Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லாரி ஸ்ட்ரைக்கால் காய்கறி விலை உயர்வா? உண்மை நிலவரம் என்ன?

லாரிகள்

நாடுமுழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருவதால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. 

அகில இந்திய மோட்டார் போக்குவரத்துச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி ஜி.எஸ்.டி வரி விதிப்பு, டீசல் விலை உயர்வு,சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்க்கக்கோரி 9 ஆம் தேதி அதிகாலை 6 மணி முதல் இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டனர். லாரிகள் ஓட ஆரம்பித்தாலும்கூட வேலை நிறுத்தத்தின் பாதிப்பு தொடரும் என்று சொல்லப்படுகிறது.

லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டத்தால், கோடிக்கணக்கிலான ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. மணல், ஜல்லி, சிமென்ட், பால், மஞ்சள், பட்டாசு, ஆடைகள் உள்ளிட்ட பொருள்கள் தேக்கமடைந்துள்ளன. தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் யுவராஜ் இதுகுறித்துப் பேசியபோது, "இந்தியா முழுவதும் 83 லட்சம் லாரிகள் ஓடவில்லை. தமிழகத்தில் மட்டும் 45 லட்சம் லாரிகள் இயக்கப்படவில்லை. 55 ஆயிரம் மணல் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அதேபோன்று காய்கறிகள் ஏற்றி வரும் லாரிகளில் 5 சதவிகித லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லக்கூடிய 1 லட்சத்து 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இரண்டு நாள்களாக வேலை நிறுத்தம் நடைபெற்றும்கூட மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அக்டோபர் மாதத்துக்குள் மத்திய அரசு எங்களுடைய கோரிக்கையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றால், மாத இறுதியில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவிப்போம்" என்றார்.

இது குறித்து காய்கனி வியாபாரிகள் நலச்சங்கத்தின் துணைத் தலைவர் சுகுமாரிடம் பேசியபோது, "லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால், காய்கறிகளின் விலை உயரவில்லை. காய்கறி ஏற்றி வரும் லாரிகள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே, காய்கறி விலை ஏற்றத்துக்கு வேலை நிறுத்தப் போராட்டம்தான் காரணம் என்று சொல்ல முடியாது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என மூன்று மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள் வருகின்றன. ஒரு நாளைக்கு 300 -லிருந்து 400 லாரிகள் வரை வரும். ஆனால், தற்போது மழைகாரணமாக காய்கறிகள் வரத்துக் குறைந்துள்ளது. 

லாரிகள்

தீபாவளிக்குப் பிறகு காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கும். சில பகுதிகளில் காய்கறிகள் விளைச்சல் முடியும் நிலையில் உள்ளது. சில பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்கறிகள் அழிவும் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணங்களால்தாம் காய்கறி வரத்து பெருமளவில் குறைந்துவிட்டது. கடந்த ஒரு வாரமாக மார்க்கெட்டுக்கு வர வேண்டிய காய்கறிகளில் 20  சதவிகிதம் குறைந்து விட்டது. இதனால், பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயர்ந்திருக்கிறது. எனினும், லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டால், காய்கறி விலை அதிக அளவு உயரக்கூடும். இதனால், பண்டிகை நாள்களில் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடையக் கூடும்" என்றார்.

லாரிகள் வேலை நிறுத்தம் முடிவடைந்த நிலையில் கூடுதல் லாரிகளில் காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்குக் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பண்டிகை காலத்தில் தேவைகள் அதிகமாக இருப்பதால், இப்போது இருக்கும் விலையிலிருந்து காய்கறி விலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றே சொல்கின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close