Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவை மிரட்டும் மின்னணு கழிவுகள்!

ரு மாதம் முன் எனக்கு நடந்த அனுபவம் இது.

ஆஃபிஸை சுத்தப்படுத்தும் வேலை. எப்போதோ வாங்கிப் போட்ட 'டாட் மாட்ரிக்ஸ்' பிரிண்டர்கள்,  நிறைய இடத்தை அடைத்துக்கொண்டு, உபயோகத்திலும் இல்லாததால் அவற்றை அகற்ற முடிவு செய்தோம்.

"யாரிடம் எப்போது வாங்கினேன்...?" என்பதை, பழைய ரசீதுகளை எடுத்து பார்த்து கண்டு பிடித்தேன். அதில் இருந்த ஃபோன் நம்பர்கள் உபயோகத்தில் இல்லை. கடை பெயரை வைத்து கூகுள் சர்ச் செய்ததில் கடை என்றோ மூடப்பட்டுவிட்டது தெரிந்தது. இப்போது நாங்கள் வாங்கும் கடையில் கேட்டபோது, “சாரி இந்த மாடல் இப்போது உபயோகத்தில் இல்லை... யாராவது பழைய வியாபாரிகளிடம்தான் கொடுக்க வேண்டும்!” என்றார்கள். இதுபோன்ற அனுபவம் எல்லா வீடுகளிலும் மின் பொருட்கள் வேண்டாம் என்னும்போது நடைபெறுவதுதானே! இதில் சில மாறுதல்களும் உண்டு.

“நீங்கள் எங்களிடம் பொருள் வாங்கினால் உங்கள் பழைய பொருளுக்கு 500  அல்லது 1000 ரூபாய் இப்படி ஏதோ ஒரு தொகை தள்ளுபடி”. இந்தத்தள்ளுபடி வார்த்தை  மயக்கம் கொடுக்கும் ஒன்று. இதில்தான் நாம்  ஏமாறுகிறோம். சரி, இந்தக்கதை இப்போது வேண்டாம். ஆக தள்ளுபடியிலோ அல்லது குப்பை வியாபாரியிடமோ கொடுத்த  பொருட்கள் என்ன ஆகின்றன... எங்கே போகின்றன...?

உபயோகப்படுத்தப்படாமல் தூக்கி எறியப்படும்போது மின் பொருட்கள்  உருவாக்கும் குப்பைகள்தான் e waste எனப்படும் மின்னணு கழிவுகள்.

நம் நாட்டில் இப்படி உருவாகும் குப்பைகள் மட்டும் உத்தேசமாக 25 லட்சம்
டன்னாம். மேலும் இது வருடா வருடம் 4 அல்லது 5% அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக,  நம் நாட்டில் சுமார் 148 பதிவு செய்யப்பட்ட மின்  கழிவு மறு சுழற்சி அலகுகள் உள்ளன. இவை எல்லாம் சேர்ந்து  கையாளக்கூடிய மின் கழிவுகளின் அளவு 4.55 லட்சம் டன் மட்டுமே. மீதி..? இங்கேதான் நம் தலைவலி ஆரம்பமாகிறது. இவை முக்கால்வாசி கடலிலோ,  ஆற்றிலோ , வடிகால்களிலோ அல்லது திடக்கழிவுக் குப்பைகளுடன் சேர்த்தோ  சப்பப்பட்டுவிடுகின்றன. இதனால் நீர் நிலை மற்றும் மண் வளம் மாசுபடுத்தப்பட்டுவிடுகிறது. இந்த மின்சுழற்சி அலகுகளும் கூட,  தங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு மீதமுள்ள கழிவுகளை இப்படித்தான் வீசி எறிகின்றன.

ஃப்ரிஜ், வாஷிங் மெஷின், கைபேசி என நாம் வாங்கும் பொருட்கள் எல்லாம், இப்படி தூக்கி எறியப்படும்போது நூறில் இருபது பங்கு மட்டுமே மறு  சுழற்சிக்கு ஏற்றவையாகின்றன. மீதம் உள்ள எண்பது பர்சன்ட் கழிவுகள்,  நம் வளத்தைக்குறைக்கும் மின் கழிவே.

இது தவிர இந்தியாவில் இன்னொரு  பிரச்னையும் உள்ளது. பல நாடுகள், சீனா உட்பட, தத்தம் மின் கழிவுகளை நாட்டை விட்டு  வெளியேற்றிவிடுகின்றன. அவறைக் குறைந்த விலைக்கு நாம் வாங்கி நம்  நாட்டை குப்பையாக்கிக்கொண்டிருக்கிறோம். இதில் இன்னொரு விஷயம்  கவனிக்கப்படவேண்டியது. Make in India  - வை நடைமுறைப்படுத்தினால்  மின்கழிவுகளின் அளவு இன்னும் அதிகமாகும். Foreign direct investment லும் நூறு சதவீதம் திடக்கழிவு மேலாண்மைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. யார் கேட்பது  இந்தக் கேலிக்கூத்தை?

பிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்கள் இறக்குமதி தற்போது முழுவதுமாக மறுக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் உருவாகும் இந்தக்கழிவுகளை மறுசுழற்சிக்கு உபயோகப்படுத்த உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு உபயோகப்பொருட்களான கம்ப்யூட்டர் மற்றும் மின் பொருட்களின் எஞ்சிய பயனீட்டுக் காலத்தை குறிப்பிடாவிட்டால்,  இவற்றை இறக்குமதி செய்யக் கூடிய அனுமதி மறுப்புக்கான நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் அரசு தரப்பில் செய்யப்பட்டு வருகிறது .

இத்தகைய சூழலில் மின்கழிவுகளைக் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்டதுதான் E Waste Managemet rules 2016. இந்த சட்டங்களை அமல்படுத்த வேண்டியது மாநில அரசுகள்தாம்.

இதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்...

1. E waste exchange

இது ஒரு மின்கழிவுக்கான சந்தை. நமக்கு வேண்டாத பழைய பொருட்களைக் கொடுத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகை அளிக்கப்படும். (Scrap rate)

பயன்:   இந்த முறையில் மின்கழிவுகள் ஒரே இடத்திற்கு வந்து சரியான முறையில் அழிக்கப்பட்டுவிடும். நுகர்வோருக்கும் தொகை கிடைப்பதால் இந்த சந்தைக்கு அதிகமாக வரக்கூடும்

2.  Deposit Refund Scheme

இந்தத்திட்டத்தில் விற்பனையாளர்கள்,  விலையில் ஒரு கூடுதல் தொகையை டெபாசிட் தொகையாகப் பெறலாம். ஆயுட்காலம் முடிந்தவுடன் நுகர்வோர்,  பொருளைத் திருப்பிக்கொடுத்தால் அவர்களின் டெபாசிட்  மற்றும் அதற்கு உண்டான வட்டியுடன் திரும்பப்பெறலாம். இவ்வாறு செய்யாத விற்பனையாளர்கள் தண்டிக்கப்படுவர்.

பயன்:  டெபாசிட் தொகையை வட்டியுடன் திரும்பிப்பெற நுகர்வோர் நிச்சயமாக மின் கழிவுகளை தூக்கி எறியாமல் இருப்பார்கள்.

இவற்றைத்தவிர…

நம் சிந்தனை புதுப்பொருட்கள் தயாரிப்பதிலேயே இருக்கிறது. சில  மாதங்களிலேயெ கைப்பேசிகள் தூக்கி எறியப்பட்டு புது மாடல்கள் வாங்கப்படுகின்றன. அதே போல பழையனவற்றை மறு சுழற்சி செய்யும்  முறைகளையும் நாம் யோசிக்க வேண்டும். மின் சுழற்சிக்கான சதவீதத்தை அதிகரிக்கச்செய்ய வேண்டும்.

இன்னொரு விஷயம். கனடாவில் மின் கழிவுகளை குறைந்த விலையில் தங்கமாக மாற்றும் முறையை கண்டு பிடித்துவிட்டதாக சொல்கின்றனர். இது உண்மையானால் நம் ஒவ்வொரு வீட்டிலும் ரச வாசம் மட்டுமின்றி  ரசவாதமும் இணையக்கூடும். நாம் செய்யும் ஒரு தவறு இது. பொருள் வாங்கும்போது,  'பில் போட்டால்  ஆயிரம் ரூபாய் அதிகமாகும்... பில் வேண்டுமா?' என்று கடைக்காரர் கேட்டால்,  பாதி நேரம் நம்
பதில், பில் வேண்டாம் என்பதுதான்!

இதைச்செய்யாதீர்கள். அது உங்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் செய்யும் பெரும் பாவம். டெபாசிட் ஸ்கீம் வந்தால் இந்த நிலை மாறுமா என்று பார்ப்போம்!

மேலை நாடுகளில் வீட்டில் காலாவதியான பல்புகளை, பெட்  பாட்டில்களை மற்ற கழிவுகளுடன் சேர்த்துப்போடுவதில்லை. சில  சூப்பர் மார்க்கெட்டுகளில் இவற்றை ஒழித்துக்கட்டும் இயந்திரங்கள்  வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் இந்த கழிவுகளைப்போடும்போது  அவற்றுக்கான ரீஃபண்ட் ஸ்லிப் கிடைக்கும். அதை வைத்து புதிதாக  வாங்கும்போது எந்தப் பொருளிலும் தள்ளுபடிபெறலாம். இந்த முறையில் குப்பை தொட்டிகளில் போடப்படும் இது போன்ற ஆபத்தான கழிவுகள்  குறையும்.

தற்போதுள்ள  E waste management rules 2016 ல்,  முதல்  முறையாக CFL ( Compact fluorescent Lamp) களில் உள்ள மெர்க்குரியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுப்பதைப்பற்றி பேசப்பட்டிருக்கிறது.

இந்த சட்டத்தின் கீழ், தயாரிப்பாளர், மின் கழிவு சந்தையாளர், பொருள் விற்பவர்..... என்று எல்லோர் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கான சட்ட திட்டங்கள் உள்ளன. விட்டுப்போனது நுகர்வோர் மட்டுமே.  ஆனால் மின் கழிவு கட்டுப்பாடு நுகர்வோர் கைகளில்தான் அதிகம் உள்ளது. இதை உணர்ந்து நாம் செயல்படுவோம்.

- லதா ரகுநாதன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close