Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மழை நீரை நேரடியாகக் குடிக்கலாமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

 

மழை நீர்...

மேகம் துப்பும் எச்சிலே

தூயவெண் மழையாம்!

வீணையின் நரம்புபோல்

விழும்  - தாவரங் கட்கெல்லாம் 

தாய்ப்பா லாகும்!'

- இது கவிஞர் சுரதாவின் கவிதை வரி!

மழை நீர் இயற்கையின் வரம். மனிதர்கள் மட்டுமல்ல... பருவநிலை மாற்றத்தையடுத்து மழை நீரை சேமிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அதை குடிநீராகப் பயன்படுத்துவது பற்றியும் பரவலாகப் பேசப்படுகிறது. 

மழை நீர்

 

மழை தான் நிலத்தடி நீரை மேம்படுத்துகிறது. அதனால் தான் வீடுகள் தோறும் மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்ட வேண்டும் என்று அரசு வலியுறுத்துகிறது. பெரும்பாலான வீடுகளில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்டி நேரடியாக நிலத்திற்குள் விடும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கி இருக்கிறார்கள். 

சிலர் மழைநீரை நேரடியாகவே குடிநீராகவும் பயன்படுத்துகிறார்கள்.  மழைநீருக்கும் நிலத்தடி நீருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ள நிலையில் அதை நேரடியாக குடிப்பது நல்லதா? 

மழைநீர் ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான தே.ஞானசூரிய பகவான் இதுகுறித்து விரிவாக விளக்குகிறார். 

ஞானசூரிய பகவான்

"கிணறு, குளம், ஏரி போன்ற நீர் நிலைகளிலும், நிலத்தடி நீரிலும் காரத்தன்மை நிறைந்திருக்கிறது. மேலும் தாது உப்புகளும் இருக்கின்றன. மழைநீரில் காரத்தன்மையும் உப்புத்தன்மையும் குறைவு. மாறாக, அதில் அமிலத்தன்மை இருக்கும் என்பது கூடுதல் தகவல்.

மழை நீர்

நிலத்தடி நீரில் சோடியம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவையும் கூட்டுத் தனிமங்களான குளோரைடு, கார்பனேட், சல்பேட் போன்றவையும் இருக்கின்றன. ஆனால் மழைநீரில் தனிமங்கள் இல்லை என்றபோதிலும் அது சுத்தமானது. தண்ணீரைப் பொறுத்தமட்டில் சுத்தமானதாக இருந்தால் போதுமானது. அதில் தனிமங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. தாராளமாக, நாம் மழைநீரை நேரடியாகக் குடிக்கலாம்.  நாம் உண்ணும் காய்கறிகள், பழங்கள் மற்றும் ஏனைய உணவுப்பொருள்களில் இருந்து அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனால் மழை நீரில் அமிலம் கலந்திருப்பதால் அதைச் சேமிக்கும்போது சரியான வழிகளைப் பின்பற்ற வேண்டும். கூரை, இணைப்புக் குழாய் மற்றும் சேமிப்புத் தொட்டி போன்றவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். பறவைகளின் எச்சம், இலை தழைகள், மண் போன்றவை கலந்து விட வாய்ப்புண்டு. அதனால் அதை தகுந்தமுறையில் பாதுகாக்க வேண்டும்.  திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதி கடலோர கிராமங்களில் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை நிறைந்திருப்பதால் இன்றைக்கும் மழை நீரைத்தான்  சேமித்துப் பயன்படுத்துகின்றனர்..." என்கிறார் அவர்.  

மழை நீர்

மழைநீரை எப்படி பாதுகாப்பாகப் பயன்படுத்துவது? என்று வேளாண் பொறியாளர் பிரிட்டோ ராஜிடம் கேட்டோம்.

பிரிட்டோ ராஜ்

``பல்வேறு பொருள்களை எரிப்பதாலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியே வரும் வாயுக்களாலும்  நம் வளிமண்டலம்  மாசடைந்திருக்கிறது. அதனால் மழை நீரில் அமிலத்தன்மை (Carbonic Acid) கலந்திருக்கும். இது அதிகமாகும்போது, அமில மழையாக மாறும்.  அமிலமழை பெரும்பாலும் தொழிற்சாலை நிறைந்த பகுதிகளில் பெய்யும். எனவே தொழிற்சாலைப் பகுதிகளில் பெய்யும் முதல் மழையில் நனைவதைத் தவிர்க்க வேண்டும். இது தோல் நோய் முதல் முடி கொட்டுவது வரையிலான பிரச்னைகள் ஏற்படுத்தும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக அந்த இடங்களில் கூரை மற்றும் ஓடுகளில் இருந்து பெறப்படும் மழைநீரை அருந்தக்கூடாது. முதல் மழை நீரை விட்டுவிட்டு, அதன்பிறகு சேமிக்கப்பட்ட நீரையும்  குறைந்தபட்சம்  6 மணி நேரம் வைத்திருந்து அதன்பிறகே பயன்படுத்த வேண்டும்.  காரணம் தொட்டியில் சேமித்து வைக்கப்பட்ட மழை நீரில் கரைந்துள்ள பொருள்கள், அமிலங்கள், தூசுகள் அடியில் படிந்துவிடும். சேமிக்கப்பட்ட தொட்டியிலிருந்து தெளிந்த நீரை சூடுபடுத்தி ஆற வைத்து பருகுவது நல்லது. 

தண்ணீரைச் சூடுபடுத்திப் பயன்படுத்த விரும்பாதவர்கள் மணல், கரித்தூள், மணல் என அடுக்கப்பட்ட அடுக்குகளில் நீரை ஊற்றி வடிகட்டி அருந்தலாம். இந்தமுறையில் மழைநீரில் கரைந்துள்ள பெரும்பாலான அசுத்தங்கள் முழுமையாக நீக்கப்பட்டு நல்ல குடிநீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மழைநீராக இருந்தாலும் 5 நாட்களுக்கு பிறகு அதில் நுண்ணுயிரிகள் வளர ஆரம்பிக்கும் என்பதால் 5 நாட்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்

நிலத்தடி நீர் பாறைகளின் இடுக்குகளின் வழியே வரும்போது தாதுஉப்புகள் கரைந்து நிறைந்திருக்கும். ஆனால் மழை நீரில் தாதுஉப்புகள் இருக்காது என்றபோதிலும் அசுத்தங்கள் நீக்கப்படும்போது அது தூய நீராக இருக்கும்..." என்கிறார் பிரிட்டோ ராஜ். 

இதுகுறித்து பொது மருத்துவர் கருணாநிதியிடம் கேட்டோம்.

டாக்டர் கருணாநிதி

`மழை நீரோ, நிலத்தடி நீரோ எதுவாக இருந்தாலும் கொதிக்க வைத்து சூடு ஆறியதும் அருந்தி வந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. பொதுவாக மழை நீரைச் சேமிக்கும்போது அதில் அசுத்தங்கள் கலந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே பாதுகாப்பான முறையில் மழை நீரைச் சேமித்து வடிகட்டி பயன்படுத்த வேண்டியது அவசியம். நிலத்தில் இருந்து கிடைக்கும் தண்ணீரில் பாக்டீரியாக்களும் கிருமிகளும் இருக்க வாய்ப்புண்டு. மழை நீரில் இவை இருக்க வாய்ப்பில்லை. முறையாக  சேமித்துப் அதைப் பயன்படுத்தலாம்.'' என்றார்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close