Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூந்தலைக் குறைக்கும் தலைமுடி வெடிப்பு... தவிர்க்கும் வழிமுறைகள்

ன்றைக்குப் பலராலும் தவிர்க்க முடியாதது, தலைமுடி தொடர்பான பிரச்னை. இதில் ஒன்று, இரண்டல்ல... பலவிதமான சிக்கல்கள். தலைமுடி உதிர்வு, வழுக்கை, பொடுகு... என மிக நீளமான பட்டியல் அதற்கு உண்டு. இந்தப் பாதிப்புகளில் முக்கியமான ஒன்று, தலைமுடி வெடிப்பு. போதுமான ஈரப்பதம் இல்லாததாலும் புரதச்சத்து, ஊட்டச்சத்து குறைபாடுகளாலும் தலைமுடி வெடிப்பு உண்டாகிறது. இது தலைமுடியின் அழகையும் முகத் தோற்றத்தையும் கெடுத்துவிடக்கூடியது. பெரும்பாலும், இந்தப் பிரச்னை பரம்பரையாக ஏற்படுவது. சில பெண்களுக்கு தைராய்டு போன்ற பிரச்னையாலும் தலைமுடி வெடிப்பு ஏற்படுவதுண்டு. பலருக்கு தலைமுடி வளராமல் போவதற்கான காரணமே இந்த வெடிப்புகள்தான். தலைமுடி வெடிப்பு எப்படி உண்டாகிறது, அதை எப்படிச் சரிசெய்யலாம் என்று விளக்குகிறார் தோல் மற்றும் அழகுக்கலை நிபுணர் அனிதா மணிவண்ணன்...

தலைமுடி வெடிப்பு

தலைமுடி வெடிப்பு (Split Ends) ஏன்?

ஆண்களோ, பெண்களோ இருவருக்குமே அழகுக்கு பிரதான காரணமாக இருப்பது தலைமுடி. அதன் அழகு கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது இருபாலருக்குமே அவசியம். பெண்களின் கூந்தல், ஆண்களின் தலைமுடி இரண்டின் அழகுத் தன்மையையும் சுற்றுப்புறச்சூழல்தான் தீர்மானிக்கிறது. உதாரணமாக ஹேர் டிரையர் போன்ற சாதனத்தைப் பயன்படுத்தினால் தலைமுடி பாதிக்கப்படும். இவற்றின் வெளிப்பாடுதான் தலைமுடி வெடிப்பு. உயிரோட்டம் இல்லாத காரணத்தாலும், போஷாக்கு இல்லாததாலும் தலைமுடி வெடிப்பு ஏற்படுகிறது என்று சொல்லலாம்.அழகுக்கலை நிபுணர் அனிதா மணிவண்ணன்

* சூரிய ஒளி, தூசி, சுற்றுப்புறத் தூய்மையின்மை போன்ற இயற்கைச் சீற்றங்களாலும் தலைமுடி வறண்ட தன்மையை அடைந்து வெடிப்படையும்.

* அடிக்கடி கெமிக்கல்ஸ் நிறைந்த ஷாம்பூ பயன்படுத்தினால், தலைமுடி அதன் ஈரப்பசையை இழக்கும். இதனால் தலைமுடி தானாகவே உடைபடும்; பல கிளைகளாக விரியும்.

* ரசாயனங்களால் தயாரிக்கப்படும் கலரிங் பொருள்களை (டை போன்றவை) உபயோகித்தாலும் முடியின் நுனிகளில் வெடிப்புகள் உருவாகும்.

* வெந்நீரில் குளிப்பது, வெந்நீரால் தலையை சுத்தம்செய்வது தவறு. அதன் வெப்பம் தலைக்குள் புகுந்து, முடியின் வேர்களை பலவீனப்படுத்தும்; முடி முழுவதையும் வெடிப்படையச் செய்யும்.

* நீண்ட நாள்களுக்கு எண்ணெய் தடவாமல் இருப்பதும் முடியில் வெடிப்பை ஏற்படுத்தும்.

* குளோரின் கலந்த நீரில் அதிகம் குளிப்பது தலைமுடியை வறட்சியடையச் செய்யும்.

* தலைமுடி ஆரோக்கியத்துக்கு தேவையான அளவு தாதுக்களும் வைட்டமின்களும் அவசியம்.

* இரும்புச்சத்து இல்லாமல் போனால், முடி வலுவிழந்து பாதிப்புக்கு உள்ளாகும்.

* அழகுக்காக நாம் பயன்படுத்தும் பொருள்களில் உள்ள ரசாயனங்கள் கியூட்டிகலை (Cuticle) பாதிப்படையச் செய்யும். ஒருமுறை பாதிப்படைந்தால், தலைமுடியின் உள்பகுதியும் பலவீனம் அடைந்து, உலர்ந்து போய் முடியை வெடிப்படையச் செய்யும். இதனால் தலைமுடி அழகிழந்து காட்சியளிக்கும். இது பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் ஏற்படும்.

ஆரோக்கியமான கூந்தல்

தடுப்பதற்கான வழிமுறைகள்...

* முடி இல்லாதவர்களுக்கு `இல்லையே...’ என்கிற ஒரு கவலை மட்டும்தான். முடி உள்ளவர்களுக்குத்தான் ஆயிரம் கவலைகள். தலைமுடி வெடிப்படையும்போது, வெட்டிவிடலாம். குறிப்பிட்ட நாள்கள் எனக் கணக்கு வைத்துக்கொண்டு முடியை அவ்வப்போது வெட்டுவதால், வெடிப்பிலிருந்து காத்துக்கொள்ள இயலும். உதாரணமாக, 12 வாரங்களுக்கு ஒருமுறை என கணக்கிட்டு, நுனிகளில் வெடிக்கிற முடிகளை அவ்வப்போது வெட்டினால், முடியும் வளரும்; வெடிப்பையும் தவிர்க்கலாம்.

* தலைமுடியை அலசுவதற்கு முன்னர் எண்ணெய் தேய்த்துக்கொள்வது நல்லது.முடி வறட்சியாகாமல் தவிர்க்க, தலைக்குக் குளிக்கும்போது ஒரு மணி நேரத்துக்கு முன்னரே தேங்காய் எண்ணெயை விரல்களால் தலையில் தடவி, மசாஜ் செய்துகொள்ளலாம்.

* குளித்த பிறகு, முடியைத் துவட்டும்போதும் கவனமாகச் செய்ய வேண்டும். கண்டபடி தலைமுடியைத் துவட்டினாலும், வெடிப்புகள் ஏற்படலாம். தலையைத் துவட்ட பருத்தியால் ஆன துண்டுகளையே பயன்படுத்த வேண்டும். பருத்தி, ஈரத்தை எளிதில் உறிஞ்சிக்கொள்ளும். எனவே, குளித்த பிறகு, 5-10 நிமிடங்கள் வரை மட்டும் பருத்தித் துண்டை தலையில் வைத்திருக்க வேண்டும். பிறகு அப்படியே தலைமுடியை உலரச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், முடி சீராக வளரும்.

* அகன்ற பற்கள் கொண்ட சீப்பைப் பயன்படுத்த வேண்டும். முடியை மென்மையாகக் கையாள வேண்டும். தலைமுடி வறண்டு போனால், அதில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும்.அவற்றை விரல்களால் மிருதுவாகக் கையாள்வது நல்லது.

* வெப்பத் தன்மை கொண்ட சாதனங்களை (டிரையர்) பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

* சூரிய ஒளி, காற்று, குளிர் போன்றவை அதிகமாக நிலவும் தட்பவெப்பநிலையும் தலைமுடியை பாதிக்கும். வெப்பம் முடி வெடிப்பையும், குளிர் கடினத் தன்மையையும் ஏற்படுத்தக்கூடும். எனவே அந்த மாதிரியான சூழ்நிலைகளில் தலையில் ஃகார்ஃப், தொப்பி போன்றவற்றை அணிந்துகொள்ளலாம்.

* வாரத்துக்கு 2-3 முறை மட்டும் தலைக்குக் குளிப்பது முடி ஆரோக்கியத்துக்கு நல்லது.

* ஊட்டச்சத்து நிறைந்த உணவை முறையாக எடுத்துக்கொள்வது முடி ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருக்க உதவும்.

* தலைமுடி வெடிப்பு பிரச்னை மரபுரீதியாகவும் ஏற்படும். அதைத் தடுக்க முடியாமல் போனாலும் தள்ளிப் போட இயலும். எனவே மனஅழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பரீட்சை சமயங்களில் ஏற்படும் மனரீதியான அழுத்தங்களின்போது யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close