பலன்கள் முழுமையாகக் கிடைக்கும். இவை கட்டி, வீக்கம் போன்றவற்றுக்கு எதிராகச் செயல்படக்கூடியவை. தக்காளியில் குவர்சிடின் (Quercetin), கேம்ஃபெரோல் (Kaempferol) போன்ற பிளேவனாய்டுகள் உள்ளன. இவை பெரும்பாலும் தோலில் காணப்படுகின்றன. இவை கட்டி மற்றும் வீக்கங்களுக்கு எதிராகச் செயல்படக்கூடியவை. 

கண்களில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் வைட்டமின்-ஏ குறைபாட்டால் ஏற்படுகிறது. தக்காளியில் உள்ள வைட்டமின்-ஏ, கண் பார்வையை மேம்படுத்த உதவக்கூடியது. மேலும் இந்த வைட்டமின்-ஏ மாலைக்கண் நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். லூட்டின் (Lutein), சியாக்ஸந்தின் (Zeaxanthin) போன்ற கரோட்டினாய்டுகள் இதில் இருப்பதால் அவை கண் திசுக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் ஒளியிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். 

இதை உணவில் எந்த வகையில் சேர்த்துக்கொண்டாலும் பலன் கிடைக்கும். தக்காளிச்சாற்றை முகத்தில் பூசுவதால் முகத்தில் வழியும் எண்ணெய்ப்பசை அகலும். விதையுடன் சேர்த்து அரைத்த தக்காளியை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவ வேண்டும். இதைத் தினமும் இரண்டு, மூன்று முறை செய்து வந்தால் எண்ணெய்ப்பசை, கருமை நிறம் மறையத்தொடங்கும். இது பெண்களுக்குப் பெரிதும் கைகொடுக்கும். ஆக வெறும் தக்காளிச்சாற்றைப் பூசினாலே கைமேல் பலன் கிடைக்கிறது. 

இதேபோல் முகப்பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையவும் தக்காளிச்சாறு உதவுகிறது. இந்தச் சாற்றுடன் அதே அளவு வெள்ளரிச்சாறு கலந்து பஞ்சில் தடவி முகத்தில் தடவி அது காய்ந்ததும் கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறைந்துவிடும். 

இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதிலுள்ள அதிகப்படியான பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். மேலும், பக்கவாதம் வராமல் தடுக்கக்கூடியது. இது சார்ந்த உணவுவகைகளுடன் ஆலிவ் எண்ணெயைச் சேர்த்துக்கொண்டால் இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. 

இதில் உள்ள வைட்டமின்-சி புறஊதாக்கதிர் பாதிப்பு, மாசு ஆகியவற்றிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கக்கூடியது. கொலாஜன் (Collagen) என்ற தோல் திசு நன்றாகச் செயல்படவும் உதவும். 

தக்காளியை சூப் செய்து குடிப்பதன்மூலம் இருமல், சளித்தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம். பழுத்த தக்காளி ஒன்றுடன் நான்கைந்து பூண்டுப்பற்களைச்சேர்த்து நசுக்கி கொதிக்க வைத்து உப்பு சேர்த்தால் சூப் தயார். மிளகு, சீரகம், கொத்தமல்லித்தழை சேர்த்து இன்னும் கொஞ்சம் கூடுதல் சுவையுடனும் சூப்பைத் தாயார் செய்யலாம். எப்படிச் செய்தாலும் இதன் சூப்பினை இருமல், சளித்தொந்தரவு ஏற்பட்டதும் அருந்தினால் பலன் கிடைக்கும். 

உடல் பருமன் குறைக்க விரும்புகிறவர்கள், பழுத்த தக்காளியைச் சாப்பிடுவதன்மூலம் நிவாரணம் பெறலாம். இவைதவிரச் சரும நலன் முதல் மனஅழுத்தம் வரை தீர்வு தரக்கூடிய தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டு பலன் பெறலாம். 

தக்காளியைப் பயன்படுத்தி ஒரே மாதிரியான உணவைச் சமைக்காமல், ஒவ்வொருநாளும் விதவிதமாகச் சமைத்து சாப்பிடுவதால் எந்தவித அலுப்பும் ஏற்படாது. தக்காளி ஜூஸ், தக்காளி சூப், தக்காளி சாதம், தக்காளி சட்னி, தக்காளி குழம்பு என எத்தனையோ வழிகளில் சமைத்துச் சாப்பிடலாம். இதை இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.
தக்காளி நம் அன்றாட உணவில் இடம் பெறட்டும்! 

- அகில் குமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close