Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உத்தரகாண்ட் அரசை கவிழ்க்க பா.ஜ.க. சதி செய்கிறதாம்: ராகுல் குற்றச்சாட்டு!

டேராடூன்: உத்தரகாண்ட் அரசை கவிழ்க்க பா.ஜ.க. சதி செய்கிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

70 உறுப்பினர்களை கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, காங்கிரசுக்கு 36 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வுக்கு 28 எம்.எல்.ஏ.க்களும், முற்போக்கு ஜனநாயக முன்னணிக்கு 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். காங்கிரசுக்கு முற்போக்கு ஜனநாயக முன்னணி ஆதரவளித்து வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட் குறித்த வாக்கெடுப்பின்போது காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் பா.ஜ.க. உறுப்பினர்களுடன் இணைந்து அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து இவர்கள் ஆளுநர் கிருஷ்ணகாந்த் பாலை சந்தித்து, மாநில அரசை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை ஏற்காத ஆளுநர், வருகின்ற 28–ம் தேதி சட்டசபையில் முதல்வர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து, சபாநாயகர் கோவிந்த் சிங், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், கட்சி கொறடாவின் கட்டளையை மீறியதற்காக உங்களை சட்டசபை உறுப்பினர் பதவியில் இருந்து ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது? என்று கேட்கப்பட்டு உள்ளது. சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அஜய் பட் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

இதற்கிடையே, உத்தரகாண்ட் மாநில அரசை கவிழ்க்க பா.ஜ.க. சதி செய்வதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கவிழ்க்க மத்திய அரசு குதிரை பேரம், பண பலம், அதிகாரபலம் ஆகியவற்றை பயன்படுத்தும் புதிய பாணியை கையாண்டு வருகிறது. அதுவும் பீகார் தேர்தல் தோல்விக்கு பிறகு இந்த வழிமுறையை பா.ஜ.க. தீவிரமாக பின்பற்றுகிறது.

முதலில் அருணாசல பிரதேசத்தில் இப்படிச் செய்தனர். தற்போது உத்தரகாண்டுக்கு வந்து இருக்கின்றனர். இது மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இது ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். மத்திய அரசின் இத்தகைய ஜனநாயக விரோத போக்கை எதிர்த்து காங்கிரஸ் போராடும்" என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்