Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஐ.ஐ.டி, என்.ஐ.டி கட்டணத்தை மும்மடங்கு உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும்'!

சென்னை: ஐ.ஐ.டி.,என்.ஐ.டி. கல்விக் கட்டணத்தை மும்மடங்கு உயர்த்தும் திட்டத்தை முழுமையாகக் கைவிடவேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் (ஐ.ஐ.டி) ஆண்டு கல்வி கட்டணத்தை 90,000 ரூபாயிலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த ஐ.ஐ.டி துணைக் குழு பரிந்துரைத்துள்ளது. அதேபோல், தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் (என்.ஐ.டி) கட்டணத்தை 70,000 ரூபாயிலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இது ஏற்கத்தக்கதல்ல.

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் என போற்றப்படுபவை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் தான். தொழில்நுட்பக் கல்வி பயிலத் துடிக்கும் மாணவ, மாணவியரின் கனவு இந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து விட வேண்டும் என்பது தான். இதற்காக 2 கட்ட நுழைவுத் தேர்வுகளை எழுதித் தான் ஐ.ஐ.டி.க்களில் சேர முடிகிறது. நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் 12 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றாலும், பத்தாயிரத்துக்கும் குறைவான மாணவர்களால் மட்டுமே ஐ.ஐ.டிக்களில் நுழைய முடிகிறது. உதாரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மாநில பாடத்திட்டம், மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ)  உள்ளிட்ட அனைத்து பாடத்திட்டங்களிலும் 12 ஆம் வகுப்புத் தேர்வில் சுமார் 11 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், அவர்களில் ஐ.ஐ.டி.க்களில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 150 மட்டுமே. இவ்வளவு கடுமையான போட்டிகளுக்கு நடுவே ஐ.ஐ.டிக்களில் சேர மாணவர்கள் துடிப்பதற்கு காரணம் அங்கு குறைந்த கட்டணத்தில் அதிக தரமான தொழில்நுட்பக் கல்வியை பெற முடியும் என்பது தான்.

ஆனால், இந்த நோக்கத்தையே சிதைக்கும் வகையில் ஐ.ஐ.டி.க்கள் மற்றும் என்.ஐ.டி.க்களின் கட்டணத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டிருப்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். ஐ.ஐ.டிக்களில் பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் வரை செலவிடப் படுவதாகவும், ஐ.ஐ.டி.க்களுக்கு நிதி சுதந்திரத்தை ஏற்படுத்துவதற்காக மாணவர்களுக்கு செலவிடப் படும் தொகையில் பெரும்பகுதியை அவர்களிடமிருந்தே வசூலிக்கும் நோக்குடன் கட்டண உயர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக ஐ.ஐ.டி. துணைக்குழு தெரிவித்திருக்கிறது. இந்த வாதம் கல்வியாளர்கள் முன்வைக்கும் வாதமாக தெரியவில்லை; கல்வி வணிகர்கள் முன்வைக்கும் வாதமாகவே தோன்றுகிறது.

இராஜஸ்தான் மாநிலம் பிலானியில் உள்ள பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஙிமிஜிஷி, றிவீறீணீஸீவீ) ஐ.ஐ.டிக்கு இணையான தனியார் கல்வி நிறுவனம் ஆகும். இங்கு ஆண்டுக்கு கல்விக் கட்டணமாக ரூ.3.10 லட்சம் வசூலிக்கப்படுகிறது. மும்பையில் உள்ள வீர்மாதா ஜீஜாபாய் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், சர்தார் வல்லபாய் படேல் பொறியியல் கல்லூரி ஆகியவை ஐ.ஐ.டிக்கு இணையான அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகும். இந்த கல்வி நிறுவனங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு ஆண்டு கட்டணமாக முறையே ரூ.2.26 லட்சம், ரூ.2.27 லட்சம் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் பல தனியார் கல்லூரிகளில் சுமார் 4 லட்சத்தில்  ஐ.ஐ.டிக்கு இணையான தொழில்நுட்பக் கல்வி கிடைக்கிறது. அவ்வாறு இருக்கும் போது தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இணையாகவும், அதைவிட அதிகமாகவும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிப்பது ஏற்றுக் கொள்ளவே முடியாததாகும். இது உயர் தொழில்நுட்பக் கல்வியை அரசாங்கமே கடைச் சரக்காக்கி அதிக லாபத்திற்கு விற்பனை செய்வதற்கு சமமானதாகும்.

ஐ.ஐ.டி.க்களின் கல்விக் கட்டணத்தை ஆண்டுக்கு ரூ.3 லட்சமாகவும், என்.ஐ.டி.க்களின் கல்விக் கட்டணத்தை ஆண்டுக்கு ரூ.2 லட்சமாகவும் உயர்த்துவது ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் உயர் தொழில்நுட்பக் கல்வி வாய்ப்புகளையும் பாதிக்கும். அதுமட்டுமின்றி, பல மாதங்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு அடுக்கடுக்காக பல்வேறு கட்ட நுழைவுத் தேர்வுகளை எழுதி ஐ.ஐ.டிக்களிலும், என்.ஐ.டி.க்களிலும் சேருவதற்கு பதிலாக, எந்த நுழைவுத் தேர்வும் எழுதாமல் சற்று அதிக கட்டணம் செலுத்தி தனியார் உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து விடலாம் என்ற சிந்தனையை மாணவர்களிடம் விதைத்து விடும். இது கல்வி தனியார்மயமாகவே வழிவகுக்கும்.

உயர்தொழில்நுட்பக் கல்வியின் சீரழிவுக்கும், தனியார் மயமாக்கலுக்கும் வழிவகுக்கும் ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி. கல்விக்கட்டண உயர்வை மத்திய அரசு ஒரு போதும் ஏற்கக்கூடாது. எனவே, ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி.க்களின் கட்டண உயர்வு குறித்த பரிந்துரைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்கக்கூடாது. அத்துடன் ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி மாணவர் சேர்க்கைக்கான வினாத் தாள்களை தமிழிலும் வழங்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ