Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமைச்சர்கள் முதல் எம்எல்ஏக்கள் வரை லஞ்சம்- வீடியோவால் ஆளும்கட்சிக்கு வந்த சோதனை!

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் 2 அமைச்சர்கள் உள்பட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் 11 பேர் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. தேர்தல் நேரத்தில் வெளியாகி உள்ள இந்த வீடியோ காட்சிகள், மேற்கு வங்கத்தையே அதிரச் செய்துள்ளது.

தமிழகம், கேரளாவுடன் சேர்த்து சட்டசபை தேர்தலை சந்திக்கும் 5 மாநிலங்களில் மேற்கு வங்காளமும் அடங்கும். அங்கு, அடுத்த மாதம் 4-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியின் சில எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், மேற்கு வங்கத்தையே அதிரச் செய்துள்ளது.

'நாரதா நியூஸ்' என்கிற இணையத் தளம் நடத்திய அதிரடி ஸ்டிங் ஆபரேசனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை நேற்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டது. அந்த இணையதளத்தின் செய்தியாளர்கள், கடந்த 2 ஆண்டுகளாக ‘ஸ்டிங் ஆபரேஷன்’ என்ற பெயரில் இதை ரகசியமாக படம் பிடித்துள்ளனர்.

அந்த இணையதளத்தின் செய்தியாளர் மாத்யூ சாமுவேல் தலைமையிலான குழு, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுவதாக ‘இம்பெக்ஸ் கன்சல்டன்சி’ என்ற பொய்யான நிறுவனம் ஒன்றை தொடங்கி அந்நிறுவனம் மேற்குவங்கத்தில் தொழில் தொடங்க உதவுமாறு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களையும் சந்தித்து கேட்டுள்ளனர்.

அவர்களில் 11 பேர் போலியான அந்த நிறுவனத்திற்கு உதவுவதற்காக கட்டுக்கட்டாக லஞ்சப் பணத்தைப் பெறும் காட்சிகளை, மாத்யூ சாமுவேல் மற்றும் ஏஞ்சல் ஆப்ரகம் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்கள் ரகசியமாக பதிவு செய்திருக்கின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட இந்த ஸ்டிங் ஆபரேசஷனில் லஞ்சம் வாங்கி சிக்கியவர்களில் சுப்ரதா முகர்ஜி மற்றும் ஃபர்கத் ஹகிம் என்கிற இரண்டு அமைச்சர்களும் அடங்குவர்.


அந்த வீடியோவை வெளியிட்டு மாத்யூ சாமுவேல் கூறும்போது, ''தேர்தல் நேரத்தில் இந்த படங்கள் வெளியிடப்பட்டது தற்செயலான நிகழ்வுதான். எங்களுக்கு பின்னணியில் அரசியல்வாதிகள் யாரும் இல்லை" என்று கூறினார்.

இதற்கிடையே, இந்த வீடியோ காட்சிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கூறும்போது, ''அந்த வீடியோ படங்கள், வெட்டி ஒட்டப்பட்டவை. இதெல்லாம் அவதூறு பிரசாரம். அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்போகிறோம். அப்போது, அந்த படங்கள் எங்கிருந்து வந்தவை? யார் வெட்டி ஒட்டியது என்பதையெல்லாம் அவர்கள் சொல்லியாக வேண்டும்

நாங்கள் ஒளிவுமறைவற்றவர்கள். எங்கள் முதல்வர் மம்தா பானர்ஜி அப்பழுக்கற்றவர். இது மேற்கு வங்காள மக்களுக்கு தெரியும். நாங்கள் தேர்தல் பணியில் மும்முரமாக இருக்கிறோம். எங்களை அரசியல் ரீதியாக தோற்கடிக்க முடியாது என்பதால், எங்கள் அரசியல் எதிரிகள் இத்தகைய மலிவான தந்திரத்தில் ஈடுபடுகிறார்கள்" என்றார்.

அடுத்த மாதம் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இந்த விவகாரம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ