Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காஷ்மீரின் முதல் பெண் முதல்வராகிறார் மெஹபூபா முஃப்தி!

ஜம்மு: மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பி.டி.பி.) தலைவரான மெஹபூபா முஃப்தி, ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவை பி.டி.பி. கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அம்மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக அவர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார். அதற்காக, பா.ஜ.க. தலைவருடன் இன்று கவர்னரை சந்திக்க உள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில், முஃப்தி முகமது சயீத் தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. முதல்வராக இருந்த முஃப்தி முகமது சயீத், கடந்த ஜனவரி மாதம் 7–ம் தேதி திடீர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, புதிய அரசு அமைப்பதில் அங்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் பி.டி.பி.-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைப்பதில், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த இழுபறி நிலையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடியை முஃப்தி முகமது சயீத்தின் மகளும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா டெல்லியில் கடந்த் 22–ம் தேதி சந்தித்து பேசினார். காஷ்மீரில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக அவர்கள் விவாதித்தனர். அந்த சந்திப்பு திருப்திகரமாக இருந்ததாக மெகபூபா தெரிவித்தார்.

இந்நிலையில், ஸ்ரீநகரில் குப்கார் சாலையில் உள்ள மெகபூபாவின் இல்லத்தில் நேற்று அக்கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவை பி.டி.பி. கட்சித் தலைவராக மெஹபூபா முஃப்தி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பொறுப்புக்கு மெஹபூபா முஃப்தியின் பெயரை அந்தக் கட்சியின் மூத்த தலைவர் அல்டாஃப் புஹாரி முன்மொழிந்தார்.

மாநில சட்டப்பேரவை பி.டி.பி. கட்சித் தலைவராக தன்னை தேர்ந்தெடுத்ததற்கும், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மாநிலத்தில் அரசியல் தேக்கநிலை நிலவி வந்த சூழலிலும் தனக்கு பக்கபலமாக இருந்த கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோருக்கும் இந்தக் கூட்டத்தில் மெஹபூபா முஃப்தி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இன்று (வெள்ளிக்கிழமை) மெகபூபாவும், மாநில பா.ஜ.க. தலைவர் சத் சர்மாவும் கவர்னர் வோராவை நேரில் சந்தித்து பேசுகின்றனர். அப்போது, புதிய அரசு அமைக்க அழைப்பு விடுக்குமாறு அவர்கள் கேட்டுக்கொள்வார்கள். அதன்பின்னர் அங்கு ஜனாதிபதி ஆட்சி விலக்கிக்கொள்ளப்படும். அதைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் காஷ்மீர் மாநிலத்தின் 13–வது முதல்வராக மெகபூபா பதவி ஏற்பார். காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற சிறப்பை பெறும் மெகபூபா, ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவையின் எம்.எல்.ஏ.வாகவோ, மேலவை உறுப்பினராகவோ (எம்.எல்.சி.) 6 மாதத்துக்குள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ