Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்: ரிங்கிங் பெல்ஸ் மீது வழக்குப் பதிவு!

வெறும் 251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என அறிவித்திருந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக நிர்வாகி கிரித் சோமையா அளித்த புகாரின் அடிப்படையில், நொய்டாவின் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் மீதும், நிறுவனத்தின் உரிமையாளர் மோஹித் கோயல், தலைவர் அசோக் சத்தா ஆகியோர் மீதும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், தண்டனைச் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சோமையா அளித்த புகாரில், "251 ரூபாய்க்கு கைப்பேசிகளை விற்பது முற்றிலும் சாத்தியமற்றது. இது மக்களை ஏமாற்றும் வேலை. இந்த அறிவிப்பின் மூலம் பல கோடி வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்" எனக் கூறப்பட்டுள்ளது.

வழக்கு குறித்து மோஹித் கோயல்  கூறுகையில், "காவல் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதோடு அவர்கள் கேட்கும் அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படும்" என்றார். மேலும், முன்பே அறிவித்திருந்தது போல, நிச்சயம் ரூ.251-க்கு மலிவு விலை ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள் ஆர்டர் செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.



ஒரு மாதத்திற்கு போடும் இன்டர்நெட் பேக்கை விட குறைந்த விலையில் ஒரு ஸ்மார்ட் போன் கிடைக்கிறது என்று அறிவித்த நாளிலிருந்தே, தொழில்நுட்ப வல்லுநர்கள் தொடங்கி அனைவரும் ஆச்சர்யத்தில் கவனிக்க தொடங்கினர். ஆன்லைனில் பதிவு செய்ய தொடங்கிய முதல் இரண்டு நாட்களில் மட்டும் ஆறு கோடிக்கும் அதிகமான பதிவுகள் வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அறிமுகப்படுத்தியதிலிருந்தே இந்த ப்ரீடம் 251 ஐ சுற்றி ஏகப்பட்டசந்தேகங்களும் சர்ச்சைகளும் வலம் வந்துக் கொண்டேதான் இருக்கின்றன. BIS சான்றிதழ் இல்லாமல் எப்படி தங்கள் போனை விளம்பரப்படுத்தினார்கள் என்பது தொடங்கி, மீடியாவிடம் 'ப்ரீடம் 251 மாடல்' என காட்டிய போன் ‘ஆட்காம்’ என்கிற கம்பெனியின் ஏற்கனவே சந்தையில் இருக்கும் IKon 4 என்ற மாடல் என்பது
வரை சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை.

இதே போல டெமோ போனில் காட்டப்பட்ட ஹோம் ஸ்க்ரீன் ஐகான் ஆப்பிள் போனின் வடிவமைப்பில் இருப்பதாகவும் பலரும் சுட்டிக் காட்டினர். இவை எதையும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் பொருட்படுத்தவில்லை. ஏழை எளிய மக்களுக்கு தங்கள் போன் சென்றடைய வேண்டும் என்பதே குறிக்கோள் என கூறியிருந்தனர். ஆனால் உண்மையில் இந்த போன் சென்றடைய வேண்டிய மக்கள் யாரும் இப்போது இணைய வசதி கூட இல்லாமல் இருக்க, அவர்கள் எவ்வாறு ஆன்லைனில் வந்து ஆர்டர் செய்ய முடியும். கிரெடிட் கார்ட், இன்டர்நெட் வசதிகள் என எதுவுமே இல்லாத ஏழை மக்களை குறி வைத்து விற்கப்படும் ஒரு போன் மாடலை ஆர்டர் செய்யக் கூட இது இரண்டுமே தேவை என்பது முரண். டீலர்கள் மூலம் ஆர்டர் செய்யப்பட செய்திருந்த வசதியிலும் ஏகப்பட்ட குளறுபடிகள் எனக் கூறப்பட்டது.

இத்தனை பிரச்னைகளை தாண்டி, இப்போது போலீஸ் வழக்கையும் எதிர்கொண்டுள்ள ரிங்கிங் பெல்ஸ் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-கோ. இராகவிஜயா
(மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close