Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பீகாரில் நாளை முதல் மதுவிலக்கு... சாத்தியப்படுத்திய நிதிஷ்!

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  மதுவிலக்கினை அமல்படுத்துவோம். மதுவினால்தான் குழந்தைகளின் கல்வியும், எதிர்காலமும் கேள்விக் குறியாகிறது. மதுவினால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்" கடந்த ஆண்டு நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில், நிதிஷ் குமார் அளித்த வாக்குறுதி.

தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி, சொன்னபடி
கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி, தனது அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தினைக் கூட்டி, மதுவிலக்கு தொடர்பான அமைச்சரவை முடிவை வெளியிட்டது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்நாட்டு மதுபானங்களின் விற்பனையும், அடுத்த ஆறு மாதங்களுக்குப் பிறகு இரண்டாம் கட்டமாக உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனையும் தடைசெய்யப்படும் என தெரிவித்தார்.

நிதிஷ் குமார் அறிவித்த தேர்தல் வாக்குறுதிப்படி, நாளை முதல் பீகார் மாநிலத்தில்  மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது. அதாவது முதல்கட்டமாக உள்நாட்டு மதுபானங்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது.  ஒரேகட்டத்தில் மதுவை தடைசெய்யமுடியாது என்பதால், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஆறு மாதங்களுக்கு,  பீகார் மாநிலத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மட்டும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, மாநிலம் முழுக்க பூரண மதுவிலக்கு கொள்கை அமல்படுத்தப்பட்டுவிடும். முன்னதாக இன்று கூடிய பீகார் சட்டமன்றத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், இனி மது அருந்தமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்தியாவில் குஜராத், மணிப்பூர், நாகலாந்து போன்ற மாநிலங்கள் அதிகாரப்பூர்வ மதுவிலக்கு கொள்கை அமலில் உள்ளன. தற்போது இந்த மாநிலங்களின் பட்டியலில், பீகாரும் இடம்பெறுகிறது. இது அனைத்து தரப்பினருமே வரவேற்கக்கூடியதாகும். குறிப்பாக பீகார் மாநிலத்தில் மதுவிலக்கினை அமல்படுத்துவதால் அரசுக்கு, ஆண்டுதோறும் ஐந்தாயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இந்த இழப்பினை எத்தனால் வாகன எரிபொருள் உற்பத்தியில் ஈடுசெய்ய பீகார் அரசு திட்டமிட்டுள்ளது.

நாங்கள் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என நிதிஷ்குமார் வாக்குறுதி அளித்தபோது, இது சாத்தியமே இல்லை எனக் கூறிய எதிர்கட்சியினர் நாளை என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? எப்படியோ பீகார் மாநிலம் மதுவிலக்கு கொள்கையிலும், மாநில மக்கள் நலனிலும் பாஸ் ஆகிவிட்டது.

மதுவிலக்கு தற்போதைக்கு சாத்தியமே இல்லை என கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கும் தமிழக அரசு, பீகார் மாநிலத்தைப் பார்த்தாவது பாடம் கற்கலாம். தமிழகம் மதுவிலக்கில் எப்போது பாஸ் ஆகும்?

- கு.ஆனந்தராஜ்
   

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ