Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொசுத்தொல்லைக்கு குட்பை சொல்லும் எளிய, ஆரோக்கிய வழிமுறைகள்!

தூக்கம் கெடுக்கும், எரிச்சலை உண்டாக்கும், நிம்மதிபோக்கும்... கொசுத்தொல்லை! இவ்வளவு ஏன், மலேரியா, டெங்கு, சிக்கன்குன்யா, ஜிகா போன்ற கடுமையான நோய்களைக்கூட ஏற்படுத்திவிடும் சின்னஞ்சிறிய கொசு! இவற்றை விரட்ட மனிதர்கள் எத்தனையோ வழிகளில் முயற்சி செய்து பார்த்துவிட்டார்கள். எலெக்ட்ரிக்கல் பேட், சுருள், காயில், வலை, லோஷன்... நீண்டுகொண்டே போகிறது பட்டியல். ஆனால் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. கொசுக்களை விரட்ட நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத எளிய, ஆரோக்கியமான வழிமுறைகளும் இருக்கின்றன. அவை...

 

* கற்பூரவல்லி, கற்றாழைச் சாறு இரண்டையும் தண்ணீருடன் சேர்த்துக் கலந்துகொள்ளவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, ஸ்ப்ரே செய்தால் கொசுக்கள் ஓடிப்போகும். 

* புதினா, கற்பூரவல்லி, காட்டுத் துளசி, கற்றாழை, செவ்வந்தி போன்ற செடிகளை வீட்டில் வளர்க்கலாம். இந்தச் செடிகள் இருக்கும் இடத்தை கொசுக்கள் நெருங்காது. 

* காலை, மாலை வேளைகளில் கற்பூரத்துடன் சிறிது சாம்பிராணியைச் சேர்த்து புகையாகப் போடலாம் அல்லது யூகலிப்டஸ் இலைகளை உலரவைத்து, அதைக்கொண்டு வீடு முழுக்கப் புகைபோடலாம். இந்தப் புகை கொசுக்களிடம் இருந்து காக்கும். ஆஸ்துமா நோயாளிகள் இருக்கும் வீடுகளில் மட்டும் புகை போடுவதைத் தவிர்க்கவும்.

* பூண்டு எண்ணெய் மற்றும் தண்ணீரை 1:5 என்ற விகிதத்தில் கலந்து வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவு ஓரங்களில் கட்டி வைத்தால் கொசுக்கள் அண்டாது. 

எலுமிச்சை

* எலுமிச்சைப் பழத்தைப் பாதியாக நறுக்கி, அதில் கிராம்பை நட்டு வைக்கவும். இதன் வாசனை அவற்றை நெருங்கவிடாமல் செய்யும்.. 

* புதினாவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, வீடு முழுக்க தெளிக்கவும். இந்த வாசனைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் கொசுக்கள் பறந்துவிடும்.

* தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சில துளிகள் லாவண்டர் எண்ணெயுடன் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளலாம். இதனால், கொசுக்கள் கிட்டே வராது; சுகந்தமான வாசனையும் கிடைக்கும்.

* கற்பூரத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் மிதக்கவிடவும். இதன் மணம் கொசுக்களை விரட்டும். 

* வேப்ப எண்ணெயையும் தேங்காய் எண்ணெயையும் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளவும். வேப்ப எண்ணெய், யூக்கலிப்டஸ் ஆயில், கிராம்பு எண்ணெய் மூன்றையும் கலந்து வீடு முழுக்கத் தெளிக்கவும். கொசுக்கள் வாசல் தாண்டி உள்ளே வராது. 

* வேப்ப இலை, நொச்சி, ஆடுதொடா, குப்பைமேனி போன்ற இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து காய்ச்சி தைலமாக்கவும். இந்தத் தைலத்தைத் தேய்த்துக்கொண்டால், கொசுக்கள் நம்மை நெருங்காது

* வேப்ப எண்ணெயையும் தேங்காய் எண்ணெயையும் 1:1 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளவும். இது, கொசுக்களிடம் இருந்து நம்மைக் காப்பதோடு, சருமத்தையும் பாதுகாக்கும். இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்தும்கூட. 

* யூகலிப்டஸையும் எலுமிச்சை எண்ணெயையும் சமஅளவில் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளவும். கொசுக்கள் கிட்டே வராது. 

* கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு, அறையின் உள்ளே கற்பூரத்தை ஏற்றிவைக்கலாம்.  20 நிமிடங்களில் அவை இல்லாமல் போய்விடும்.

* வீட்டின் உள்ளேயும் ஜன்னல் ஓரங்களிலும் துளசிச் செடியை வளர்க்கலாம். துளசிச் செடிக்கு கொசுக்களை விரட்டும் ஆற்றல் உண்டு.

* தேயிலை எண்ணெயை உடலில் தேய்த்துக்கொள்ளலாம். தேயிலை எண்ணெய் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு உதவுவது. இது ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கலாகவும் செயல்படும். கொசுக்களிடம் இருந்து நம்மைக் காக்க்கும்.

புதினா

* புதினா, புதினா இலைச் சாறு, புதினா எண்ணெய், புதினா சென்ட் இவையும் கொசுக்களை விரட்டப் பயன்படும். புதினா இலைச் சாறு அல்லது புதினா சென்ட்டை அறையில் ஸ்பிரே செய்யலாம். புதினா எண்ணெயை சருமத்தில் தேய்த்துக்கொள்ளலாம். புதினா செடியை ஜன்னல் ஓரத்தில் வளர்க்கலாம்.

* வெட்டி வேரின் எண்ணெயை உடலில் தேய்த்துக்கொள்ளலாம். வெட்டிவேர் செடியை வளர்க்கலாம். இதன் வாசனை கொசுக்களை விரட்டியடிக்கும். 

* சாமந்திச் செடி, எலுமிச்சை, வேம்பு போன்ற மரங்களை வளர்க்கலாம். இவை கொசுக்களிடம் இருந்து நம்மைக் காக்கும். மேலும், பல நோய்கள் வராமல் தடுக்கும். 

எண்ணெய்

* 30 துளி லாவண்டர் எண்ணெயை இரண்டு டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து  உடலில் தேய்த்துக்கொள்ளலாம். இது கொசுக்களிடம் இருந்து நம்மைக் காப்பதுடன், சருமத்தை பொலிவாக வைத்திருக்கவும் உதவும்.

* தண்ணீர் தேங்கும் இடங்களில்தான் கொசுக்கள் வளரும். எனவே, வீட்டின் மூலைகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொளளவேண்டியது அவசியம். வாரம் இரு முறை கிருமிநாசினியைப் பயன்படுத்தி வீட்டைத் துடைத்து சுத்தமாக வைத்துக்கொள்ளலாம். 
 

- ச.மோகனப்பிரியா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close