Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க கருத்து சுதந்திரம் வழங்கப்படவில்லை: ஜெட்லி

புதுடெல்லி: தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கவும், தேசவிரோத செயல்களில் ஈடுபடவும் கருத்துச் சுதந்திரம் வழங்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.

பா.ஜ.க. தேசிய செயற்குழுக் கூட்டத்துக்குப்பின் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''இப்போது நமது நாட்டுக்கு உறுதியான தலைமை, தேசிய நலன் சார்ந்த கொள்கைகள், சிறந்த நிர்வாகம் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பலனளிக்கக் கூடிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.

சந்தையில் நிலவும் வட்டி விகிதத்துக்கு ஏற்ப சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இவை நடைமுறை அடிப்படையிலானவை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது பொருளாதாரம் மந்தநிலையில் இருந்ததால் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டது. முந்தைய ஆட்சியாளர்களும் இதே வழிமுறையை (வட்டிக் குறைப்பு) கையாண்டுள்ள நிலையில் இப்போது எங்களை ராகுல் காந்தி விமர்சிப்பது முறையல்ல.

வட்டிக் குறைப்பு வழிமுறை நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறதே தவிர, அதை நாங்கள் புதிதாக ஏற்படுத்தவில்லை. வட்டி விகிதங்கள் சந்தையோடு தொடர்புடையவை. கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைந்து கொண்டிருக்கையில், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்கள் அதிகமாகவே இருக்க வேண்டும் என்ற நிலையில் நமது பொருளாதாரம் இல்லை. எனவே பொருளாதாரம் மேலும் வளர்ச்சியடைய வட்டிக் குறைப்பு அவசியமாகும்.

கருத்துச் சுதந்திரமும், தேசியமும் சமஅளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. நமக்குப் பிடித்த விஷயங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும், பிடிக்காத விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் அரசமைப்புச் சட்டம் முழு சுந்திரம் அளித்துள்ளது. அதே நேரத்தில் தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கவும், தேசவிரோத செயல்களில் ஈடுபடவும் கருத்துச் சுதந்திரம் வழங்கப்படவில்லை.

தேசியம் என்பது நமது நம்பிக்கைகள், நாட்டின் அடிப்படை சார்ந்த விஷயம். "பாரத மாதாவுக்கு ஜே' என்ற கோஷம் குறித்து பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா? என்று கேட்கிறீகள். அது விவாதத்துக்குரிய விஷயம் அல்ல, என் பதில் பா.ஜ.க. திடமாக உள்ளது. ஏனெனில், "பாரத மாதாவுக்கு ஜே' என்று கூறுவதில் மக்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இந்த கோஷம் உற்சாகமாக எழுப்பப்பட்டதை நாம் பார்த்தோம்.

அரசியல் ரீதியாக பலவீனமாகிவிட்ட முக்கிய எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தனது மரியாதையைத் தானே குறைத்துக் கொள்கிறது. பீகார், மேற்கு வங்கம், தமிழகம் போன்ற மாநிலத் தேர்தல்களில் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணியில் கடைசியாகப் ஓட்டிக்கொள்ள வேண்டிய நிலையில் காங்கிரஸ் உள்ளது. உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைப்பது குறித்து எங்கள் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. ஜம்மு-காஷ்மீரில் சிறந்த நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் நோக்கம்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ