Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் மீண்டும் பதற்றம்: துணைவேந்தர் வீட்டை நொறுக்கிய மாணவர்கள்!

ஹைதராபாத்: ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பா ராவ் வீட்டுக்குள் புகுந்த பல்கலைக்கழக மாணவர்கள், அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனால் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. மாணவர் ரோஹித் வேமூலா உள்பட 5 மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களுக்கும் ஏ.பி.வி.பி. மாணவர் இயக்கத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து வேமூலா உள்ளிட்ட 5 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களது உதவித்தொகையும் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, விரக்தியடைந்த வேமூலா கடந்த ஜனவரி 17-ம் தேதி பல்கலைக்கழக விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வேமூலா விவகாரத்தை கையில் எடுக்க, இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்து நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்ம்ரிதி இரானி ஆகியோரின் தூண்டுதலின் பேரில் துணைவேந்தர் அப்பா ராவ், வேமூலா மீது கடும் நடவடிக்கை எடுத்தார். எனவே அவரது தற்கொலைக்கு இந்த மூவரும்தான் முக்கியக் காரணம் என்று மாணவர்கள் குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஜனவரி 26-ம் தேதி முதல் துணைவேந்தர் அப்பா ராவ் விடுப்பில் சென்றார்.

இந்நிலையில், நீண்ட விடுப்பில் சென்றிருந்த அப்பா ராவ் நேற்று மீண்டும் பொறுப்பேற்றார். இது தொடர்பாக, பத்திரிகையாளர்களை அவர் சந்திக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஹைதராபாதில் துணைவேந்தர் அப்பா ராவுக்கு பல்கலைக்கழகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள வீட்டுக்கு முன் செவ்வாய்க்கிழமை குவிந்த மாணவர்களின் ஒரு பிரிவினர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து வீட்டின் கதவு, ஜன்னல்களை அடித்து நொறுக்கிய சில மாணவர்கள், வீட்டுக்குள்ளும் புகுந்தனர். அங்கிருந்த டி.வி., கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருள்களையும் கீழே போட்டு உடைத்தனர். இதை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார், வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை விரட்டியடித்தனர். அப்போது, ஏற்பட்ட மோதலில் 4 போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த போராட்டத்தின்போது, துணைவேந்தர் மீது கடுமையாக குற்றம்சாட்டிப் பேசிய மாணவர்கள், "ரோஹித் வேமூலாவின் சாவுக்கு முக்கியக் காரணமாக இருந்த துணைவேந்தர் மீண்டும் பல்கலைக்கழகத்துக்கு வரக் கூடாது என்பதுதான் எங்களது முதன்மையான கோரிக்கை. வேமூலாவை நாங்கள் இழந்துவிட்டோம். அதற்குக் காரணமானவர்களில் முக்கியமானவர் துணைவேந்தர். சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் துணைவேந்தர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று கொதித்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்திலும் பதற்றம் ஏற்பட்டது. துணைவேந்தர் அலுவலக அறை உள்ள பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ