Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தலித் இடஒதுக்கீடு ரத்து ஆகாது: பிரதமர் மோடி திட்டவட்டம்!

புதுடெல்லி: தலித் பிரிவினருக்கான இடஒதுக்கீடு ரத்து ஆகாது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

சட்டமேதை அம்பேத்கருக்கு டெல்லி அலிபூர் சாலையில் தேசிய நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி பேசும்போது, ''பா.ஜ.க. ஆட்சி செய்த காலங்களில் தலித்துகள், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டுக்கு ஒருபோதும் எந்த ஆபத்தும் ஏற்பட்டது கிடையாது.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இடஒதுக்கீடு ரத்தாகிவிடும் என்று சிலர் பிரசாரம் செய்தார்கள். அவர் இரண்டு முறை பிரதமராக இருந்தும்கூட இடஒதுக்கீட்டுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அந்தவகையில் நாங்கள் எப்போதெல்லாம் ஆட்சியில் இருக்கிறோமா, அப்போதெல்லாம் தலித் மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீட்டுக்கு எந்தவித ஊறும் நிகழ்ந்ததில்லை.

மத்திய பிரதேசம், குஜராத், மராட்டியம், பஞ்சாப் மற்றும் அரியானா போன்ற மாநிலங்களில் பல ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால் அங்கெல்லாம் தலித் இடஒதுக்கீடு கொள்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆனால் தலித் பிரிவினருக் கான இடஒதுக்கீடு விலக்கிக்கொள்ளப்படும் என தற்போதும் எதிர்க்கட்சியினரால் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. பொய்களை பரப்பி மக்களை குழப்புகின்றனர். இடஒதுக்கீடு என்பது தலித் மற்றும் பின்தங்கிய மக்களின் உரிமை. இதை யாராலும் பறிக்க முடியாது. எனவே தலித் பிரிவினருக்கான இடஒதுக்கீடு கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை..

அம்பேத்கரை தலித்துகளுக்கான இறைதூதர் என்று அழைப்பது அவருக்கு இழைக்கப்படும் அநீதியாகும். விளிம்புநிலை மக்கள் அனைவரின் குரலாகவும் ஒலித்தவர் அவர்தான். அம்பேத்கர் ஒரு சர்வதேசத் தலைவர். அவரை நாம் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் சுருக்கிவிடக் கூடாது. சமூக உரிமைகளுக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்கை இந்த உலகம் எப்படிப் பார்க்கிறதோ, அதைப் போலவே அம்பேத்கரும் கவனிக்கப்பட வேண்டும்.

சிலருக்கு (காங்கிரஸ்) தோல்வியை தாங்கிக் கொள்ள இயலவில்லை. அதனால், எங்களை பிடிக்கவில்லை. எங்களை பார்ப்பதைகூட அவர்கள் விரும்பவில்லை. எங்களை பார்க்கும்போது அவர்களுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. அந்தக் காய்ச்சல் காரணமாக மனக் கட்டுப்பாட்டை அவர்கள் இழந்துவிடுகின்றனர். அதனால்தான், அனைத்து நேரங்களிலும் பொய்யை மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றனர்.

நாட்டை 60 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் செய்யாத ஒன்றை நாங்கள் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதாவது, அம்பேத்கருக்கு நினைவிடம் அமைப்பதற்காக நாங்கள் பெருமையடைகிறோம். ஜவஹர்லால் நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர், அதிலிருந்து விலகியது ஏன்? சொத்து போன்றவற்றில் பெண்களுக்கான உரிமை குறித்த பிரச்னை எழுந்தபோது, பெண்களுக்கும் சம உரிமை வழங்க வலியுறுத்தியே அமைச்சரவையில் இருந்து விலகினார்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்