Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாய்ப்புண்... தவிர்க்க, தடுக்க எளிய ஆயுர்வேத வழிமுறைகள்!

ஓர் உணவை நாம் எப்போது ரசித்து, ருசித்துச் சாப்பிடுவோம்? முதலில் அது சுவையாக இருக்க வேண்டும். அதைச் சாப்பிடும்போது, எந்தப் பிரச்னையும் இருக்கக் கூடாது. அதாவது, அதை வாயில் வைத்து, பற்களால் மென்று, நாக்கால் ருசித்து விழுங்கும்போது, சாப்பிட முடியாமல் வாயில் வலியோ, புண்ணோ இருக்கக் கூடாது. அப்போதுதான் அமிர்தமாகவே இருந்தாலும், அது ருசிக்கும். இல்லை என்றால், `கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்பதுபோல, பிடித்த உணவு தட்டில் இருந்தும், வாய்ப்புண்ணின் காரணமாக, அதைச் சாப்பிட முடியாமல் போகும்.

வாய்ப்புண்

வெறும் பசிக்காக மட்டுமே வேண்டா வெறுப்போடு உள்ளே தள்ளவேண்டிய நிலை ஏற்படும். பெரும்பாலும், வாய்ப்புண்கள் சரியான உணவின் மூலமாகஅல்லது ஒரு வாரத்துக்குள் தானாகவே குணமாகிவிடும். ஆனால், சில வகைப் புண்கள் வாயிலேயே தங்கி, பாடாகப்படுத்தி எடுத்துவிடும். `சில வாய்ப்புண்கள் மற்ற நோய்கள் நமக்கு இருப்பதற்கான அறிகுறியாகக்கூட இருக்கலாம்’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். வாய்ப்புண் வெகு நாள்களுக்கு ஆறாமல் இருந்தால், அது புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. எனவே, அலட்சியமாக இருக்காமல், புண் ஏற்பட்டதற்கான காரணத்தை அறிந்து, சிகிச்சை பெறவேண்டியது அவசியம்.

 

``எல்லாவிதமான வாய்ப்புண்களுமே தவிர்க்க முடியாததோ, தீர்க்க முடியாததோ அல்ல’’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன். அதோடு, ஆயுர்வேதத்தில் வாய்ப்புண் தொந்தரவுக்காக மேற்கொள்ளப்படும் பல எளிய சிகிச்சை முறைகள், எளிதில் கிடைக்கக்கூடிய பொருள்கள் மூலம் குணப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் விவரிக்கிறார்...ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்

வாய்ப்புண்

தொடக்கத்தில், வாய்ப்புண்கள் கொப்புளங்களாகத் தோன்றும். சில நாள்களில் உடைந்து, சிறு சிறு குழிப்புண்களாக மாறி, வலியை ஏற்படுத்தும். சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். தலைவலி, காய்ச்சல் எனத் தொல்லைகளை உண்டாக்கும்.

காரணங்கள்...

வாய்ப்புண் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக, மலச்சிக்கல், பித்த அஜீரணம், உடற்சூடு, வைட்டமின் சி, பி12, வைட்டமின் சத்து போன்ற ஊட்டச்சத்துக் குறைபாடுகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு, வீரியம் மிக்க மருந்துகள் மற்றும் மாத்திரைகளை உட்கொள்ளுதல், உணவு ஒவ்வாமை போன்றவை காரணமாக அமைகின்றன.

 வாய்ப்புண்

புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், வெற்றிலை, புகையிலை, பான் மசாலா போடுபவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோருக்கு வரலாம். இவை தவிர, வாயைச் சுகாதரமாக வைத்துக்கொள்ளாதவர்கள், குடல் மற்றும் இரைப்பையில் புண் உள்ளவர்கள், மனஅழுத்தம், ஆக்ரோஷ குணமுடையவர்களுக்கு மீண்டும் மீண்டும் வரும் வாய்ப்புகள் அதிகம். பல் துலக்கும்போது பிரஷ்ஷால் இடித்துக்கொண்டால்கூட இது ஏற்படலாம். அதேபோல, டீ அல்லது காபியை அதிகச் சூட்டோடு குடித்தால்கூட வாய்ப்புண் வருவதுண்டு.

உணவுகள்...

வாய்ப்புண் இருக்கும்போது, பச்சைமிளகாய், புளிப்புச் சுவையுடைய உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு சுவைகொண்ட உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வெல்லம், பாசிப் பயறு சேர்த்துக் கஞ்சியாக குடிக்கலாம். கீரை, பசும்பால், தேங்காய்ப்பால், பீர்க்கங்காய், புடலங்காய், நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வெள்ளைப் பூசணிக்காய் அல்லது அகத்திக்கீரையைச் சமைத்து சாப்பிட்டால், உடனடி நிவாரணம் கிடைக்கும். முருங்கைக்கீரை மற்றும் பூ, சிறுகீரையை சமைத்துச் சாப்பிடலாம். கொய்யா இலைகளை மென்று துப்பலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் அதிமதுரப் பொடி அல்லது கடுக்காய் பொடியை வாங்கி, அதைத் தேனில் குழைத்துச் சாப்பிடலாம்.

தேங்காய்ப்பால்

வாய் கொப்பளித்தல்

வாய்ப்புண் உள்ள இடத்தில் சுத்தமான தேனைத் தடவலாம். ஆர்கானிக் ரோஜாப்பூ இதழ்கள் அல்லது கொட்டைப்பாக்கை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, வாய்கொப்பளிக்க வேண்டும். தேங்காய்ப்பாலை குடிக்கலாம்; அதைக்கொண்டு வாய்க்கொப்பளிக்கவும் செய்யலாம்.

வாயில் புண் 

செய்யவேண்டியவை...

உணவு ஒவ்வாமை, மருந்து ஒவ்வாமை இருந்தால் தொடர்புடைய உணவு, மருந்தைத் தவிர்க்க வேண்டும்.

மதுப் பழக்கத்தைக் கைவிட வேண்டும். புகைபிடிக்கக் கூடாது. வெற்றிலை, புகையிலை, பான் மசாலா போடக் கூடாது. சர்க்கரை நோயாளிகள் நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையாமல் பாதுகாக்க, சரிவிகித உணவைச் சாப்பிடவேண்டும்.

அதிகமாகக் கவலைப்பட்டாலும் வாய்ப்புண் வரும் என்பதால், எப்போதும் மன மகிழச்சியோடு இருக்கவேண்டியது அவசியம்.

கவனம்:

பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளின் தாக்குதல் காரணமாக வரும் சின்னம்மை, தட்டம்மை, எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படும்போது வாயில் புண் ஏற்படும். எனவே, வாய்ப்புண் வெகு நாள்களுக்குத் தொடர்ந்தாலோ, குறுகியகால இடைவெளியில் திரும்பத் திரும்ப வந்தாலோ மருத்துவர்களின் ஆலோனையைப் பெறுவது சிறந்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close