Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குதிரை காலை உடைத்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி கைது!

டேராடூன்: குதிரையின் காலை உடைத்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி டேராடூனில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

உத்தரகாண்ட் மாநில அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் டேராடூனில் கடந்த 14–ம் தேதி போராட்டம் நடந்தது. அப்போது, பாதுகாப்புக்கு வந்த குதிரை போலீஸ்படையை சேர்ந்த ‘சக்திமான்’ என்ற குதிரையின் பின்னங்காலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி தடியால் அடித்தார். இதில் அந்த குதிரையின் கால் உடைந்து கீழே விழுந்தது.

இது சம்மந்தமான படங்களும், வீடியோ காட்சிகளும் வெளியானதும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் கண்டனங்கள் தெரிவிக்க, விலங்குகள் ஆர்வலர்கள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். இதேபோல் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வை வசைப்பாடிய சமூக வலைதள பயனாளர்கள், பா.ஜ.க. தலைமை கணேஷ் ஜோஷி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்

இதுதொடர்பாக போலீசார் எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், பிரமோத் போரா என்பவர் தான் குதிரையை கீழே தள்ளியவர் என போலீசார் அடையாளம் கண்டு, முஹானி என்ற பகுதியில் அவரை கைது செய்தனர். காயமடைந்த குதிரைக்கு ராணுவ டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும், டேராடூனில் குதிரை சத்திமானுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, தற்போது குதிரையால் நிற்க முடிகிறது என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பா.ஜ.க. எம்.பி. ஹேம மாலினி, ''அப்பாவி விலங்கின் மீது இதுபோன்ற காரியத்தை யாராலும் செய்ய முடியுமா என்று என்னால் நம்ப முடியவில்லை! இதற்கு கண்டனம் தெரிவிக்கின்றேன். குதிரை உயிர் பிழைத்ததற்கு கடவுளுக்கு நன்றி" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குதிரையின் காலை உடைத்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷியை இன்று காலை டேராடூனில் உத்தரகாண்ட் மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ