Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மத்திய அரசை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு விரைவில் முடிவு!

திருப்பூர்: இந்தியாவில் தொழிலாளர்கள் உரிமைகளைப் பறித்து, கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டை சூறையாட வழிவகுக்கும் மத்திய அரசை எதிர்த்து,  நாடு தழுவிய பேரெழுச்சிப் போராட்டம் நடத்த மார்ச் 30-ம் தேதி,  மத்திய தொழிற்சங்கங்களின் சிறப்பு மாநாடு முடிவு செய்யும் என்று சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

சிஐடியு சிறப்புப் பேரவையில் பங்கேற்பதற்காக திருப்பூருக்கு இன்று வந்திருந்த ஏ.கே.பத்மநாபன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“ கடந்த 25 ஆண்டுகளில் நவீன தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவதிலும், தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிப்பதிலும் அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக ஒரே மாதிரியாக செயல்பட்டு வந்தனர்.


கடந்த 22 மாத கால மத்திய அரசு மிகத்தீவிரமாக, நவீன தாராளமயக் கொள்கைகளைத் திணித்து வருகிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக அனைத்து வகையிலும் தொழிலாளர்கள் உரிமைகளைப் பறிக்க தீவிரமாக முயன்று வருகிறது.

இதற்கு எதிராக நாடு முழுவதும் தொழிலாளர்கள் கோபம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், தொழிற்சங்க உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட
12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 11 மத்திய தொழிற்சங்கங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தின. இத்தகைய எதிர்ப்புக்குப் பிறகும் மத்திய அரசு தனது திசைவழியை மாற்றிக் கொள்ளவில்லை. நஷ்டமடைந்த பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பது என்பதைத் தாண்டி, உலகத் தரம் வாய்ந்த, மகாரத்னா, நவரத்னா என்றழைக்கப்படும், லாபமீட்டக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களையும் விற்பது என்ற முக்கியமான கொள்கை முடிவு எடுத்துள்ளனர்.

அதாவது பொதுத்துறை நிறுவனத்தின் சில சதவிகித பங்குகளை விற்பது என்றில்லாமல் மொத்த நிறுவனத்தையும், அதன் மேலாண்மை நிர்வாகத்தையும் கூட கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரை வார்ப்பது என்று முடிவெடுத்துள்ளனர். தொழில் தகராறு சட்டம், தொழிலாளர் நலச் சட்டம் என தொழிலாளர் உரிமைகள் சார்ந்த சட்டங்களிலும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமான திருத்தங்களை மேற்கொள்கின்றனர். கடந்த செப்டம்பர் 2 வேலைநிறுத்தம் நடைபெற்ற பிறகு ஆறு மாத காலம் ஆகியும் அரசின் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அரசு அமல்படுத்தும் நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவுகளை, பாதிப்புகளை எதிர்த்துப் போராடினால் மட்டும் போதாது, அந்த கொள்கைகளையே முற்றாகக் கைவிடச் செய்வதற்கான போராட்டம் தேவை. அந்த வகையில் மத்திய தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளன. 11 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து மார்ச் 30-ம் தேதி சிறப்பு மாநாட்டை நடத்துகின்றோம்.”

இவ்வாறு ஏ.கே.பத்மநாபன் கூறினார்.

- ச.ஜெ.ரவி

எடிட்டர் சாய்ஸ்