Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பசி உண்டாக்கும், பால் சுரக்கவைக்கும், நாடி நரம்புகளை உரமாக்கும்... வெற்றிலை!

வெற்றிலை... `Piper betle' என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இதற்கு தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் போன்ற பல பெயர்கள் உள்ளன. வெற்றிலையில் கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதாரண வெற்றிலை போன்ற வகைகள் உள்ளன. வெற்றிலையில் அதன் இலையும் வேரும் மருத்துவப்பலன்களைத் தரக்கூடியவை. கொடி வகையைச் சேர்ந்த இது, இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெருமளவு விளைகிறது. நம் ஊர்களில் காய்கறிகள் மற்றும் முருங்கை, அகத்தி, வாழை உள்ளிட்டவற்றை வளர்க்கும் கொடிக்கால்களிலும் அகத்தி மரங்களிலும் வெற்றிலையைப் படரவிடுவது வழக்கமாக உள்ளது. ஆனால், யாழ்ப்பாணத்திலோ `கிளுவை’ எனப்படும் மரங்களை நட்டு, அதில் இதன் கொடியைப் படரச்செய்வார்கள். சில இடங்களில் மூங்கில் கம்புகளையும் இதற்குப் பயன்படுத்துவார்கள்.

வெற்றிலை

இதில், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உள்ளன. வீரியம் மிக்க நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பினைல்புரோபின் (Phenylpropene) பொருள் உள்ளது. இது,உடலுக்கு உஷ்ணம் தரக்கூடியது.

வெற்றிலை, உமிழ்நீரைப் பெருக்கும்; பசியை உண்டாக்கும்; பால் சுரக்க வைக்கும்; நாடி நரம்புகளை உரமாக்குவதுடன், காமத்தையும் தூண்டும். இது இயற்கை தந்த அற்புதம். ஆகவே அளவோடு வெற்றிலை சாப்பிட்டுவந்தால், ஆண்மைக்குறைபாடு நீங்கும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

இலைச் சாற்றுடன் தேவையான அளவு நீர் மற்றும் பால் கலந்து பருகிவந்தால், சிறுநீர் நன்றாகப் பிரியும்.

கடுகு எண்ணெயில் வெற்றிலையைப் போட்டு சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால், மூச்சுத்திணறல் மற்றும் இருமல் கட்டுப்படும். இதன் இலைச் சாற்றுடன் கஸ்தூரி அல்லது கோரோசனை சேர்த்து, தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு உண்டான சளி, இருமல் போன்றவை குணமாகும்.

வெற்றிலையை தீயில் வாட்டி, அதனுள் ஐந்து துளசி இலைகளை வைத்து, கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, 10 மாதக் குழந்தைக்கு காலையும் மாலையும் 10 சொட்டுகள் வீதம் கொடுத்துவந்தால் சளி, இருமல் குணமாகும். வெறும் இலையை தீயில் வாட்டி, மார்பில் பற்றுப் போட்டுவந்தால் சளி குறையும். விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் கீல்வாதக் கோளாறுகளுக்கு இதன் இலையை அரைத்துக் கட்டிவந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

வெற்றிலை கொடிக்கால்

கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி எடுத்து அதனுடன் வெந்நீர் கலந்து குடித்து வந்தால், வயிற்று உப்புசம், மந்தம், தலைவலி, நீரேற்றம், வயிற்றுவலி போன்றவை குணமாகும்.

இலையில் ஆமணக்கு எண்ணெயைத் தடவி வாட்டி, கட்டிகளின் மேல் வைத்துக் கட்டினால் கட்டிகள் உடைந்து சீழ் வெளியாகும். இதை இரவில் கட்டுவது நல்லது.

கொழுந்து வெற்றிலையுடன் (ஒன்று) ஐந்து மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். இதை தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 8 வாரம் சாப்பிட்டு வந்தால், இரைப்பை குடல்வலி, அசிடிட்டி, செரிமானம், மலச்சிக்கல் போன்றவை குணமாவதோடு மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி உடல் சுத்தமாகும். பழுத்தநிலையில் உள்ள அதாவது மஞ்சள் நிறத்தில் உள்ள அழுகிய வெற்றிலையைச் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. அது வயிற்றுப்போக்குப் பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

மலச்சிக்கல் பிரச்னை தீர இதன் சாறு பலன் தரும். 30 மி.லி சாற்றை வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது வெற்றிலையை இடித்து இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை தீரும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் அதிகமாகச் சுரக்கவும், மார்பில் பால் கட்டுவதால் வரக்கூடிய வீக்கத்தைக் கரைக்கவும் வெறும் இலையை தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்து மார்பகத்தில் கட்டினால் பலன் கிடைக்கும்.

தேள் கடிப்பதால் ஏற்படக்கூடிய விஷத்தை முறிக்க இரண்டு இலையுடன் ஒன்பது மிளகு சேர்த்து நன்றாக மென்று விழுங்க வேண்டும். அத்துடன் தேங்காய்த்துண்டுகள் சிலவற்றையும் மென்று சாப்பிட்டால், கைமேல் பலன் கிடைக்கும். தேள் கடி மட்டுமல்ல, விஷப்பூச்சிகள் எதுவும் கடித்தால் இதேபோலச் செய்து, நோய் பாதிப்பிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம்.

வெற்றிலை

வெற்றிலை 4, வேப்பிலை ஒரு கைப்பிடி, அறுகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி தண்ணீர்விட்டு, கொதிக்கவைத்து 150 மி.லி ஆக வற்றியதும் வடிகட்டி, தினமும் மூன்று வேளையும் உணவுக்கு முன்னர் 50 மி.லி குடித்துவந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.

வெற்றிலை போடுவதை, `தாம்பூலம் தரித்தல்’ என்பார்கள். பொதுவாக தாம்பூலம் தரிப்பது நல்ல பழக்கமே. ஆனால், அதை தவறாகச் செய்வதால் அது பற்றி ஒரு தவறான புரிதல் இருக்கிறது. அதாவது அதற்கென ஒரு அளவு முறை உள்ளது. மேலும், வெற்றிலையுடன் புகையிலை சேர்த்துப் போடுவதால்தான் அது வேறு சில நோய்களுக்கு வழிவகுக்கும். காலை சிற்றுண்டிக்குப் பிறகு தாம்பூலம் தரிப்பதாக இருந்தால், பாக்கு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது மதிய வேளையில் வெப்பம் அதிகரிக்கும்போது ஏற்படக்கூடிய பித்தம் கூடாமல் பாதுகாக்கும். மதிய உணவுக்குப் பிறகு தாம்பூலம் போடுவதாக இருந்தால் சுண்ணாம்பு அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது உணவில் உள்ள வாயுவைக் கட்டுப்படுத்தும். இரவில் வெற்றிலையை அதிகம் சேர்த்துக்கொண்டால் நெஞ்சில் கபம் தங்காமல் இருக்கச் செய்யும். ஆக, தாம்பூலம் தரிப்பதால் நோய்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close