Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துருபிடித்த தோட்டாக்களும் வெடிக்காத துப்பாக்கிகளும்..! வலுவடையுமா வனத்துறை?

நாட்டின் வளத்திற்கு 33%  நிலப்பரப்பு காடுகள் தேவை. ஆனால், இந்தியாவில் 23% காடுகள் மட்டுமே உள்ளன. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 6,78,333 ச.கி.மீ. மட்டுமே காடுகள் உள்ளன. இதில் திறந்தவெளிக் காடுகள் - 2,87,769 ச.கி.மீ., பரப்பளவும், அடரத்திக் குறைந்த காடுகள் - 3,39,279 ச.கி.மீ., பரப்பளவும், அடர்த்தி மிகுந்த வனங்கள் என்று - 51,285 ச.கி.மீ., பரப்பளவில் உள்ளன. பல்வேறு வகையான தாவரங்கள் உயிரினங்களை  கொண்ட இந்திய காடுகளை பாதுகாப்பது என்பது மிகப் பெரிய சவாலான விஷயமாகவே இப்போது வரை இருக்கிறது. தோலுக்காகவும், தந்தங்களுக்காகவும், உணவுக்காகவும் கொல்லப்படுகிற விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல்வேறு வகையான  மரங்களை வெட்டி கடத்துவதும் ஆங்காங்கே நடந்துக் கொண்டே இருக்கிறது.  இது போன்ற சூழ்நிலையில் இந்திய காடுகளை காப்பது என்பது வனத்துறைக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.

வனத்துறை

காடுகளின் பாதுகாப்புக்காக வன காப்பாளர்கள், வன சரகர்கள், வனக்காவலர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள் என வனத்துறை சார்ந்த ஊழியர்கள் தங்களுடைய உயிரை பணயம் வைத்திருக்கிறார்கள். சர்வதேச வனப்பாதுகாப்பு சம்மேளனத்தின் படி, இந்தியாவில் 2012 ஆம் ஆண்டில் 34 வனக்காவலர்களும்,  2013 ஆண்டு 14 பேரும், 2014 ஆண்டு  24 வனக்காவலர்களும் பணியின்போது  இறந்திருக்கிறார்கள். வன விலங்குகளை மீட்கும் போதும் விலங்குகளின் தாக்குதல்களில் மட்டும் 20 பேருக்கும் மேலான வனக்காவலர்கள் இறந்திருக்கிறார்கள். யானை தந்தங்களுக்காக, புலிகள் தோலுக்காகவும் கொல்லப்படுவது இப்போதும் கூட இந்தியாவில் நடந்து வருகிறது. மாறி வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப வனத்துறை சார்ந்த செயல்பாடுகளில் மேம்பட்டுள்ளதா என்கிற கேள்வி எழாமல் இல்லை. மேம்படவில்லை என்பதே இப்போதைக்கு நமக்கு  கிடைக்கிற பதிலாக இருக்கிறது.

வனத்துறை  

வனத்துறை செயல்பாடுகள் குறித்து நீலகிரி மாவட்ட கெளரவ வனஉயிர் பாதுகாவலர் திரு சித்திக் அலி அவர்களிடம் பேசியதில் “வனத்துறையை பொறுத்தவரை பட்ஜெட்டில் கடைசி வரிசையில்தான் வருகிறது.வனத்துறைக்கு போதுமான நிதி ஒதுக்குவதில்லை. போலீசுக்கு நிகராக வனக்காவலர்களும் பணி  செய்கிறார்கள் எனும் போது  அவர்களுக்கும் போலீஸ்  துறைக்கு கொடுக்கிற அனைத்து வசதிகளையும்  கொடுத்தாக வேண்டும்.  தமிழ்நாட்டில் வனத்துறையை பொறுத்தவரை  75 சதவீத காலி பணியிடங்கள்  உள்ளன. இருக்கிற வனத்துறை ஊழியர்களைக் கொண்டுதான் ஒட்டு மொத்த காடுகளையும் பாதுகாத்து வருகிறார்கள். வனக்காப்பாளர், வனக்காவலர்களை விட வேட்டைத்தடுப்பு காவலர்களுக்குத் தான் காடுகள் குறித்த அனைத்து  தகவல்களும் தெரியும். 24 மணிநேரமும் காடு சார்ந்து வனத்துறை இயங்குகிற காவலர்களுக்கு போதிய பாதுகாப்போ உத்தரவாதமோ இருப்பதில்லை.

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேல் பணி புரிகிற காவலர்கள் இப்போது வரை ஒப்பந்த பணியாளர்களாகத்தான் இருந்து வருகிறார்கள். அவர்களின் மாத சம்பளமாக ஏழாயிரம் ரூபாய்தான் இருந்தது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இப்போதுதான் 10000 ரூபாயாக உயர்த்தி இருக்கிறார்கள். காடுகளின் ரோந்து செல்கிற வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு எந்த வித ஆயுதங்களும் வழங்கப்படவில்லை. ஆபத்து நேரங்களில் அவர்களாகவே அவர்களை காத்துக் கொள்ளவேண்டிய நிலைதான் இப்போது வரை இருக்கிறது. அவர்களுக்கான காப்பீடு வசதிகள் கூட இல்லாமல்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினால் மட்டுமே காடுகளின் பாதுகாப்பு என்பது 100 சதவீதம் உறுதி செய்யப்படும். வனத்துறையை பொறுத்தவரை அவர்கள் பயன்படுத்துகிற ஆயுதங்கள் 50 வருடங்கள் பழமையானவை. எல்லாம் துருப்பிடித்து இருக்கிற துப்பாக்கிகளைத்தான் இப்போது வரை பயன்படுத்துகிறார்கள். வனம்  சார்ந்த ஆப்ரேஷன் நிகழ்வுகளில் ஒருவரை காப்பாற்ற துப்பாக்கியால் சுட முயற்சிக்கும் போது  துப்பாக்கி வெடிக்காமல் இருந்த சம்பவமும் நடந்திருக்கிறது” என்கிறார். 

இமயமலையில் இருக்கிற  பல்வேறு உயிர்க்கோள மண்டலங்களையும் சேர்த்து இந்தியாவில் சுமார் 110,000 வனப்பாதுகாப்பாளர்கள், துணை வனத்துறை காவலர்கள், காவலாளிகள் உள்ளனர். இந்தியாவில் இருக்கிற தேசியப் படைகளை கணக்கிடும் போது  1.2 மில்லியன் வலுவான வீரர்களைக் கொண்டு ஒட்டு மொத்த  இந்தியாவையும் அவர்கள் பாதுகாக்கிறார்கள். அதே நேரத்தில் இந்தியாவின் புவியியல் பகுதியில் 23% பேருக்கு ஒரு லட்சம் வனத்துறை அதிகாரிகள் மட்டுமே இருக்கிறார்கள். இந்தியாவின் புவியியல் கொள்கை, நாட்டில் இருக்கிற புவியியல் பகுதியை விரிவாக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அப்படி விரிவாக்கம் நடைபெறும் போது, வரும் ஆண்டுகளில் வனத்துறை அதிகாரிகளில் இருந்து வனக்காவலர்கள் வரை அவர்களின்  பணிச் சுமை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. என்கிறார்கள் வல்லுநர்கள்.

வனத்துறை

PC - National Geographic

“வனக்காவலர்களின் பாதுகாப்பைக் உறுதிப்படுத்த நவீன கருவிகளை வனக்காவலர்களுக்கு வழங்க வேண்டும். அதிதீவிர கண்காணிப்புக்கு இப்போதிருக்கிற தொழில் நுட்பங்கள் தவிர்த்து ட்ரோன் (பறக்கும் கேமரா) போன்ற கருவிகள் மிகப்பெரிய உதவியாக இருக்கும். ஊடுருவ முடியாத அடர் காடுகளை கண்காணிக்கவும் பருவக் காலங்களில் வனங்களை காப்பதற்கும் ட்ரோன் தொழில்நுட்பம் உதவியாய் இருக்கும். காடுகளில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை தடுக்கவும், வனவிலங்குகளின் மீட்பிற்கும் ட்ரோன்  உதவும். ஒவ்வொரு வனச் சரகத்திற்கும் ஒரு வனக்காவலரை தேர்ந்தெடுத்து அவருக்கு ட்ரோன் இயக்குவது குறித்து பயிற்சி அளிக்க  வேண்டும். டிஜிட்டல் புரட்சியில் காலடி எடுத்துவைத்திருக்கும் இந்தியா இந்தச் சூழ்நிலையில் வனத்துறை முதன்மை காவலர்களுக்கு போதுமான பயிற்சியை வழங்க வேண்டும்” என்கிறார்கள் துறை சார்ந்த வல்லுநர்கள்.

உயிரைப் பணயம் வைத்து இரவு பகலாக காடுகளை பாதுகாக்கும் காவலர்களின் பாதுகாப்பு இன்றைய தினம் இந்திய அளவில் மிகப் பெரிய கேள்விக்குறியாக இருந்து வருகிறது. வனம் காப்பதும் கூட ஒருவகையில் இனம் காப்பதைப் போலத்தான் என்பதை உணர்ந்து வனத்துறைக்கு தேவையான தொழில்நுட்பங்களை வழங்கி அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே இப்போதைய உடனடித் தேவை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close