Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஓராண்டு ஜெயில்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

புதுடெல்லி: ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

தமிழக சட்டமன்ற  தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம்  கடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. மாநிலம் முழுக்க பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே சோதனை நடத்தி,  உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.இதுவரையில் ரூ.8 கோடி சிக்கியுள்ளது. மேலும் பரிசுப் பொருட்களும் ஆங்காங்கே பிடிபடுவதால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது.  ,

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர்  நசீம் ஜைதி டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  "தமிழக சட்டமன்றத் தேர்தலில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுப்பது பெரிய சவாலாக உள்ளது. பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் வாகன சோதனையில் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பறக்கும் படையினரின் அதிரடி சோதனை காரணமாக பணம் பெரிய அளவில் எடுத்துச் செல்லப்படுவது தடுக்கப்பட்டு இருக்கிறது. என்றாலும் தேர்தல் நெருங்கும் போது அரசியல் கட்சியினர் மாற்று வழிகளில் பணம் பட்டுவாடா செய்வதில் ஈடுபடக்கூடும் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

இதனால் ஆணையம் கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஓட்டுப்போடுவதற்கு பணம் வாங்கியது உறுதி செய்யப்பட்டால் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். இதுகுறித்து பிரசாரம் செய்ய விழிப்புணர்வு குழு அமைக்கப்படும். இந்த குழுவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி ஏஜெண்டுகள், அரசு அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள். வாக்காளர்கள் பணம் பெறுவது உறுதி செய்யப்பட்டால், இந்த தனிக்குழுவினர் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பார்கள்.அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ