Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

``வேலைவாய்ப்பு குறைவது இளைஞர்களுக்கும் இந்தியாவுக்கும் நல்லதே!'' - சொல்கிறார் ஒரு மத்திய அமைச்சர்

Chennai: 

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றபோது ``ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்'' என்றார். தற்போது `ஆட்சி அமைத்து மூன்றரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறீர்கள்?' என்று சொந்தக் கட்சியிலிருந்து கேள்வி எழ, பதில் சொல்லமுடியாமல் தடுமாறிவருகிறார் பிரதமர் மோடி. 

வேலை வாய்ப்பு

இந்நிலையில், உலகப் பொருளாதார அமைப்பின் இந்தியாவுக்கான பிரதிநிதிகள் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. அதில், ``வேலைவாய்ப்பு இழப்பு நல்ல விஷயம்'' என்று சொல்லி, எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். அந்தச் சந்திப்பில் ``வேலை இழப்பின் மூலமே இளைஞர்கள் சுயமாகத் தொழில் தொடங்க முன்வருவார்கள்" என்ற மாற்றுக்கருத்தையும் முன்வைத்தார்.

இதில் பேசிய அனைத்துத் தொழில் துறையினரும், வேலை இழப்பு குறித்து கவலை தெரிவித்த வேளையில், கேபினட் அமைச்சர் பியூஷ் கோயல் ``வேலை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவது இந்தியாவுக்கும், இந்திய இளைஞர்களுக்கும் நல்லதுதான். இவர்கள் வேலை தேடுவதற்குப் பதிலாக வேலையை வழங்குபவர்களாக மாறுவார்கள்'' என்று பேசி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார். 

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல், ``கடந்த சில வருடங்களாக இந்தியாவில் உள்ள முதன்மையான 200 நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருக்கிறது. இனிவரும் காலங்களில் இந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தொழில்துறை மந்தமாகி வியாபார நிறுவனங்கள் பாதிப்படைய வாய்ப்பு அதிகம். இந்தப் பாதிப்பு பல பில்லியன்களாகவும் இருக்கலாம். நிறுவனங்கள், சமுதாய நோக்கில் உடனே செயல்பட்டு, வேலை இழப்பைத் தடுக்க வேண்டும்" என்று வேண்டுகோள் வைத்தார். 

வேலை வாய்ப்பு

மிட்டல் பேசிக்கொண்டிருக்கும்போது இடைமறித்த அமைச்சர், ``நாளைய இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலையை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும். இதற்கு வேலை இழப்பு நல்ல அறிகுறிதான். நாட்டுக்கு இளம் தொழில்முனைவோர்கள்தாம்  அதிக அளவில் தேவை. இதை நோக்கித்தான் இந்தியா சென்றுகொண்டிருக்கிறது. இதற்கு தகுந்தாற்போல் உலக அளவில் வேலைவாய்ப்புகளில் மாற்றங்கள் நடக்கின்றன. தற்போது முப்பரிமாணப் பொருள்கள் தயாரிப்பு, ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் போன்ற படைப்பு சார்ந்த விஷயங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்த விஷயங்களில் மக்களுடைய ஈடுபாடு அதிகமாகும்போது நிறைய வாய்ப்புகள் உருவாகும். மக்கள் சொந்த ஐடியாக்களோடு வரும்போதுதான் தன்னிச்சையாகச் செயல்பட முடியும். இன்னும் ஓராண்டுக்குள் ரயில்வே அமைச்சகத்தின் மூலம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பத்து லட்சத்துக்கும் குறைவில்லாத வேலைவாய்ப்புகள் உருவாவதற்கான சூழ்நிலை உருவாகிவருகிறது" என்றார் அமைச்சர் பியூஷ் கோயல். 

இந்தக் கூட்டத்தில் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அஜய் பங்கா ``இந்தியாவில் வேலைவாய்ப்பு என்பது பிரதானமான இடத்தில் இருக்கிறது. இதன் மூலமே இந்தியாவின் வளர்ச்சியைப் பார்க்க முடியும். இந்திய நிறுவனங்கள், வேலைவாய்ப்புக்கான உருவாக்கம் குறித்து அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டும்" என்று வேண்டுகோள் வைத்தார். 

பாரதி மிட்டல் ``சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வங்கியில் கடன் பெறுவதற்கே போராடவேண்டிய சூழலில்தான் இருக்கின்றன. இந்த நிலையில், பெரிய நிறுவனங்களும் சிறந்த நிலையில் வளர்ச்சி நோக்கிச் செயல்படவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளாக வியாபாரம் சரியில்லை. இந்த நிலையில் ஏழ்மைக்கும் பணக்கார நிலைக்கும் உள்ள இடைவெளி மட்டுமே அதிகரித்திருக்கிறது. செல்வம், சமூகத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியாகச் சென்றடையவில்லை. அரசியல் அழுத்தங்களும் அதிகரித்திருக்கின்றன" என்றார்.

வேலைவாய்ப்பு குறைந்து வரும் தகவலை எப்படியெல்லாம் சொல்லிச் சமாளிக்கவேண்டியிருக்கிறது என்பதை, மத்திய அமைச்சரிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close