Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மான்சான்டோவை கிளம்ப சொல்லுங்க'... அமைச்சரிடம் கொந்தளித்த விவசாயிகள்!

புதுடெல்லி: 'பி.டி. பருத்தியை விற்பனை செய்யும் மான்சான்டோ கம்பெனியை இந்தியாவிலிருந்து கிளம்ப சொல்லுங்கள்' என்று மத்திய விவசாயிகள் நலவாழ்வு துறை அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லியில் நேற்று (17-ம் தேதி) விவசாயிகள் போராட்டம் நடந்தது. அப்போது, மத்திய விவசாயிகள் நலவாழ்வுத்துறை அமைச்சரிடம், போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தூரன் நம்பி பேசியபோது, "நேற்று 15 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நாடெங்கிலும் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். இதையடுத்து, மத்திய விவசாயிகள் நலவாழ்வுத் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் அழைத்து பேசினார்.

அப்போது அவரிடம் முன்வைத்த கோரிக்கைகள்...

* விவசாயிகளின் தற்கொலையை தடுக்க அதிகளவு நிதியை ஒதுக்க வேண்டும். தற்போது வழங்கப்பட்டு வரும் நிதி போதுமானதாக இல்லை.

* எந்த பயிர்கள் என்றாலும் உற்பத்தி செலவோடு 50 சதவிகிதம் கூடுதலாக வைத்து விலையை நிர்யணம் செய்ய வேண்டும். அப்போதுதான் விவசாயிகளுக்கும் உரிய விலை கிடைக்கும்.

* கெயில் குழாய் பதிப்புகளை விளைநிலங்கள் வழியாக இல்லாமல், நெடுஞ்சாலை ஓரங்களில் குழாய் பதித்து கொண்டு செல்ல மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* இந்த வருடம் பி.டி. பருத்தியை பயிர் செய்த விவசாயிகளுக்கு பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இன்னொன்று பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள்தான் பெரியளவில் தற்கொலை செய்து வருகின்றனர். இந்நிலையில் 'மான்சான்டோ நிறுவனம், ராயல்டி வழங்கவில்லையென்றால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்' என்று எச்சரிக்கை செய்கிறது. இதை காரணமாக வைத்தே அவர்களை கிளம்பச் சொல்லுங்கள்.

* கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு கடன் உள்ளிட்ட விஷயங்களில் சலுகை அளிக்க வேண்டும்.

* தமிழ்நாட்டில் பாலன் என்ற விவசாயியின் டிராக்டரை ஜப்தி செய்யும்போது, போலீஸார் அடித்து துன்புறுத்தியுள்ளார்கள். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு, பொதுவான ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

இரண்டு மணி நேரம் பொறுமையாக விவசாய பிரதிநிதிகளின் கோரிக்கையை கேட்ட அமைச்சர், "இதுகுறித்து என்னால் மட்டும் எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துவிட முடியாது. சுற்றுச்சூழல், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளோடு கலந்து பேசிவிட்டு முடிவை அறிவிக்கிறேன். முடிந்தால் ஒரு கமிட்டி அமைத்து, விரிவாக ஆய்வு செய்து செயல்படுத்துகிறேன்" என்றார்.

-த.ஜெயகுமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ