Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போலீசார் குதிரையின் காலை அடித்து உடைத்த பா.ஜ. எம்.எல்.ஏ.! (வீடியோ)

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ. நடத்திய போராட்டத்தில்,  போலீசார் கொண்டு வந்த குதிரையின் காலை பா.ஜ. எம்.எல்.ஏ. லத்தியால் அடித்து உடைத்துள்ளார். இதற்கு விலங்கு ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில்,  ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பா.ஜ.வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டேராடூனில் நேற்று அரசுக்கு எதிராக,  பா.ஜ.க. எம்.எல்.ஏ. முசோரி கணேஷ் ஜோஷி தலைமையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் ஒரு கட்டத்தில் கலவரமாக மாறியது.

இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசாருடன், குதிரைப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அம்மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான கணேஷ் ஜோஷி மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் போலீசாருடன் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டனர்.

அந்த நேரத்தில், கோபத்தின் உச்சிக்கு சென்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ., ஒரு போலீஸ்காரரிடமிருந்த லத்தியை திடீரென பிடுங்கி,  போலீசாரின் குதிரையின் காலை நோக்கி நிறுத்தாமல் தொடர்ந்து அடித்தார். இதில் அந்த குதிரையின் கால் ஒடிந்து ரத்தம் வடிந்தது. இதில் நிலைகுலைந்த அந்த குதிரை, வலி தாங்காமல் ஒடிந்த காலை தூக்கிக் கொண்டு ஓட முடியாமல் கத்திக் கொண்டே அங்கேயே சுருண்டு விழுந்தது.

இதை தொடர்ந்து அங்கிருந்த போலீசார் லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தை கலைத்துள்ளனர். அதன் பின்னர், அந்த குதிரையை போலீசார் சிகிச்சைக்காக விலங்குகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு மருத்துவர்கள் தற்போது அந்த குதிரைக்கு சிகிச்சை அளித்து அதன் உடைபட்ட காலை சரி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வாயில்லா ஜீவன் மீது எம்.எல்.ஏ. நடத்தி இருக்கும் இந்த கொடூரத் தாக்குதல், விலங்குகள் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், பிராணிகள் வதை தடுப்பு சட்டம், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உட்பட 3 பிரிவுகளில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் குதிரை காலை பா.ஜ.க. எம்.எல்.ஏ. அடித்து உடைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், விலங்குகள் நல ஆர்வலர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ