Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அசாம், மேற்கு வங்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

கவுகாத்தி: அசாம் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவையொட்டி, அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசானம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு ஏப்ரல் 4-ம் தேதி முதல் மே மாதம் 16-ம் தேதி வரை பலகட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு இன்று (ஏப்ரல் 4-ம் தேதி) மற்றும் ஏப்ரல் 11-ம் தேதி என 2 கட்டங்களாகத் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அவற்றில், முதல்கட்டமாக 65 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தலில், 539 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 496 பேர் ஆண்கள்; 43 பேர் பெண்கள். இந்த தேர்தலில், 95,11,732 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர். அவர்களில் 45,95,712 பேர் பெண்கள். முதல்கட்டத் தேர்தலையொட்டி 12,190 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று நடைபெறும் முதல்கட்ட தேர்தலில், 65 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில், அக்கட்சி 54 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான அசாம் கணபரிஷத் கட்சி 11 தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளன. அசாம் மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அந்த கட்சி சார்பில் தருண் கோகாய் தொடர்ந்து 3 முறையாக முதல்வர் பதவியை அலங்கரித்து வருகிறார். இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று 4–வது முறையாக ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.

பா.ஜ.க.வும் தனது கணக்கை தொடங்க கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவாலை முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது. பிரதமர் மோடியும் இங்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டினார். காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணியை தவிர்த்து 3–வது அணியாக அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியும் அம்மாநிலத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

இன்றைய வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில், தருண் கோகாய் (திதாபர் தொகுதி), சர்பானந்தா சோனோவால் (மஜூலி), அசாம் கணபரிஷத் தலைவர் அதுல் போரா (பொகாகட்), முன்னாள் மத்திய அமைச்சர் பபன் சிங் கட்வார் (மோரன்) உள்ளிட்ட முக்கியமான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளும் அடங்கும். இந்த தொகுதிகளில், இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவை அமைதியான முறையில் நடத்துவதற்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மத்திய பாதுகாப்பு படையினர் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

இதேபோல், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரான மம்தா பானர்ஜி, முதல்வராக பதவி வகித்து வருகிறார். அங்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சி வந்த இடதுசாரிகளை வீழ்த்தி கடந்த முறை வெற்றி பெற்ற அவர், இந்த முறையும் தனது ஆட்சியை தக்க வைப்பதற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ்–இடதுசாரி கட்சிகள் ஒரு அணியாகவும், பா.ஜ.க. மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன.

மாநிலத்தில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் வரிந்து கட்டும் நிலையில், மறுபுறம் மக்களவை தேர்தலில் கணிசமான ஓட்டுக்களை பெற்ற நம்பிக்கையில் பா.ஜனதாவும் தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித்ஷா, காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, இடதுசாரிகளின் முன்னணி தலைவர்கள் என முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இங்கு மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக (7 நாட்கள்) தேர்தல் நடக்கிறது. இதில் 18 தொகுதிகளுக்கு முதல் (ஏ) கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இந்த தொகுதிகள் அனைத்தும் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் மிகுந்த பழங்குடியினர் மண்டலமான மேற்கு மிட்னாப்பூர், பங்குரா மற்றும் புருலியா ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவை ஆகும். இந்த தொகுதிகளில் 3 அணிகள் மற்றும் பிற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 133 பேர் களத்தில் உள்ளனர். இதில் 11 பேர் பெண் வேட்பாளர்கள்.

இன்றைய தேர்தலில் 40 லட்சத்து 9 ஆயிரத்து 171 வாக்காளர்கள் ஓட்டளிக்கிறார்கள். இதற்காக 4 ஆயிரத்து 945 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாவோயிஸ்டு ஆதிக்கம் நிறைந்த 13 தொகுதிகளில், காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் தேர்தல் நடத்தப்படுகிறது. எஞ்சிய 5 தொகுதிகளிலும் காலையில் 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை தேர்தல் நடத்தப்படுகிறது.மேலும், மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் மிகுந்த இந்த தொகுதிகளில் அமைதியான வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், மாவோயிஸ்டுகள் செல்வாக்கு மிகுந்த பகுதியாக அறியப்படும் ஜங்கிள்மஹாலில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அப்பகுதியில் அசம்பாவிதச் சம்பவம் எதுவும் நிகழாமல் தடுக்கும் வகையில், கண்காணிப்புப் பணியில் 2 ஹெலிகாப்டர்களையும் தேர்தல் ஆணையம் ஈடுபடுத்தியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ