Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மராட்டியர்கள் அல்லாதவர்களின் ஆட்டோக்களை எரித்து விடுங்கள்' - ராஜ் தாக்கரே 'பகீர்'!

மும்பையில் மராட்டியர்கள் அல்லாதவர்கள்,  புதிய பதிவு எண்ணுடன் ஆட்டோ ஓட்டினால் அதனை எரித்து விடுமாறு  நவநிர்மான் சேனாத் தலைவர் ராஜ் தாக்கரே,  கட்சிக் கூட்டத்தில் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

நவநிர்மான் சேனா கட்சிக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் ராஜ் தாக்கரே,'' பாரதிய ஜனதா அரசின் செயல்பாடு காரணமாக மும்பையில் அயல்மாநிலத்தை சேர்ந்த  70 சதவீதம் பேருக்கு புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது. பெர்மிட் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது. மும்பையில் புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ள ஆட்டோக்களை மராட்டியர்களை தவிர வேறு ஒருவர் ஓட்டினால், உடனடியாக அதனை எரித்து விடுங்கள்.

முந்தைய காங்கிரஸ் அரசு போலவே தற்போதைய பாரதிய ஜனதா அரசும் மராட்டியர்களுக்கு எதிராக செயல்படுகிறது. சொல்லப் போனால் முந்தைய காங்கிரஸ் ஆட்சி கூட பரவாயில்லை.  மராட்டிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த அரசால் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.  தற்போது புதியதாக 70 ஆயிரம் ஆட்டோக்களுக்கு அரசு பெர்மிட் வழங்கியுள்ளது.

புதிய பதிவு எண்ணுடன் மராட்டியர்கள் அல்லாதவர்கள் ஓட்டும் ஆட்டோவை நீங்கள் பார்த்தால், அதில் இருந்து பயணிகளை இறங்குமாறு கூறி விட்டு, ஆட்டோவுக்கு தீ வைத்து விடுங்கள். பாரதிய ஜனதா ஆட்சி,   பஜாஜ் ஆட்டோ நிர்வாகத்துக்கு சாதகமாக செயல்படுகிறது. புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கியதில் அந்த நிறுவனத்துக்கு 1,190 கோடி ரூபாய் வருமானத்திற்கு வழி செய்துள்ளது. மகராஷ்ட்ர  முதலமைச்சர்  தேவேந்திர பட்னாவிஸ்  இதற்கு சரியான விளக்கமளிக்க வேண்டும்''  என்றார்.

ராஜ்தாக்கரேவின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சி,  'இது பொறுப்பற்ற பேச்சு ' என கண்டனம் தெரிவித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்