Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மு.க.ஸ்டாலினை சந்தித்த கைலாஷ் சத்யார்த்தி!

நோபல் பரிசுபெற்ற சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, 'பாதுகாப்பான குழந்தைப்பருவம், பாதுகாப்பான இந்தியா' என்ற கோஷத்தை முன்வைத்து, பேரணியை ஆரம்பித்துள்ளார். இந்தப் பேரணி 22 மாநிலங்கள் வழியாக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து, அக்டோபர் 16-ம் தேதி அன்று புதுடெல்லியைச் சென்றடைகிறது. இந்நிலையில், கைலாஷ் சத்யார்த்தி தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். 

கைலாஷ் சத்யார்த்தியுடன் மு.க.ஸ்டாலின்

இதுகுறித்து ஸ்டாலின், 'உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி இன்று என்னைச் சந்தித்தார். கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் பாறையிலிருந்து "பாரத யாத்திரை" தொடங்கியிருக்கும் அவர் 35 வருடங்களுக்கும் மேலாக "குழந்தைகளைப் பாதுகாப்போம்" என்ற இயக்கத்தை ஓய்வின்றி நடத்தி வருகிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்து மதத்தினரையும் அரவணைத்து நடத்தும் இந்த யாத்திரை இந்திய நாட்டின் பன்முகத்தன்மைக்கு மிகச்சிறந்த சான்றாக அமைந்திருக்கிறது.

கைலாஷ் சத்யார்த்தியுடன் மு.க.ஸ்டாலின்

“குழந்தைகள் மீதான அனைத்து வகை குற்றங்களுக்கும் எதிரான போர்” என்ற உன்னத நோக்கத்துடன் தொடங்கியுள்ள “பாரத யாத்திரையின்” வழி நெடுகிலும் "குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வேண்டும்" என்ற ஐந்து முழக்கங்களை ஒரு கோடி மக்கள் உறுதிமொழியாக எடுக்க வைக்கப் போகிறார் என்பது வரவேற்கத்தக்கது. "கல்வி பெறுவது" குழந்தைகளின் அடிப்படை உரிமை என்ற போராட்டத்தில் ஏற்கெனவே வெற்றி கண்ட கைலாஷ் சத்யார்த்தி "கன்னியாகுமரி முதல் டெல்லி" வரை நடைபெறும் இந்தப் பாரத யாத்திரை மூலமும் வெற்றி பெறுவார் என்பதில் நம்பிக்கையிருக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முற்றிலும் தடுக்கப்பட்டு, "உலகமே குழந்தைகளின் நண்பனாக இருக்க வேண்டும்" என்ற அவரது உயர்ந்த நோக்கம் பாரத யாத்திரையின் மூலம் நிறைவேறுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனதார வாழ்த்துகிறேன்' என்று தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close