Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேரளாவைப் போல தமிழக அரசும் மருத்துவ மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குமா?

நீட் மதிப்பெண் அடிப்படையில், அனைத்து மாநிலங்களிலும் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை நடந்துவருகிறது. இன்னும் ஒன்றிரண்டு நாள்களில் சேர்க்கை நடத்தி முடித்துவிட வேண்டும் என்பதால், மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. மருத்துவக் கலந்தாய்வில் அனைத்து அரசுக் கல்லூரி இடங்களும் வேகமாக நிரம்பினாலும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளிலும் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள இடங்கள் மட்டும் நிரம்பாமலேயே இருக்கின்றன. இதற்குக் காரணம், அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான கட்டணம் 20,000 ரூபாய்க்கும் குறைவு என்பதுதான். ஆனால், சுயநிதிக் கல்லூரிகளில் பத்து லட்சம் ரூபாய்க்கு அதிகமாகவும், நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் 20 லட்சம் ரூபாய்க்கு அதிகமாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு தொகை கொடுத்து சேர முடியாமல் மாணவர்கள் தடுமாறி வருகிறார்கள். இவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகை வழங்கி மருத்துவக் கனவை நிறைவேற்றிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள் கல்வியாளர்கள்.

கல்வி உதவித்தொகை

அளவுக்கு அதிகமான கட்டணத்தால், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் கிடைத்தாலும் சேர்வதற்கு மாணவர்கள் தயக்கம் காண்பித்துவருகிறார்கள். தமிழக மருத்துவக் கலந்தாய்வில் சுயநிதிக் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பவர்கள் 25,000 ரூபாயை வங்கிக் காசோலையாக வழங்க வேண்டும். கல்லூரியைத் தேர்ந்தெடுத்த பிறகு சேரவில்லை என்றால், இந்த 25,000 ரூபாய் திருப்பித் தரப்பட மாட்டாது என்று விதிமுறை இருக்கிறது. ஆனால், கேரளாவில் தனியார் மருத்துவக் கல்லூரியைத் தேர்வுசெய்தால் கட்டணமாகச் செலுத்தவேண்டிய 11 லட்சம் ரூபாயில் உடனடியாக ஐந்து லட்சம் ரூபாயைக் கலந்தாய்வு நடக்கும் இடத்திலேயே தர வேண்டும். மேலும், மீதமுள்ள கட்டணத்துக்கு வங்கி உத்தரவாதம் தர வேண்டும். இது மாணவர்களுக்குப் பேரிடியாக விழ, தனியார் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தவர்கள், கல்லூரிக்குச் செலுத்தவேண்டிய பணம் இல்லாமலும், வங்கி உத்தரவாதம் இல்லாமலும் கண்ணீரோடு ‘கல்லூரியில் சேர விருப்பம் இல்லை' என எழுதிக்கொடுத்துவிட்டு கலந்தாய்விலிருந்து வெளியேறினார்கள். இவர்கள் கட்டண உயர்வு குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார்கள். 

‘வங்கி உத்தரவாதம் இல்லாமலேயே தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு வழங்கப்படும்' என நீதிமன்றத்தில் உறுதிமொழியை வழங்கியிருக்கிறது கேரள அரசு. மேலும், “தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள், கட்டணம் குறித்து கவலைகொள்ளத் தேவையில்லை. மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் பொதுநிதி ஒன்று உருவாக்கப்படும். பொதுநிதியிலிருந்து பொருளாதார அளவில் பின்தங்கிய, தகுதியான மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதற்கான ஆரம்பகட்டப் பணிகளை கேரள அரசு செய்துவருகிறது'' என்று அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

`தமிழக அரசு, மருத்துவக் கலந்தாய்வை நடத்துமா... நடத்தாதா?' என்ற குழப்பத்தில் இருந்த மாணவர்கள், இப்போது வேறுவழியில்லாமல் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்து, சேரவேண்டிய நிலை. ஆனால், கட்டணச் சுமை தாளாமல், 'நிகர்நிலை மருத்துவக் கல்லூரியில் பயில விருப்பம் இல்லை' எனத் தெரிவித்து, தமிழக அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர நீதிமன்றத்தை நாடியுள்ளனர் மாணவர்கள். 

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் நிரம்பிவிட்டன. சுயநிதிக் கல்லூரிகளிலும், நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளிலும் நிரம்பாத இடங்களுக்கு, கல்லூரிகளே உரிய முறையில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இதன் அடிப்படையில், பல கல்லூரிகள் `நேரில் சென்று விண்ணப்பித்து, மாணவர்கள் உடனே கல்லூரியில் சேர்ந்துகொள்ளலாம்' என்று செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து மாணவர்களைச் சேர்த்துவருகிறார்கள்.

கல்வி உதவித்தொகை தமிழக அரசு

இதைப்போலவே, தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் சுயநிதிக் கல்லூரிகளிலும் சேர்க்கை நடக்கவிருக்கிறது. கேரள அரசு மேற்கொண்டிருப்பதைப்போலவே, பொது நிதியை உருவாக்கி இங்கும் சுயநிதிக் கல்லூரியிலும், நிகர்நிலை மருத்துவக் கல்லூரியிலும் சேரும் தமிழக மாணவர்களுக்கு அரசு உதவலாம். ஏற்கெனவே நீட் தேர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மாணவர்களுக்கு இது ஆறுதலாகவும் உதவியாகவும் அமையும்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவர்களை அழைத்து எம்.ஜி.ஆரின் கொடைவள்ளல் தன்மைகுறித்து பெருமை பேசிவரும் அரசு, இதைச் செய்தால் மாணவர்கள் பலனடைவார்கள்.

செய்யுமா தமிழக அரசு?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close