Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை!

Chennai: 

“இன்ஷூரன்ஸ் எடுத்து பிரீமியம் கட்டி எதுவும் நடக்கலைன்னா கட்டின பணம் வீண்தானே!” இதுதான் இன்ஷூரன்ஸ் எடுக்காமல் தவிர்க்க, பலரும் சொல்லும் காரணம். ஆனால், இன்ஷூரன்ஸ் எடுப்பவர்களைக் கேட்டால், “பெரிய அளவில் நிதிப் பிரச்னை ஏற்படாமல், குறைந்த செலவில் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்ள இன்ஷூரன்ஸ் உதவியாக இருக்கிறது” என்கிறார்கள். இதில் யார் புத்திசாலி என்று நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்.

இன்ஷூரன்ஸ்
 

இன்ஷூரன்ஸ்:

சரி, இப்போது நீங்கள் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள முடிவுசெய்துவிட்டீர்கள். ஆனால், எந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுப்பது? நமக்கு எது சரியான இன்ஷூரன்ஸ் திட்டம்? இவற்றை எல்லாம் தெரிந்துகொள்ளாவிட்டால், நீங்கள் எடுக்கும் பாலிசி உங்களுக்கு பலன் கொடுக்காமல் போகலாம். பலர் இதைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் ஏஜென்ட் சொல்கிறார் என்று ஏதோ ஒரு பாலிசியை எடுத்துவிட்டு க்ளெய்ம் கிடைக்காதபட்சத்தில், இன்ஷூரன்ஸ் திட்டங்களைக் குறை சொல்கிறார்கள். எனவே, இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதற்கு முன், அந்தப் பாலிசியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள். 

முதலில் இன்ஷூரன்ஸ் என்பதை, நமது குடும்பத்தின் பாதுகாப்பாகக் கருதாமல் முதலீடாகப் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பதை பலரும் தவிர்த்துவிடுகின்றனர். அதன் முக்கியத்துவம் பலருக்கும் புரிவதில்லை. ஆனால், இந்தத் திட்டம் எதிர்பாராத நேரங்களில் குடும்பத்தினருக்கு உதவியாக இருக்கும். மிகக் குறைந்த பிரீமியத்தில் குடும்பத்தினரின் எதிர்காலத்தைக் காப்பீடு செய்யலாம். இந்த பாலிசியை எடுத்தவர் பாலிசி காலத்துக்குள் இறந்துவிட்டால் மட்டுமே பாலிசி தொகை குடும்பத்தினருக்குக் கிடைக்கும். பல நாடுகளில் டேர்ம் இன்ஷூரன்ஸ்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த டேர்ம் ப்ளானை, சம்பாதிக்கும் நபர்தான் எடுக்க முடியும். 

டேர்ம் இன்ஷூரன்ஸ், நாம் கேட்கிற தொகைக்கு கவரேஜ் கிடைக்கும் வகையில் இருக்காது. மாறாக, கவரேஜ் தொகையானது பாலிசி எடுக்கும் நபரின் வருமானம், வயது, உடல்நிலை, வேலை ரிஸ்க், தனிப்பட்ட செலவுகள், குடும்பச் செலவுகள் (கல்வி, திருமணம், மருத்துவம் போன்றவை), கடன்கள், எதிர்காலத் திட்டங்கள், இன்னும் சர்வீஸ் உள்ள வருடங்கள் போன்ற அனைத்து விஷயங்களையும் கணக்கில்கொண்டுதான் நிர்ணயிக்கப்படும். ரிஸ்க் குறைவாக உள்ள பாலிசிதாரருக்கு பிரீமியம் குறைவாகவும், ரிஸ்க் அதிகமுள்ளவருக்கு பிரீமியம் அதிகமாகவும் இருக்கும். புகை, குடிப்பழக்கம் இருந்தால் ரிஸ்க்கின் அளவு அதிகமாகும். மேலும், உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தும் பிரீமியம் மாறும். 

ஒருவர் தனது வருடாந்திர சம்பளத்தில் 10 அல்லது 15 மடங்கு வரை கவரேஜ் எடுத்துக்கொள்ளலாம். ஓய்வுபெறும் வயது வரை மட்டும் பாலிசி காலத்தை வைத்துக்கொள்ளவும். 

டேர்ம் இன்ஷூரன்ஸுடன் கூடுதல் கவரேஜ் பெறும் வழிமுறையும் உள்ளது. அதற்கான வசதிகளை `ரைடர்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. விபத்து, நோய் போன்றவற்றுக்கு காப்பீடு தனியாக எடுத்தால், அதிக பிரீமியம் செலுத்தவேண்டிவரும். அதுவே டேர்ம் ப்ளானுடன் சேர்த்து ரைடராக எடுத்தால், பிரீமியம் மிகக் குறைவாகவே இருக்கும். 

டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கத் தேவையான ஆவணங்கள். 

1.வருமானத்துக்கான ஆதாரம் (சம்பளச் சான்றிதழ், ஃபார்ம் 16, வருமானவரி தாக்கல் ஆதாரம்) 
2. அடையாள அட்டை மற்றும் முகவரி ஆதாரம் (அரசு அங்கீகாரம் பெற்றது. உதாரணமாக ஆதார் அட்டை) 
3. வயதுச் சான்றிதழ் (பள்ளி மதிப்பெண் சான்றிதழ்) ஆகியவை இருந்தால் போதுமானது. 

ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தால், பாலிசி எடுத்த நபர் எதிர்பாராதவிதமாக இறக்கும்பட்சத்தில், அவரது குடும்பத்தாருக்குக் கிடைக்கும் அந்த ஒரு கோடி ரூபாய் அவர்களுக்குப் பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும். கடன்களிலிருந்து விடுதலை அளிக்கும். புதிய தொழில் முயற்சிகளில் அவர்களால் ஈடுபட முடியும். பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றுக்கு உதவியாக இருக்கும். 

ஆண்டுக்கு 3 முதல் 5 லட்சம் ரூபாய் வருமானம் பெறும் 25 - 30 வயதுடைய ஒருவர், ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தால், ஆண்டு பிரீமியம் 5,000 - 8,000 ரூபாய்க்கும் குறைவாகவே வரும். பிரீமியத்தை ஒரே தவணையிலும் செலுத்தலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close