Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

89 வயது... 60 ஆண்டுகள்... கட்டுமானத் துறையில் கலக்கும் கான்கிரீட் மேஸ்திரி கேத்ரீனா!

ட்டடம் கட்டும் பணியில் பெரும்பாலும் ஆண்களே மேஸ்திரிகளாக இருப்பர். இவர்களின் அதிகாரத்துக்குட்பட்டு, சித்தாள் பணியில் பெண்கள் ஈடுபடுவார்கள். குழைத்து வைத்திருக்கும் மண், சிமென்ட் கலவையை சட்டியில் சுமந்து சென்று கான்கிரீட் அமைப்பாளர்களிடம்  கொடுக்கும் பணியை, சித்தாள்கள் செய்வார்கள். நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் வரை ஊதியம் கிடைக்கும் இந்தத் தொழிலிலும், ஆண்களுக்குத்தான் அதிக சம்பளம். `கட்டடம் கட்டுவதில், பெண்களின் பங்கு இவ்வளவுதான்!' என இவ்வளவு காலம் நினைத்துக்கொண்டிருந்தோம். 

கான்கிரீட்

கட்டுமானத் துறையில் 60 ஆண்டுகளாக கான்கிரீட் அமைப்பாளராக முத்திரை பதித்துள்ளார் கேரளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர். கான்கிரீட் பணியில் ஆண்களுக்குக் கொஞ்சமும் சளைத்தவர் அல்ல என நிரூபித்து வருகிறார் திருச்சூரைச் சேர்ந்த 89 வயது கேத்ரீனா. இவரும் எல்லா பெண்களைப்போல சித்தாளாகத்தான் கட்டுமானத் துறைக்குள் நுழைந்தார். கான்கிரீட் கலவையை உருவாக்குவதில் கேத்ரீனாவிடம் ஒருவிதமான திறமை ஒளிந்திருக்கிறது. அதை அடையாளம் கண்டுகொண்ட மேஸ்திரி ஒருவர், சித்தாளாக இருந்த கேத்ரீனாவுக்கு கான்கிரீட் கலவை அமைக்கும் பணியை வழங்கினார்.

ஆர்வமும் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம்தானே! தொழில் நுணுக்கங்களைக் கற்றுகொண்ட கேத்ரீனா, திருச்சூர் நகரின் முன்னணி கான்கிரீட் அமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்தார். 89 வயதான இவர், எப்போதுமே ஓய்வெடுக்க நினைத்ததில்லை. கேத்ரீனாவிடம் 30 பேர் பணிபுரிகின்றனர்; இரு கான்கிரீட் கலவை மெஷின்கள், இரண்டு லாரிகள் வைத்திருக்கிறார். கட்டடத்தின் தன்மையைப் பொறுத்து 20 நாள்கள் வரை கான்கிரீட் அமைக்க எடுத்துக்கொள்கிறார்.  இந்த வயதிலும் காலணி அணிந்துகொண்டு கையில் மண்வெட்டியுடன் கலவை அமைக்கும் பணியை மின்னல் வேகத்தில் செய்கிறார். அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடுகிறார். பளபளவென விடிவதற்குள் மூன்று கப் டீ குடித்துவிடுகிறார். டீ மட்டும்தான் அவருக்கு உற்சாகம் தரும் விஷயம். பளபளவென விடியும் நேரத்தில் பணியைத் தொடங்கிவிடுகிறார். 

திருச்சூர் பரமேகாவு தேசவம் கட்டடம், அமலா மருத்துவமனை, சிட்டி சென்டர், ராகம் தியேட்டர், பூங்குன்னம் மேம்பாலம், சாலக்குடி பாலம், பொன்னானி வசந்தம் தியேட்டர் போன்ற  கட்டடங்களுக்கு கான்கிரீட் அமைத்துக் கொடுத்தது இவர்தான். பில்டர்களிடம் மட்டுமல்ல, கேரள மாநில அரசியல் தலைவர்கள் மத்தியிலும் கேத்ரீனா பாப்புலர்தான். கேரள முன்னாள் முதலமைச்சர் கருணாகரன், கேத்ரீனாவின் பணியைப் பாராட்டி ஐந்து பவுன் தங்கச்சங்கிலியும் ஐந்தாயிரம் ரூபாய் பரிசும் வழங்கி பாராட்டியுள்ளார். கேத்ரீனாவைச் சந்தித்த உம்மன் சாண்டி, `இவ்வளவு வயதாகிவிட்டதே... இனியாவது ஓய்வெடுத்துக்கொள்ளக் கூடாதா?' எனக் கேட்டுவிட்டார். அவரிடம் கண்ணீர்விட்டு அழுத கேத்ரீனா, `எனக்கு, கலவைச் சத்தம் கேட்காவிட்டால் உறக்கம் வராதே ஐயா' என்று வெள்ளந்தியாகப் பதிலளித்தார்.

``60 ஆண்டுகால கான்கிரீட் அமைக்கும் பணியில் என் உழைப்பை யாரும் குறை சொன்னதில்லை. ஒரே ஒருமுறை கான்கிரீட் அமைக்கும் பணியின்போது கீழே விழுந்து கையை உடைத்துக்கொண்டேன். இது ஒன்றுதான் பணி காலத்தில் ஏற்பட்ட கரும்புள்ளியாக நான் நினைக்கிறேன்'' என்கிறார் கேத்ரீனா.

கேத்ரீனா தனக்கும் தன் குழந்தைகளுக்கும் நான்கு வீடுகள் கட்டியுள்ளார். எல்லாமே அவரின் உழைப்பால் கட்டியவை. கணவர் ஜோசப், 20 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். கேத்ரீனாவின் பேரன் சஞ்சுவின் திருமணத்தில், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஐ.எம்.விஜயன் பங்கேற்றிருக்கிறார். அப்போது விஜயன்,  சஞ்சுவிடம் `இப்படி ஒரு பாட்டி கிடைக்க, நீ கொடுத்துவைத்திருக்க வேண்டும்' என்று சொன்னாராம்.

உழைக்கும் பெண்களுக்கு முன்மாதிரி இந்த கேத்ரீனா!

Photo Courtesy: Mathrubhumi

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close