Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு பெருமளவு குறைத்து காட்டப்பட்டது: ஆச்சாரியா கடும் வாதம்!

புதுடெல்லி: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்ற போது, ஜெயலலிதாவின் சொத்துக்கள் பெருமளவு குறைத்துக் காட்டப்பட்டதாக, கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சாரியா உச்ச நீதிமன்றத்தில் இன்று வாதிட்டார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது.
 ந்த வழக்கில், இறுதி விசாரணை கடந்த பிப்ரவரி 23–ம் தேதியன்று தொடங்கியது. கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தனது வாதத்தை கடந்த வெள்ளிக்கிழமையன்று நிறைவு செய்தார்.

6–வது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணையில், லெக்ஸ் பிராபர்ட்டீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களுக்கு எதிரான மனுவின் மீது கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தனது வாதத்தை மீண்டும் தொடர்ந்தார். அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல்வேறு வங்கிகளில் இருந்து பல்வேறு கட்டங்களில் பெற்ற கடன் தொகைகள், அவற்றை திருப்பிக் கட்டிய விபரங்கள், நிலுவைத் தொகை ஆகியவை அடங்கிய 10 பக்க பட்டியலையும், ஜெயலலிதா வங்கிகளிடம் இருந்து பெற்ற கடன்கள் குறித்த 10 பக்க அட்டவணையையும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதன் பின் தனது வாதத்தை தொடங்கி ஆச்சாரியா, ''பல்வேறு வங்கிகளிடம் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெற்ற தொகை 18 கோடி ரூபாயை உயர் நீதிமன்றம் அவர்களது வருமானமாக கணக்கு காட்டியுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. தனி நீதிமன்றம் இந்த கடனை வருமானமாக கணக்கிட முடியாது என்று கூறியும் அந்த கடன்களை மொத்தமாக 24 கோடியாக கணக்கிட்டதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?

இந்த வங்கி கடன்களை பெற்றது குறித்து விளக்கம் அளிக்க குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தேவையான வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர்களால் அதனை சரிவர நிரூபிக்க முடியவில்லை. கடந்த 1992 பிப்ரவரி 24–ம் தேதியன்று ஜெயலலிதாவின் 44–வது பிறந்த நாளை முன்னிட்டு தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த பரிசு பொருட்கள் மற்றும் காசோலைகள் மூலம் அவருக்கு 2 கோடியே 15 லட்ச ரூபாய் வழங்கப்பட்டதாக அவரே ஒப்புக் கொண்டு இருக்கிறார். ஆனால் கர்நாடக உயர் நீதிமன்றமோ இந்த பரிசுப் பொருட்களின் மதிப்பை வெறும் 1 கோடியே 50 லட்ச ரூபாயாக கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது. இதுவே மிகப்பெரிய முரணாக உள்ளது.

பரிசுப் பொருட்களை சட்டரீதியான வருமானக் கணக்கில் சேர்க்க முடியாது என்று கீழ் நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. பரிசுப் பொருட்களை வருமானமாக கணக்கு காட்ட முடியாது. மேலும், முதல்வர் போன்ற பொதுப்பணியில் இருக்கும் ஒருவர் தனக்கு அளிக்கப்படும் பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்பது தான் விதிமுறையாக இருக்கிறது. ஜெயலலிதா அவ்வாறு செய்யவில்லை. இது விதிமுறைகளுக்கு முரணான செயல்பாடாகும்.

மேலும், தனி நீதிமன்றத்தில் 1998–ம் ஆண்டில் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர்தான் வருமான வரி கணக்கில் பரிசுப் பொருட்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்தது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான பரிசுப் பொருட்கள் மீதான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் நமது எம்.ஜிஆர் நாளேடு நிறுவனங்கள் மூலம் பெற்றதாக கூறப்படும் வருமானம் ரூ.14 கோடி, முறைகேடான வருமானமாகும்.

காரணம் வருமான வரி தாக்கல் செய்தபோது ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் மூலம் கிடைத்ததாக 1 கோடியே 15 லட்சம் ரூபாயை குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் உயர் நீதிமன்ற நீதிபதி அதனை 3.85 கோடி ரூபாய் கூடுதலாக சேர்த்து ரூ.4 கோடியாக மதிப்பிட்டுள்ளார். இது தவறான மதிப்பீடாகும். அதேபோல் 10 கோடி ரூபாய் நமது எம்.ஜி.ஆர் நாளேட்டின் மூலமாக சந்தா தொகையாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அதனை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

ஆனால், சந்தா செலுத்தும் திட்டமே வழக்கு தொடுக்கப்பட்ட பின்னர் தான் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் சந்தா தொகை கட்டியவர்களுக்கு வழங்கப்பட்ட ரசீதுகள் தொலைந்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கூறப்பட்டது. அந்த ரசீதுகளும், அவை வைக்கப்பட்டிருந்த காருடன் தொலைந்து போனதாக கூறப்பட்டுள்ளது. பின்னர் அவை மீண்டும் கிடைத்துவிட்டதாக கூறி சில ஆவணங்களை கொடுத்தனர். ஆனால் அவற்றை தனி நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே, இந்த தொகைகளும் தவறான வகையில் வருமானமாக சேர்த்தது என்பதால் அவற்றை கணக்கில் சேர்க்கக் கூடாது" என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ''வருமான வரி தீர்ப்பாயம் இந்த 14 கோடிக்கான கணக்கை ஏற்கனவே ஏற்றுக்கொண்டு அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. அப்படி இருக்கும்போது எவ்வாறு உங்கள் வாதங்களை ஏற்றுக்கொள்வது? தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக வருமான வரித்துறை மேல்முறையீடு எதுவும் செய்துள்ளதா?" என்று கேள்வி எழுப்பினர். மேலும், அது குறித்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ