Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"நான் ஒரு அப்பாவி... அப்பா சிறை சென்ற பின் நிர்கதியாகிவிட்டேன்!" - குர்மீத் மகள் ஹனிப்ரீத்

ஹனிப்ரீத் குர்மீத்

'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைவராக இருந்தவர் குர்மித் ராம் ரஹீம் சிங். இவர் அவரின் ஆசிரமத்தில் இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கடந்த மாதம் 25-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, ஹரியானாவின் சிர்ஸா பகுதியில் வன்முறை வெடித்தது. தொடர் வன்முறை மற்றும் போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஹரியானா போலீஸார் நீதிமன்ற உத்தரவின்பேரில், குர்மித்தின் வளர்ப்பு மகளாக வலம் வந்த ஹனிப்ரீத் என்பவரைக் கைதுசெய்தனர். ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த ஹனிப்ரீத்திடம், பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. 

குர்மித் சிங்கின் வளர்ப்பு மகளான ஹனிப்ரீத்தின் இயற்பெயர் பிரியங்கா. அவர் குர்மித்துக்கு அடுத்தபடியாக, தேரா சச்சா அமைப்பின் முக்கிய முடிவுகளை எடுத்துவந்துள்ளார். தன்னை அவர், 'குர்மித்தின் செல்ல மகள்' என்று வெளிப்படுத்திக் கொண்டார். தன் ட்விட்டர் பக்கத்தில் தன்னை "கொடையாளர், நடிகை, இயக்குநர்" என்றும், தன்னுடைய அப்பா குர்மித் ராம் ரஹீமை இயக்குநரில் இருந்து நடிகராக்க முயற்சி செய்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ஓரிரு திரைப்படங்களிலும் ஹனிப்ரீத் நடித்திருக்கிறார். ஆண் கைதிகளுடன் ஒரு பெண் தங்குவதற்கு சிறை விதிகளில் இடமில்லை. இருந்தும், ஹரியானா சிறைத்துறையினர் ஹனிப்ரீத்தை, குர்மித் கைதான தினத்தன்று அவருடன் தங்குவதற்கு அனுமதித்தனர். சுமார் இரண்டு மணி நேரம் அவர் குர்மித்துடன் விருந்தினர் மாளிகையில் இருந்துள்ளார். குர்மித் கைதான பிறகு, ஹனிப்ரீத்தை கைதுசெய்ய போலீஸார் தீவிரம் காட்டியதை அறிந்த அவர், தலைமறைவானார். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஹனிப்ரீத்தை தேடி வந்த போலீஸார், நேபாளம் வரை சென்றனர். இதற்கிடையில், ஹனிப்ரீத் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்ததைத் தொடர்ந்து, அவர் இருக்கும் இடத்தை அறிந்து, பஞ்சாப் மாநிலத்தில் நேற்று போலீஸார் கைதுசெய்தனர். 

Honeypreet

எனினும், தன்னை போலீஸார் கைதுசெய்யாமல் இருக்க, டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி, ஹனிப்ரீத் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அம்மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஹரியானா உள்பட நான்கு மாநிலங்களில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக, ஹனிப்ரீத்துக்கு எதிராக தேசத் துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்த சம்பவங்களுக்கு முன்பே ஹனிப்ரீத்தின் முன்னாள் கணவர் விஷ்வாஸ் குப்தா ஹனிப்ரீத் மீதும், குர்மித் மீதும் குற்றம்சாட்டி, ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்தார். "அவர்கள் இருவரும் தந்தை, மகள் என்ற உறவில் பழகவில்லை. கணவன்-மனைவி போன்றுதான் பழகி வருகிறார்கள். அவர்களுக்கு இடையே பாலியல் ரீதியான உறவு இருந்தது" என்று குறிப்பிட்டிருந்தார். 

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்து ஹனிப்ரீத் அளித்த பேட்டியில், "விஷ்வாஸ் குப்தா கூறுவதுபோல் எனக்கும், குர்மித்துக்கும் இடையே தவறான உறவு ஏதும் கிடையாது. நான் அப்பாவி. நீதிமன்றம் முன் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு என்மீது குற்றம்சாட்டுகிறார்கள். கலவரம் நடந்த இடத்தில் என்னைப் பார்த்தார்களா? அதற்கான ஆதாரம் ஏதும் இருக்கிறதா? என் தந்தை சிறைக்குச் சென்ற பிறகு நான் நிர்கதியாகி விட்டேன். என் மீதான குற்றச்சாட்டுகள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. என் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சட்ட ரீதியான ஆலோசனைகள் பெற்று வருகிறேன். விரைவில் நீதிமன்றத்தை நாடுவேன்" என்றார். 

அவர் அளித்த இந்தப் பேட்டிக்குப் பிறகு, ஹனிப்ரீத்தையும், அவருடன் இருந்த மற்றொரு பெண்ணையும் போலீஸார் கைதுசெய்தனர்.

சாதாரண அப்பாவி மக்களை கடவுள் நம்பிக்கை என்ற பெயரில், குர்மித் ராம், ஹனிப்ரீத் போன்றவர்கள், தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள். கடவுளின் பெயரால் பாலியல் வன்கொடுமை, வன்முறைச் சம்பவங்களை அரங்கேற்றுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. போலிச் சாமியார்கள் யார் என்பதை அடையாளம் கண்டு, அவர்களிடம் மக்கள் ஏமாறாமல் இருப்பதே, இதுபோன்ற ஆசாமிகளிடம் இருந்து தப்பிக்கும் வழியாகும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close