Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதாவின் வங்கிக்கடன் ஆவணங்கள் எங்கே?: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா பெற்ற வங்கிக் கடன்களுக்கான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்பட 4 பேரை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு, தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவாராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா ஆஜராகி, ''தமிழக முதல்வராக ஜெயலலிதா 1991-1996 ம் ஆண்டுகளில் இருந்தபோது 66 கோடி ரூபாய் வரை வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2001-ல் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றபோது இந்த வழக்கை இழுத்தடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அதனால் இந்த வழக்கு 18 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது.

அரசின் சிறப்பு வழக்கறிஞர் பவானிசிங் நீக்கப்பட்டதை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பிலேயே ஒரு வழக்கு தொடரப்பட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ஆஜராக தவறியதற்கு கண்டனம் தெரிவித்து அபராதம் விதித்ததும் நடந்தது.

அதன்பிறகு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது விசாரணை முடிவடைந்துவிட்டது. எழுத்து வடிவில் வாதங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஒரு நாள் அவகாசம் மட்டுமே இருந்த நிலையில் நாங்கள் 50 பக்கங்களில் வாதங்களை தாக்கல் செய்தோம். அதனை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

அத்துடன் வங்கியில் பெற்ற கடனையும் வருமானமாக கர்நாடக உயர் நீதிமன்றம் கருதி, அவரது சொத்துகளை கணக்கிட்ட செயல் தவறானது. அதை கணக்கில் எடுத்திருந்தால் நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் கணிதப்பிழையே வந்திருக்காது" என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "வங்கிகளிடம் இருந்து ஜெயலலிதா பெற்ற கடன் தொகைக்கான ஆவணங்கள் உள்ளனவா?' எனக் கேள்வி எழுப்பினர். மேலும், வங்கிகளின் ஆவணங்கள் இன்றி, இதனை எவ்வாறு கீழ் நீதிபதி குன்ஹா கணக்கில் எடுத்துக் கொண்டார் என்றும் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஆச்சார்யா, "பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இந்த ஆவணங்கள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது' என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "வெறும் சாட்சியங்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் எவ்வாறு ஆவணங்களின் விவரங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டது. எந்த தேதியில் எவ்வளவு தொகையினை ஜெயலலிதா கடனாக பெற்றார்,  யார் அனுமதி வழங்கியது என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை தயாரித்து கர்நாடக அரசு தரப்பு உச்ச நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த வழக்கினை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடியும்.  இல்லையெனில் சிரமம் ஏற்படும்" என்று  குறிப்பிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ