Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'வேண்டுமென்றே கடனை திரும்ப செலுத்தாதவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவர்!'

புதுடெல்லி: வங்கிகளில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாத அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறியுள்ளார்.

வங்கிகளில் பெற்ற ரூ.9,000 கோடி கடனை தொழிலதிபர் விஜய் மல்லையா திரும்பிச் செலுத்தாத விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பி உள்ளது. அதேபோல், மேலும் பல தொழிலதிபர்களும், நிறுவனங்களும் பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடனை வேண்டுமென்றே திரும்பிச் செலுத்தாமல் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, ''சில தொழிலதிபர்களும், பெரிய தொழில் நிறுவனங்களும் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளனர். இதன் மூலம் அவர்கள் தெரிந்தே சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிராக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் அனைவரும் நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள். சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, முந்தைய அரசின் கொள்கைத் தோல்வி போன்ற காரணங்களால் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் சிலரும் உள்ளனர். அவர்களை நாம் வேண்டுமென்றே கடனைத் திரும்பச் செலுத்தாதவர்கள் என்ற பட்டியலில் சேர்க்க முடியாது" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்