Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மிஸ் பண்ணக்கூடாத கேரள பிரதேசங்களில் முக்கியமானது இடுக்கி அணை... என்ன சிறப்பு?

கேரளா மாநிலத்தில் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் இருந்தாலும், வர இருக்கும் ஓணம் பண்டிகையை ஒட்டிய நாள்களில், சாரல் மழையோடு சுற்றுலா செல்ல சரியான இடம் இடுக்கி அணை தான். மலையில் இருந்து ஓடிவரும் தண்ணீரை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேக்கிவைத்து மக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும்  பயன்படுத்துவதே அணைகளின் நோக்கம். ஆனால், தண்ணீரை தேக்கிவைத்து மின்சாரம் உற்பத்தி செய்ய கட்டப்பட்டது தான் கேரளாவில் இருக்கும் இடுக்கி அணை. 839அடி உயர குறவன் மலைக்கும், 925 அடி உயர குறத்தி மலைக்கும் இடையில் வளைவாக கட்டப்பட்ட பிரம்மாண்ட அணையாக காட்சியளிக்கிறது இடுக்கி அணை. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய வளைவு அணை என்ற பெருமை இந்த அணைக்கு உண்டு. சுமார் 167.68 அடி உயரமும், 36 ஆயிரம் ஏக்கர் நீர் பிடிப்புப் பகுதியையும் கொண்ட இந்த அணையில் 72டி.எம்.சி அளவு தண்ணீரை தேக்கிவைக்க முடியும்.

இடுக்கு அணை

மின்சார வாரியத்தின் அணை:

பெரும்பாலும் அணைகள் நீர் வளத்துறை அல்லது பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். ஆனால், இடுக்கி அணை மட்டும் கேரளா மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 1975ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 4 ம் நாள் முதல் இந்த அணையில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. சுமார் 750மெகாவாட் மின்சாரத்தை உற்பத்திசெய்வதன் மூலம், கேரளா மாநிலத்தின் 60% மின் தேவையை இடுக்கி அணை பூர்த்திசெய்கிறது. அணையில் இருந்து 43கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மூலமட்டம் என்ற இடத்தில் தான் மின்சாரம் தயாரிப்பு நிலையம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இடுக்கி

சுற்றுலாவிற்கு ஏற்ற இடம் இடுக்கி அணை:

முன்னர் இடுக்கி அணையை சுற்றிப்பார்க்க யாரையும்  கேரள மின்சார வாரியம் அனுமதிப்பதில்லை. சமீபத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுவருகிறது. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் கேரளா பண்டிகை தினங்களிலும் அணைக்குள் செல்ல அனுமதி உண்டு. இரவு அணையின் அருகிலேயே தங்கிக்கொள்ள இரவு விடுதிகளும் உள்ளன. சிறியதும் பெரியதுமாக அணையில் போட்டிங் செல்ல படகுகள் உள்ளன. குடும்பத்தோடு செல்ல மின் மோட்டாரில் இயங்கக்கூடிய சிறிய ரக படகும், மொத்தமாக செல்ல பெரிய படகும் இருக்கிறது. இரண்டிற்கும் தனித்தனி கட்டணம். அணைக்கு செல்ல தனிக்கட்டணம். இடுக்கி அணையை பார்த்து ரசித்துவிட்டு, அதன் அருகில் இருக்கும் சிறுதோணி அணை, குளவாய் அணை என இரண்டு அணைகளுக்கும் செல்லப் பேருந்து வசதி இருக்கிறது. குறவன் குறத்தி மலையில் சிறு குகைபோன்ற இடம் இருக்கும். அதனையும் பார்த்து ரசிக்கலாம். இடுக்கி அணை இருக்கும் பகுதி இடுக்கி சரணாலத்திற்குள் இருக்கும் பகுதி என்பதால், படகில் செல்லும் போது, காட்டுக்கோழி, மலபார் கிரே கார்ன்பில், யானை, புலி, காட்டுப்பன்றி போன்றவற்றை காணலாம். சிலோன் பேரட் என்ற கிளி வகை இங்கே இருக்கிறது. யாழ்பாணத்திலும் இங்கேயும் இருக்கும் இந்த கிளிகளை வேறெங்கும் பார்க்க முடியாது.

இடுக்கி

இடுக்கி அணைக்கு எப்படி செல்வது?

தேனி மாவட்டத்தின் கம்பம் மெட்டு வழியாக கட்டபனை சென்று அங்கிருந்து இடுக்கி அணைக்கு செல்லலாம். குமுளி வழியாக கட்டபனை சென்று அங்கிருந்தும் அணைக்கு செல்லலாம். அல்லது, கொச்சி தொடுபுழா வழியாகவும் அணைக்கு செல்லலாம். மேலும் மூணாறு வழியாகவும் செல்லலாம். காரில் சென்றால் அருகில் இருக்கும் அணைகள், கோவில்களுக்கு எளிமையாக சென்றுவரலாம். ஓணம் பண்டிகை, அதனை ஒட்டிய விடுமுறை தினத்திற்கு சுற்றுலா செல்ல சரியான இடம் இடுக்கி அணை. ஒரு ரவுண்ட் போயிட்டுவாங்க..

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close