Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமைச்சரவை மாற்றம்: தென் மாநிலங்களில் எடுபடுமா மோடி மந்திரமும், அமித் ஷா தந்திரமும்?!

மோடி அமைச்சரவை மாற்றம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மேலும் ஒன்பது பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே இணை அமைச்சர்களாக இருந்த நான்கு பேர் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஐ.எஃப்.எஸ். அதிகாரி ஹர்தீப் பூரி, மும்பை முன்னாள் காவல்துறை தலைவர் சத்யபால் சிங், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்போன்ஸ் கண்ணன்தனம், மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த வீரேந்திர குமார், கர்நாடகத்தைச் சேர்ந்த ஆனந்த் குமார் ஹெக்டே, ராஜஸ்தானைச் சேர்ந்த கஜேந்திர சிங் ஷெகாவத், பீகாரின் அஸ்வினி  குமார் சவுபே, ராஜ்குமார் சிங், உத்தரப்பிரதேசத்தின் ஷிவ் பிரதாப் சுக்லா ஆகியோர் புதிய அமைச்சர்களாகி உள்ளனர். இவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பதவிப் பிரமாணமும், ரகசியக்காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

புதிய அமைச்சர்கள் மற்றும் கேபினட் அந்தஸ்துக்கு பதவி உயர்த்தப்பட்டவர்களுக்கு இலாகா விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறையின் கேபினட் அமைச்சராகி உள்ளார். இதன்மூலம் இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பாதுகாப்புத்துறையை கூடுதல் பொறுப்பாக மட்டுமே கவனித்தார். 

நிர்மலா சீதாராமன்பியூஷ் கோயலுக்கு ரயில்வே துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ரயில்வே அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு வர்த்தகம் மற்றம் தொழில்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  தர்மேந்திர பிரதானுக்கு கூடுதலாக திறன் மேம்பாட்டுத்துறை வழங்கப்பட்டுள்ளது. முக்தார் அப்பாஸ் நக்வி அவர் வகித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கேபினட் அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த கப்பல்போக்குவரத்து துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நிதித்துறை இணை அமைச்சர் பொறுப்பு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டவர்களின் இலாகா விவரம் :

ஆர்.கே. சிங் (இணையமைச்சர் - தனிப்பொறுப்பு) - மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

ஹர்தீப் சிங் பூரி (தனிப்பொறுப்பு) - வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை

அல்போன்ஸ் கண்ணன்தனம்: சுற்றுலா (தனிப்பொறுப்பு), மின்னணுவியல் மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை இணையமைச்சர்.

இணையமைச்சர்கள் : 

எஸ்.பி. சுக்லா - நிதித்துறை

அஸ்வினி குமார் சவுபே - சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை 

வீரேந்திர குமார் - மகளிர் மற்றும் குழந்தைகள் நலம், சிறுபான்மையினர் நலத்துறை

ஆனந்த் குமார் ஹெக்டே - திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் 

கஜேந்திர சிங் ஷெகாவத் - வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்

சத்யபால் சிங் - மனிதவள மேம்பாடு, நீர் வளம், ஆறுகள் மேம்பாடு, கங்கை நதி மறுசீரமைப்புத் துறை

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஷிவ் பிரதாப் சுக்லா, சத்யபால்சிங், பீகாரைச் சேர்ந்த அஸ்வினி குமார் சவுபே, ஆர்.கே .சிங், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வீரேந்திரகுமார், கர்நாடகாவை சேர்ந்த ஆனந்த குமார் ஹெக்டே, ராஜஸ்தானைச் சேர்ந்த கஜேந்திரசிங் ஷெகாவத், கேரள மாநிலத்தைச் சேர்ந்த அல்போன்ஸ் கண்ணன்தனம் ஆகியோரும் மத்திய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் அடுத்த இந்த இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அம்மாநிலத்திற்கு பிரதமர் மோடி, பிரதிநிதித்துவம் அளித்துள்ளார். இதேபோல், கேரள மாநிலத்திற்கும் அமைச்சர் பதவி வழங்கியுள்ளார். மேலும் பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் மத்திய அமைச்சரவையில் சேர்த்திருப்பதன் மூலம், எதிர்வரும் தேர்தல்களை அவர் கவனத்தில் கொண்டுள்ளார் என்று தெரிகிறது. தவிர, கர்நாடக மாநிலத்தின் லிங்காயத் பிரிவைச் சேர்ந்தவரை மத்திய அமைச்சராக்கியிருப்பதன் மூலம் அந்த சமுதாயத்தினரின் ஓட்டுகளைப் பெற முடியும் என்று பிரதமர் கருதியுள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் பி.ஜே.பி-க்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படும் நிலையில், அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள், அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க-வுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தவிர, பொன். ராதாகிருஷ்ணனுக்கு கப்பல் துறையுடன் கூடுதலாக நிதித்துறை இணையமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் பிரதிநிதியை முக்கியப்படுத்தும் நோக்கில் பிரதமர் செயல்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.

எதிர்வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் பி.ஜே.பி-யை எப்படியும் காலூன்றச் செய்து விட வேண்டும் என்ற முக்கிய குறிக்கோளுடன் அக்கட்சி செயலாற்றிக் கொண்டிருக்கிறது, மத்திய அமைச்சரவை விரிவாக்கமும் அதனை தெளிவு படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது.

ஆனால், கர்நாடகத்தில் மீண்டும் பி.ஜே.பி ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதா? என்பதும், தமிழகத்தில் அக்கட்சி காலூன்ற முடியுமான என்பதும் போகபோகத்தான் தெரியும்.மோடி மந்திரமும், அமித் ஷாவின் தந்திரமும், தென் மாநிலங்களில் எடுபடுமா என்பதை எதிர்காலத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகளை வைத்தே தீர்மானிக்க முடியும் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close