Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சவுதி அரேபியாவில் இந்திய பணியாட்களுடன் அமர்ந்து சாப்பிட்ட மோடி !

சுற்றுப் பயணத்திற்கு வேறு ஒரு ஒரு பெயர் வைக்க வேண்டும் என்கிற நிலை வந்தால் அதற்கு "மோடி" என்ற வார்த்தை பொருத்தமாக இருக்கும்.  மோடியின் அயல் நாட்டு சுற்றுப் பயணத்தை எதிர்கட்சிகள் பலவாறு விமர்சனம் செய்கின்றனர் 

" நாட்டின் தொழில் வளர்ச்சிக்காகவும், இரு நாடுகளின் உறவு மேம்படவும் அயராது பயணம் செய்து கொண்டே இருக்கிறார்" என்றும், "அட. அவரு சும்மா ஊரு ஊரா ஜாலியா சுத்துறாருப்பா" என்றும் மோடியின் வெளிநாடு பயணம் குறித்து இருவேறு கருத்துக்கள் பேசப்படுகின்றன. ஆனால், நம் பிரதமர் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்பவராக இல்லை. வீடு விட்டால் ஏர்போர்ட் ....ஏர்போர்ட் விட்டால் வீடு என்று சுழன்று கொண்டே இருக்கிறார்.

நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியின் புகைப்படம் டுவிட்டரிலும் ஃபேஸ்-புக்கிலும் ஃபுல் ரவுண்ட்ஸில் உள்ளது. பிரதமர் மோடி, ரியாதில் உள்ள இந்தியப் பணியாட்களுடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பாடு சாப்பிடுவதே அந்தப் படம். தன்னுடைய இரண்டு நாள் சுற்றுப் பயணத்தின் முதல் நாளான நேற்று சவுதி அரேபியாவில் உள்ள ரியாதில் இந்தியப் பணியாட்களைச் சந்தித்து "உங்களுடைய வியர்வையும் உழைப்பும் தான் என்னை இங்குக் கூட்டி வந்திருக்கின்றது. உங்களுடைய சந்தோஷமே என்னுடைய சந்தோஷமும். நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றால் நானும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது" என்று அங்கிருந்த 300 க்கும் மேற்பட்ட "எல் அண்ட் டி" நிறுவன ஊழியர்களிடம் அவர்களது குடியிருப்பிற்கே சென்று பேசியுள்ளார்.

அவர்கள் அனைவரையும் "நரேந்திர மோடி" செயலியை பதிவிறக்கம் செய்யக் கூறி, "எனக்கு எந்த வேலையும் கிடையாது. வேலையெல்லாம் அந்த 125 கோடி மக்கள் செய்வது. இந்த செயலியை தங்கள் செல்-ஃபோன்களில் பதிவிறக்கம் செய்து கொண்டால், நான் உங்கள் சட்டைப் பாக்கெட்டிலேயே இருப்பேன். இதை விட வேறு என்ன வேண்டும்?" என்று நெக்குறுகி பேசியிருக்கிறார்.

17 நிமிடங்கள் நடந்த இந்த உரையாடலில் " உங்களுடைய வியர்வைத் துளிகள் தான் இந்தியாவின் மதிப்பு. வருங்காலத்தில், இந்தியாவில் இருந்த இளைஞர்கள் தான் இந்த மெட்ரோவைக் கட்டி முடித்தார்கள் என்று மக்கள் சொல்வார்கள். உங்கள் குடும்பங்கள் அனுப்பும் கடிதங்களை நான் படிப்பேன். அதில் நல்ல செய்தி இருந்தால் என் மனம் குளிரும். அப்படி கேட்ட செய்தியாக இருந்தால் வாடி விடும். இந்நேரத்தில் சவுதியின் அரசரான சல்மான், ஒவ்வொரு முறை இந்தியாவைப் புகழ்ந்து பேசும் போதும் நான் பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி நடப்பேன். உங்களால் இந்தியாவிற்கு பெருமை சேர்ந்ததோடு, இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்பும் ஏற்படுத்தப் பட்டுள்ளது" என்று வாஞ்சையுடன் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

அதேசமயம் இதை தன் தன் டுவிட்டர் பக்கத்தில் ஏற்றவும் அவர் மறக்கவில்லை. "ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவருடைய எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு, எல் அண்ட் டி குடியிருப்பு, சவுதி அரேபியாவில்" என ட்வீட்டிருக்கிறார் மோடி.

நம்மூரில் ஆளும் கட்சியின், சட்டமன்றத் தேர்தலுக்கான நேர்காணலே "இன்டர்காமில் தான் நடத்தப் படுகிறது. மாநில முதல்வரைப் பார்க்க முடிவதில்லை என மத்திய அமைச்சர் புகார் கூறுகிறார். அப்படியே மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தாலும் அது தேர்தலை எதிர்நோக்கி இவர்கள் தயாராகக் கையாளும் உத்தியாகத்தானே இருக்கிறது. 

இந்நிலையில் தேர்தலை மனதில்கொள்ளாமல் இந்திய பணியாட்களுடன் ஈகோவின்றி அமர்ந்து சாப்பிட்ட மோடியை பாராட்டுகிறார்கள் அந்த ஊழியர்கள். இது போன்ற அரசியல் இயல்பெல்லாம் நம்மூரில் இனி கனவாகவே இருந்து விடுமோ?

- மு.சித்தார்த்

(மாணவப் பத்திரிக்கையாளர்)
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close